நம்மைச் சுற்றி நடக்கும் காரியங்களைக் கண்டு நாம் சும்மா இருந்துவிடலாகாது, சத்தியத்துடன் அதைச் சம்மந்தப்படுத்திப் பார்த்தால், சமையம் நெருங்கிவிட்டது என்ற சத்தம் அவைகளில் ஒலிப்பதையும், இது கடைசிக்காலம் என்பது அந்த ஒலிக்குள் ஒளிந்திருப்பதையும் ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் அறிந்துகொள்ளவேண்டுமே.
'ஆதார்' என்றால் இன்று அறியாதோர் எவருமில்லை. 'ஆதார்' என்றால் ஓர் மனிதனைக் குறித்த ஆதாரம் என்றே நாம் சொல்லிக்கொண்டாலும், 'ஆதார்' என்ற சொல்லின் அடுத்த பக்கமும் நம் அறிவுக்கு அவசியம். ஆபீப் என்னும் மாதத்தில் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தன் ஜனத்தை விடுதலையாக்கிக் கொண்டுவந்தார் கர்த்தர். இதனை, தலைமுறை தலைமுறையாக நினைவுகூறும் வண்ணம், அதனையே வருடத்தின் முதல் மாதமாகவும் குறித்தார்; அதுவே புதுவருடம், 'ஆண்டவரின் ஆணைப்படி, எகிப்திலிருந்து (பாவத்திலிருந்து) விடுதலையாகாதவர்களுக்கு புதுவருடக் கொண்டாட்டத்தில் பங்கு இல்லை என்பது அதன் உள்ளர்த்தம்' ஆபீப் மாதத்தைத் தொடர்ந்தே பிற மாதங்கள் கணக்கிடப்பட்டன. எனினும், இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டுபோகப்பட்டபோது, அவர்களின் வாழ்க்கை முறை பாபிலோனியர்களால் பன்முனைகளில் தாக்கப்பட்டது அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டது. கலாச்சாரம், கல்வி, மொழி, பணி, உறவு, உணவு என அநேக பாபிலோனிய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விஷமாக ஏற்றப்பட்டதுடன், பாபிலோனிய தெய்வங்களையும் வணங்கும்படி வழிநடத்தப்பட்டனர். தானியேலைப் போன்ற சிலர் தங்களைக் தற்காத்துக்கொண்டபோதிலும், தடுக்கிவிழுந்தவர்களின் கூட்டமோ திரளாயிருந்தது. இஸ்ரவேல் மக்கள் ஆசரித்துவந்த 'ஆபீப்' மாதத்தின் பெயரை 'நிசான்' எனப் பெயர் மாற்றினர் பாபிலோனியர்கள், அத்துடன் பன்னிரெண்டு மாதங்களுக்கும் பாபிலோனியப் பெயர்சூட்டினர்; வருடத்தின் கடைசி மாதத்தின் பெயர் 'ஆதார்' என்று சூட்டப்பட்டது.
'ஆதார்' என்ற சொல் ஒவ்வொரு மனிதனின் காதிலும் இந்நாட்களில் விழுந்துகொண்டிருக்கின்றதே. பாபிலோனின் கடைசி மாதச் சத்தம் இன்று நமது காதில் தொனித்துக்கொண்டிருக்கிறதே; அப்படியிருக்க, நோவாவின் காலத்தில் காணப்பட்டவர்களைப் போல அஜாக்கிரதையாய் வாழுவது நியாயமாகுமோ? 'கொஞ்ச காலம் மட்டுமே உண்டு என்கிற அறிவு பிசாசுக்கு உண்டு' (வெளி. 12:12), தனது நாட்காட்டியின் கடைசி மாதத்தை அவன் உச்சரித்துக்கொண்டிருப்பது, எச்சரிக்கவும், ஆண்டவரின் இரண்டாம் வருகையை எதிர்பார்க்க நம்மை ஆயத்தமாக்கவுமே.
ISIS - என்பது உலகையே பயமுறுத்திக்கொண்டிருக்கும் ஓர் சொல், வலிமை மிக்க நாடுகளுக்கும் தலைவலியாக இருக்கும் இத்தீவிரவாத இயக்கத்தினால் தீவிரமாக உயிர்கள் குடிக்கப்படுகின்றன; என்றாலும், இந்த சொல்லின் மறுபக்கம் ஓர் மறைவான செய்தியையே சொல்கிறது. ISIS என்பது பண்டைய எகிப்தியர்கள் வணங்கிவந்த ஓர் தேவதையின் பெயர்; தலையில் மாட்டுக் கொம்புடனும், அதற்கிடையே சூரிய உருவத்துடனும், வல்லூருவின் வடிவத்திலும் சித்தரிக்கப்பட்டுவந்த இந்த தேவதை, அடிமைகளுக்கும், பாவிகளுக்கும் தோழியாகவும், தாயாகவும் வணங்கப்பட்டுவந்ததுடன், ஆடவர்களின் மனைவியாகவும், பாலுறவின் தேவதையாகவும் வணங்கப்பட்டுவந்தது. அத்துடன், HORUS என்ற தெய்வத்தின் தாயாகவும் எகிப்தியரால் கருதப்பட்டது. HORUS என்றால் சிங்காசனம் என்றும், எகிப்திய சிங்காசனத்தில் அமரும் பார்வோன் யாராயிருந்தாலும், அவன் ISIS தேவதையின் மகன் என்றும் எகிப்தியர்களால் சித்தரிக்கப்பட்டுவந்தது. ISIS தேவதையின் மகனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டால் மாத்திரமே பார்வோனாக எகிப்தில் அவன் ஆட்சி செய்ய முடியும். ISIS மற்றும் HORUS ஆகிய இவ்விரு தெய்வங்களும் தாயும், சேயுமாக சித்தரிக்கப்பட்டும், சிலைகளாக வடிக்கப்பட்டும் எகிப்து தேசமெங்கிலும் மக்களால் வணங்கப்பட்டும் வந்தன.
ரோம அரசர்களின் சாம்ராஜ்யத்தின்போது, கிரேக்கர் மற்றும் ரோமர் கலாச்சாரங்கள் கலந்த நாட்களில் இதன் வணக்கம் பாபிலோனிலும் பரவலாக ஊடுருவியது. பாபிலோனியர்களும் தெய்வமாக இதனை வழிபட்டுவந்தனர். பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுசெல்லப்பட்டிருந்த தேவனுடைய ஜனங்களிலும் சிலர் காலப்போக்கில் இத்தேவதையினை வழிபடத் தொடங்கினர். ISIS என்ற வார்த்தையினை உலகம் அதிகம் உச்சரிப்பது, எகிப்தின் ஆதிக்கம் மீண்டும் தேவஜனத்தை நோக்கித் திரும்புவதைச் சுட்டிக்காட்டவே. 'ஆண்பிள்ளைகளானால் கொன்றுபோடுங்கள்' என்று என்று அன்று எகிப்தில் ஆணைபிறந்தது போலவே, இன்றும் ISIS இயத்தினால் ஆண்டவரின் பிள்ளைகள் கொன்றுபோடப்பட்டு, பெண்கள் சீரழிக்கப்படுகின்றார்களே. ISIS என்ற சொல்லின் சத்தம் ISIS தேவதை செய்யும் இக்கடைசிகால யுத்தத்தையே நமக்கு முன்நிறுத்துகிறது. உலகில் பிரபலங்கள் பலர்; ISIS என்பதை தங்கள் பெயராக சூட்டிக்கொள்வதும், இந்தியா உட்பட பல்வேறு தேசங்களில் இத்தேவதையின் கணவனாகக் கருதப்படும் பாகால் வணக்கத்திற்காகக் கூம்பு வடிவ கோபுரங்கள் கட்டப்பட்டிருப்பதும், நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற இடங்களில் இத்தெய்வங்களுக்குக் கோவில்கள் கட்டப்பட ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவருவதும் இறுதிகால எச்சரிப்பின் செய்தியே. அஸ்தரோத், சிம்ராமிஸ், இஸ்தார், ஈஸ்டர் (EASTER) போன்ற பிற பெயர்களுடனும் இத்தேவதை அழைக்கப்படுகிறது. முழு உலகையும் தன்பக்கமாக வளைக்க நினைக்கும் இவ்விரு சொற்களும், உலகின் இறுதியையே சொல்லி எச்சரிக்கிறது என்பதே உண்மையான செய்தி.
Comments
Post a Comment