புதன், 15 ஏப்ரல், 2026
சேர்ந்திருப்பதும், சார்ந்திருப்பதும்
குழு ஊழியம்
செவ்வாய், 14 ஏப்ரல், 2026
ஊழிய அழைப்பைப் பெற்ற நான், அதில் முன்னேறிச் செல்வது எப்படி?
செவ்வாய், 21 மார்ச், 2023
விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?
விவாகம், விவாகரத்து
வேதம் சொல்லுவது என்ன?
- விவாகரத்து செய்யலாமா?
- யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது?
- தள்ளிவிடப்பட்டவரை விவாகம் செய்யலாமா?
- மறுமணம், வேதம் போதிப்பது என்ன?
இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.
தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன் அவன். மனிதர்கள் இணையும்போது 'முப்புரி நூலாக' இடையிலே நின்று அவர்களது உறவின் பிணைப்பினை மேலும் மேலும் பெலப்படுத்துகின்றவர் படைத்தவராகிய யேகோவா தேவன்; ஆனால், சாத்தானோ, அத்தகையப் பிணைப்பினைப் பெலவீனப்படுத்தும்படியாகவும், ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துசெல்லும்படியாகவுமே நித்தம் நித்தம் புதிது புதிதாகக் காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றவன். இருவரது இணைப்பிற்கு இடையிலே வந்து நின்று, 'இரும்பாகிய அவர்களது உறவில் துரும்பாகவும் தூசியாகவும் படிந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த உறவின் மேல் துருவாக உருவமெடுத்து, உறவின் வலிமையையும் மற்றும் கடினத்தன்மையையும் இழக்கச் செய்து அதனை கசப்பாக்கி, கல்லறைக்குச் செல்லும்வரை இருவரது இதயத்தையும் கல்லாக்கிவிடுகின்றான்.' சத்துருவின் இத்தகைய தந்திரத்தை அறியாமல், குடும்ப வாழ்க்கையின் பாதியில் பாதத்தை அவனது பாதையில் வைத்து, ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசத்தைப் பறிகொடுத்துவிட்டவர்களாகப் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கும் கணவனும் மனைவியும், குடும்பங்களும் இன்றைய நாட்களில் ஏராளம் ஏராளம். விவாகரத்து செய்தால், தேவசமுகத்தில் ஒரு மனிதனோடு பண்ணிய உடன்படிக்கை உடைந்துபோய்விடுமே என்ற உணர்வற்றவர்களாக, விவாகரத்து செய்துகொண்டு விடுதலை கிடைத்துவிட்டதைப் போலவும், தன் பக்கத்தில் வெற்றி கிடைத்துவிட்டதைப் போலவும் வாழ்க்கையிலிருந்து விழுந்துபோனவர்களின் சரித்திரங்கள் எத்தனை எத்தனை!
பலுகிப் பெருகும் பாத்திரங்கள்
ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும், பூமியின் மேலுள்ள மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் யாவையும் சிருஷ்டித்த பின்பு, 'நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்' என்று சொன்னதைத் தொடர்ந்து, தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (ஆதி. 1:26,27) என்று வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படியாகவும், பூமியனைத்தையும் ஆளும்படியாகவும் உண்டாக்கப்பட்டவன் மனிதன்; இதை நாம் மறந்துவிடக்கூடாது.
மனிதனைச் சிருஷ்டிக்கவேண்டும் என்ற விருப்பம் தேவனுடைய மனதில் இருந்தபோதே, மனிதனைக் கொண்டே மனித சந்ததியைப் பெருக்கவேண்டும் என்ற விரிவாக்கத்திற்கடுத்த திட்டமும் இருந்தது என்பதையும் மேற்கண்ட வசனங்கள் கூடவே நமக்கு வெளிப்படுத்துகின்றதே. 'மனுஷனை' என்று அவர் சொல்வதைத் தொடர்ந்து 'அவர்கள்' என்றும் 'ஆளக்கடவர்கள்' என்றும்; 'மனுஷனை' 'அவனை' என்று சொல்வதைத் தொடர்ந்து 'ஆணும் பெண்ணுமாக' என்றும் மற்றும் 'அவர்களை' என்றும் சொல்லுவதோடு நிறுத்திவிடாமல், தனது விருப்பத்தையும், திட்டத்தையும், சித்தத்தையும் தான் சிருஷ்டித்த மனுஷனும் அறிந்துகொள்ளவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணதோடு, அவர்களையும் நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்றும் சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி. 1:28) என்று வாசிக்கின்றோமே.
மனிதர்களுக்கான உணவைத் திட்டம் பண்ணுவதிலும்கூட, 'இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது (ஆதி. 1:29) என்று பலுகிப் பெருகுபவைகளைத்தானே புசிக்கும்படியாகக் கூறுகின்றார். மனிதனுடைய சிருஷ்டிப்பினைக் குறித்து மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாக வெளிப்படும் வார்த்தைகளும், 'அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே' (மல். 2:15) என்று, ஒருவனாய்ப் படைக்கப்பட்டிருந்தாலும், 'பலுகிப் பெருகும்படியாகவே படைக்கப்பட்டவன் மனிதன்' என்பதனை உறுதிப்படுத்துகின்றதே. அதுமாத்திரமல்ல, 'மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்' (ஆதி. 2:18) என்ற தேவனது வார்த்தைகள், பலுகிப் பெருகுவதற்கான பாத்திரமாகவே துணையாகிய ஏவாள் உருவாக்கப்படுவதின் உண்மையையும் நமக்கு வெளிப்படுத்துகின்றல்லவா!
மண்ணினால் உருவாக்கப்பட்ட ஆதாமுக்கு மனிதனாக வாழ்க்கை கொடுத்து, அவனது வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் வசிப்பிடத்தையும் அழகிய தோட்டமாக வடிவமைத்துக் கொடுத்து, ஆதாமின் வாழ்க்கையைத் தொடங்கிவைத்தார் ஆண்டவர். 'தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்' (ஆதி. 2:7) என்றும், தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார் (ஆதி. 2:8) என்றும், அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் (ஆதி. 2:15) என்றும் முதல் மனிதனது சிருஷ்டிப்பின் சரித்திரத்தைக் எடுத்துக்கூறுகிறது சத்திய வேதம்.
சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் ஆதாம் பேரிட்டபோதிலும், ஆதாமுக்கு ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை (ஆதி. 2:20) என்பதை ஆண்டவர் கண்டபோதிலும், ஆதாமின் தனிமை ஆண்டவரோடு செலவிடப்பட்டுக்கொண்டிருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனினும், 'மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்' (ஆதி. 2:18) என்கிறார் ஆண்டவர். ஆதாம் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டவன்; ஆனால், ஏவாளைக் குறித்தோ, 'இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி எனப்படுவாள்' (ஆதி. 2:23) என்று கூறுகின்றான் ஆதாம். அப்போஸ்தலனாகிய பவுலும், 'முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்' (1தீமோ. 2:13) என்று தனது நிருபத்தில் சுட்டிக்காட்டுகின்றாரே. ஆதாம் ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்ட பின்னரே, ஏவாள் உருவாக்கப்படுகின்றாள்.
ஏவாள் உருவாக்கப்பட்டதன் காரணத்தை, 'துணை' (ஆதி. 2:18,20) என்றும் 'மனைவி' (ஆதி. 2:24,25) என்றும் இரண்டு வார்த்தைகளில் வேதம் விவரித்துக் கூறுகின்றது. பூமியையும் மற்றும் பூமியிலுள்ளவைகளையும், வானத்தையும் மற்றும் வானத்திலுள்ளவைகளையும் ஆறு நாட்களுக்குள் சிருஷ்டித்து, ஏழாம் நாளிலே தேவன் ஓய்ந்திருந்தார் (ஆதி. 2:2). ஆனால், ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை (ஆதி. 2:19,20) என்றே வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். அப்படியென்றால், ஆதாமும் ஏவாளும் ஒன்றாக உருவாக்கப்படவில்லை என்பதை நாம் உறுதிசெய்துகொள்ளமுடியும்; அவ்வாறே, ஏவாள் சிருஷ்டிக்கப்படும்வரை ஆதாம் தனிமையாகவே இருந்தான் என்பதையும் நாம் அறிந்துகொள்ளமுடியும். ஆதாம் 930 வருஷங்கள் உயிரோடு இருந்தான் (ஆதி. 5:5); ஆனால், ஏவாளின் காலத்தைக் குறித்து வேதம் எதுவும் நமக்கு எடுத்துக்கூறவில்லை. என்றபோதிலும், 'துணை' 'மனைவி' மற்றும் 'மனித சந்ததியின் தொடக்கம்' ஆகிய இம்முப்பெரும் பணிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தவள் ஏவாள் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
மூலைக்லுடன் முறியும் உறவு
அதுமாத்திரமல்ல, 'நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்' என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்ததை (ஆதி. 1:28) அறிந்த சாத்தான், அந்த ஆசீர்வாதத்திற்கு விரோதமாகக் கிரியை செய்யவும் ஆரம்பித்தான். ஆதாமும் ஏவாளும் ஆசீர்வதிக்கப்படுவதைத் தடுக்கவேண்டுமென்றால், ஆசீர்வதிப்பவருக்கும் அவர்களுக்கும் இடையிலிருக்கும் உறவினை முதலில் உடைக்கவேண்டும் என்பதை அறிந்த சாத்தான், புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்ன மரத்தின் கனியைப் பறித்து புசிக்கச் செய்து, ஏவாளின் மூலமாக தனது திட்டத்தினை நிறைவேற்றி முடித்தான்.
நம்முடைய வாழ்க்கையிலும் தேவனுக்கும் நமக்கும் இடையிலுள்ள உறவினையே முதலில் உடைக்க சத்துரு முற்படுகின்றான். ஆலய ஆராதனை, குடும்ப ஜெபம், தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை ஆகியவற்றிற்கு இடையுறாக எழுந்து நிற்கின்றான். சில குடும்பங்களில், குடும்ப ஜெபத்தின்போது, கணவன் அல்லது கணவனும் பிள்ளைகளும் மாத்திரம் காணப்படுவதும், சில குடும்பங்களில் குடும்ப ஜெபத்தில் மனைவி அல்லது மனைவியும் பிள்ளைகளும் மாத்திரம் பங்குபெறுவதும் தேவனுக்கும் குடும்பத்திற்கும் இடையிலான உறவினை சத்துரு உடைக்கும் காரணிகள் என்பதை நாம் கணக்கில் கொள்ளவேண்டியது அவசியம். ஆதாமை விட்டு சற்று தூரத்திலிருக்கும்போதே ஏவாளை ஏய்த்துவிட்ட சாத்தான், குடும்பத்தின் ஆவிக்குரியவைகளுக்கு அடுத்தவைகளில் கவலையற்றவர்களாயிருக்கும் கணவனையோ அல்லது மனைவியையே ஏய்த்துவிடுவது எத்தனை நிச்சயம். தேவனுடனான உறவினை முறித்துப்போட்டுவிட்ட மனிதர்களாலேயே அநேக குடும்பங்களில் கணவன் - மனைவி - பிள்ளைகள் இடையிலான உறவு உதாசீனப்படுத்தப்பட்டு, ஒன்றுமில்லாமற்போய்விட்டது.
ஏவாள் உருவாக்கப்படுவதற்கு முன், ஏதேன் தோட்டத்தில் தனியாக இருந்த ஆதாமை சோதிக்கும்படியாக சாத்தான் வரவில்லை; ஆதாமுக்கும் தேவனுக்கும் இடையிலான உறவில் சாத்தானால் உள்நுழைய வழியில்லாதிருந்திருக்கக்கூடும், அல்லது சற்றாகிலும் சத்துரு நுழைவதற்கு அதாம் இடங்கொடாதிருந்திருக்கக்கூடும். ஆதாமுக்கும் படைத்தவராகிய தேவனுக்கும் இடையிலான உறவு அத்தனை வலுவாயிருந்திருக்கக்கூடும். என்றபோதிலும், ஏவாள் உருவாக்கப்பட்ட பின்னர், அவள் மூலமாக ஆதாமை வீழ்த்தும்படியாக சாத்தான் பாதை அமைக்கின்றான், தேவனோடு நல்லதோர் உறவில் இருக்கும் மனிதனை வீழ்த்த, அவனுக்குத் துணையாயிருக்கும் மனுஷியையே பயன்படுத்துகின்றான். அவள் மூலமாக மனித சந்ததியையே சரிந்துவிழச்செய்கின்றான். நம்முடைய வாழ்க்கையிலும், தனிமையில் நம்மோடு போராடி வெற்றிபெற இயலாவிடில், சத்துரு இப்படிப்பட்ட யுக்தியைப் பயன்படுத்தக்கூடும். துணையாயிருக்கும் மனிதர்களை தன் வசப்படுத்திக்கொண்டு, அவர்கள் மூலமாக நம்மை தேவனை விட்டுத் தூரப்படுத்திவிடக்கூடும். சில மனிதர்களின் வாழ்க்கையை வாய்க்காலாகப் பயன்படுத்த முயலும் சத்துருவின் செயலுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம்.
சிம்சோன் இதற்கு மேலும் ஓர் உதாரணமல்லவா! சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்று சொல்லி, விருந்துண்கிற ஏழுநாளும் அவனுக்கு முன்பாக அழுதுகொண்டும், அலட்டிக்கொண்டும் இருந்ததினால், ஏழாம்நாளிலே அவன் அதை அவளுக்கு விடுவித்தான். சிம்சோன் அவளுக்கு விடுவித்ததும், அவள் உடனே சென்று தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்துவிட்டாளே (நியா. 14:16,17). சிம்சோனை வீழ்துவதற்குச் சத்துருக்கள் பாதை அமைத்துப் பயன்படுத்திக்கொண்டு பெண்தானே அவள்.
உன்னதமான தேவனுக்கு ஆலயத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்ட சாலொமோனை, தனக்கும் கோவில்களைக் கட்ட உபயோகப்படுத்தவேண்டும் என்று நினைத்த சாத்தான், சாலொமோன் தேடித் தேடித் துணையாக்கிக்கொண்ட பல பெண்களின் மூலமாக அதைச் சாதித்துவிட்டான் அல்லவா!
இன்றைய நாட்களிலோ, குடும்பத்தில் யாரோ ஒருவர் தவறு செய்துவிட்டார் என்பதற்காக, தேவன் உருவாக்கித் தந்த, தேவ சமுகத்தில் உருவாக்கப்பட்ட குடும்பத்தை உடைத்துவிட்டு, உருக்குலைத்துவிட்டு, பெற்றெடுத்தப் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, அல்லது யாராவது ஒருவர் குழந்தைகளைப் பிரித்து தன்வசப்படுத்திக்கொண்டு ஆண்டவரின் ஆசீர்வாதத்திற்குத் தூரமாகப் பயணிக்க துரிதமாகச் செயல்படுகின்றார்களே! ஏதேன் தோட்டத்தை விட்டும், தேவ சமுகத்தை விட்டும் தூரமாக விரட்டப்பட்ட விழுந்துபோன ஆதாம் - ஏவாளின் சந்ததியின் வரிசையில்தானே, அவர்களை 'வீழ்த்தியவனை வீழ்த்தும் கிறிஸ்து பிறந்தார்'. அப்படியே நம்முடைய சந்ததியிலும் சாத்தானை ஜெயிக்கும் வீரர்களை தேவன் உருவாக்க முடியுமே. இதைத்தான், 'வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்' (சங். 127:4,5) என்று சங்கீரதக்காரன் எழுகின்றாரோ! நம்முடைய குடும்பத்தைக் குறித்து தேவன் வைத்திருக்கும் இத்தகைய திட்டத்திலிருந்து நாம் விலகிச்சென்றுவிடாமல், ஒருவருக்கொருவர் விரோதிகளாக அல்ல; ஒரே சரீரமாக வீரர்களாக சத்துருவுக்கு எதிரான போரில் வெற்றிபெற கர்த்தர் பெலன் தருவாராக.
தள்ளிவிடுதலை வெறுக்கும் தேவன்
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே (பிர. 4:9,10) என்பதுதானே சாலொமோனின் வார்த்தைகள். அப்படியிருக்க, விழுந்துவிட்டார் என்று கணவனையோ அல்லது விழுந்துவிட்டாள் என்று மனைவியையோ வீட்டை விட்டுத் துரத்திவிட்டால், அல்லது விழுந்துகிடக்கும் கணவனோ மனைவியோ வசிக்கும் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறிவிட்டால், 'தவறு செய்த கணவனையோ அல்லது தவறு செய்த மனைவியையோ தூக்கிவிடத் துணையிருக்காதே! ஒருவேளை அப்படிப்பட்டவர்களைத் தூக்கிவிடுவதற்காக, துணையாக மனைவியையோ அல்லது கணவனையோ கர்த்தர் கொடுத்திருக்கலாமே! இதனை புரிந்துகொள்ளத் தவறும் மனிதர்களே குடும்பத்தை விட்டுப் பிரிந்துசெல்வதில் கவனம் செலுத்துகின்றனர். ஆண்டவரின் சூத்திரத்திலிருந்து, சாத்தானின் சூழ்ச்சிக்குள்ளாக நாம் சிக்கிக்கொள்ளக்கூடாதே.
தேசத்தைக் குறித்து பேசுகின்றபோதிலும், உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே என்றும், ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் (மல். 2:14,15) என்றும் சொல்லும் தேவன் 'தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்' (மல். 2:16) என்று சொல்லத் தவறவில்லையே. ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடைமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்யஒட்டாமல்; நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள் (மாற். 7:11-13) என்று பெற்றோர்களைத் தள்ளிவிடுவதைக் குறித்தும் இயேசு கிறிஸ்து கண்டித்துப் போதிக்கின்றாரே; அப்படியிருக்க, தள்ளிவிடுதல் கர்த்தருக்கு விரோதமானது என்பதை இன்றைய சமுதாயம் கண்டுகொள்ளாமல் வாழுவதெப்படி?
பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டபோது (மத். 19:3), இயேசு கிறிஸ்து அவர்களை நோக்கி, 'ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும் (ஆதி. 2:24), நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் (மத். 19:4-6) என்று சொன்னாரே. அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் (மத். 19:7) என்று அவர்கள் கேட்டபோது, அவர் அவர்களை நோக்கி, உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை (மத். 19:8) என்று சொன்னதோடு, ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை (வேசித்தனம் செய்தவளானாலும், வேசித்தனம் செய்யாதவளானாலும்) விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றாரே (மத். 19:9). அப்படியென்றால், வேசித்தன முகாந்தரமில்லாமல், தள்விவிடுவது வேதத்தின்படி செல்லுபடியாகாதே! அப்படி தள்ளிவிட்டு வேறோருத்தியை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டாலும், அது விவாகமல்ல விபச்சாரம்தானே! 'வேசித்தத்தில்' விழுந்துவிட்டால் மாத்திரம்தானே வேறொரு திருமணத்திற்கு வேத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றது; இதுதானே இயேசு கிறிஸ்துவின் போதனை. பத்துக் கட்டளைகளில் ஒன்றான 'விபசாரம் செய்யாதிருப்பாயாக' (யாத். 20:14) என்ற கட்டளை அனைவரும் அறிந்ததே; என்றாலும், திருமணத்திற்கடுத்த காரியத்தில் 'வேசித்தனம்' 'மரணம்' என்ற காரணங்களைத் தவிர்த்து பிற காரணங்களுக்காகப் பிரிந்துசென்று பிறரை மணமுடிக்கும் மனிதர்கள் இதனை மறந்துபோவது ஏன்?
அதுமாத்திரமல்ல, 'வேசித்தனஞ்செய்ததினிமித்தம் புருஷனால் தள்ளிவிடப்பட்ட ஒரு ஸ்திரீயை இன்னொரு மனிதன் தனது வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டாலும், வேசித்தனம் செய்யாதபோதிலும் புருஷனால் தள்ளிவிடப்பட்ட ஒரு ஸ்திரீயை இன்னொரு மனிதன் தனது வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டாலும் அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருக்கிறான்' என்பதை எத்தனை தெளிவாக இயேசு கிறிஸ்துவின் போதனை நமக்கு வெளிப்படுத்துகின்றது. என்றபோதிலும், இயேசு கிறிஸ்துவின் இந்த போதனைக்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காமல், வாழ்கையிலிருந்து வழுக்கிவிழுந்தவர்கள் எத்தனை பேர்? கரங்களில் இருக்கும் வேதத்தில் எழுதப்பட்டிருக்கும் சத்தியத்திற்குச் செவிகொடாமல், கீழ்ப்படியவும் இருதயத்தில் இடங்கொடாமல், கர்த்தர் கற்றுக்கொடுத்த உபதேசங்களைக் காற்றில் பறக்கவிட்டுவருகின்றதே இன்றய தலைமுறை.
அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின் படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல (ரோமர் 7:2,3) என்றும் மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங் காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள் (1கொரி. 7:39) என்றும் பவுல் தனது நிருபத்தில் எழுதுகின்றாரே; இதுதானே வேதம் போதிக்கும் நியதி.
'வேசித்தனம்' (தான் செய்ததினால் அல்ல; தனது கணவன் அல்லது மனைவி செய்ததினால்) 'மரணம்' ஆகிய இரண்டு காரணங்களுக்காக மாத்திரமே மற்றொருவரை மணந்துகொள்ள வேதம் நமக்கு அனுமதி அளிக்கின்றது; இதற்கு மிஞ்சின அனைத்தும் பாவமே.
தேசத்தின் சட்டம் வழிவிடுகின்றது என்பதற்காக, சத்தியத்திலிருந்து நாம் வழி விலகிச் சென்றுவிடமுடியாதே. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2) என்பதுதானே தேவப் பிள்ளைகளாகிய நமக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளை. சாதகமாக இருக்கின்ற இடத்தில் சட்டத்தையும், சந்தோஷமாக இருக்கும் இடத்தில் சத்தியத்தையும் நாம் எடுத்துக்கொள்ள இயலாத. இரண்டு எஜமானுக்கு உழியம் செய்ய ஒருவனாலும் கூடாது என்பதுதானே வேத நியதி. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தி, சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள் (தானி. 3:1,4,5) என்று சொன்னபோது, சகல ஜனங்களும் பணிந்துகொண்டார்கள்; என்றபோதிலும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற தேவப் பிள்ளைகள் பணிந்துகொள்ளவில்லையே.
எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி;, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணி, ராஜாவாகிய தரியு அந்தப் பத்திரத்திற்குக் கையெழுத்து வைத்துவிட்டபோதிலும் (தானி. 6:7,9), ராஜாவின் கட்டளையைக் குறித்து எவ்வளவும் கவலைப்படாத தானியேல், தினமும் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணினானே (தானி. 6:13). தேசத்தின் சட்டங்கள் சத்தியத்திற்கு விரோதமாயிருந்தால், சாகவும் ஆயத்தம் என்பதுதானே தானியேலின் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்.
ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான். ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு 'இப்படிச் செய்யவேண்டும'; என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை (எஸ்தர் 3:1,2) என்றுதானே மொர்தெகாயைக் குறித்து வாசிக்கின்றோம். 'இப்படிச் செய்யவேண்டும்' என்ற கட்டளை ஒருவேளை தேவப் பார்வையில் தவறாயிருந்திருக்கக்கூடும்; அதனாலேயே, மொர்தெகாய் ஆமானை வணங்கவில்லை.
உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல (எஸ்தர் 3:8) என்றுதானே ஆமானும் யூத ஜனங்களைக் குறித்து ராஜாவினிடத்தில் கூறுகின்றான். அப்படியிருக்க, நாம் மட்டும் 'வேதத்திற்கு விரோதமாயிருக்கும் தேசத்தின் சட்டங்களுக்கு' ஏன் இணங்கிச்செல்லவேண்டும்?
விசுவாசியா? அவிசுவாசியா?
விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள் (1கொரி. 7:10-13) என்று எழுதும் பவுல், ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார் (1கொரி. 7:15) என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லையே! விசுவாசிகள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வதைக் குறித்து அல்ல, அவிசுவாசிகள் அவர்களாகவே குடும்பத்தை விட்டுப் பிரிந்துசெல்வதைக் குறித்தே எழுதுகின்றார் பவுல். பவுலின் வார்த்தைகள், குடும்பத்தை விட்டுப் பிரிந்துசெல்லுபவர்களை 'அவிசுவாசி' என்ற வட்டத்திற்குள்ளும் அடக்குகின்றதோ! அவிசுவாசி குடும்பத்தை விட்டுப் பிரிந்துசென்றாலும், அந்த காரணத்திற்காக விசுவாசி வேறொரு விவாகம் செய்யமுடியாதே!
கூடவே, அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன (1கொரி. 7:14) என்று ஏன் விசுவாசி பிரிந்துசெல்லக்கூடாது என்பதற்கான காரணத்தையும் பவுல் சுட்டிக்காட்ட பவுல் தவறவில்லை. ஆனால், இன்றைய நாட்களிலோ, வேதத்திற்கு விரோதமாகத்தானே விவாகங்களில் விவகாரங்கள் தலையெடுக்கின்றன. புருஷன் அவிசுவாசி அல்லது பாவி என்று விசுவாசியான கணவன் விலகிச் சென்றுவிடுவதும், மனைவி அவிசுவாசி அல்லது பாவி என்று கணவன் விலகிச் சென்றுவிடுவதும்தானே அரங்கேறிவருகின்றன. அநேக புருஷர்கள் அல்லது மனைவிகள் பரிசுத்தமாகாததற்குக் காரணம் இதுவே. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள் (1கொரி. 7:5) என்ற, சீக்கிரம் அறாத, 'முப்புரி நூலைத்' (பிர. 4:2) திரிப்பதற்காக மாத்திரமே பிரிவு அனுமதிக்கப்படட்டும்.
'தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்' (மத். 19:6) என்று சத்தியம் போதித்திருந்தபோதிலும், நீதிமன்றத்திற்குச் சென்று 'விவாகரத்து' பெற்று, 'குடும்பம்' என்ற அமைப்பை வீதியில் விட்டுச் செல்லும் மனிதர்கள் பெருகிவரும் காலம் இது. தேவசமுகத்தில், தேவ ஊழியர்கள் முன்னிலையில் விவாகத்தில் இணைக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் பெறும் 'விவாகரத்துச் சான்றிதழ்' விண்ணகத்திற்கு முன் செல்லுபடியாகாதே; பரலோகம் அதை ஏற்றுக்கொள்ளாதே. வேதத்தை சுமக்கும் மக்களின் கைகள், விவாகரத்துச் சான்றிதழ்களைச் சுமக்குமென்றால், அவர்கள் வாழ்க்கை போலியானதே!
வெள்ளி, 10 மார்ச், 2023
சாம்பற் புதன்
சாம்பற் புதன்
'லெந்து நாட்கள்' என்று அழைக்கப்படும் 40 நாட்கள், இயேசு கிறிஸ்து ரோமப் போர்ச்சேவகர்களால் பிடிக்கப்பட்ட, பாடுபடுத்தப்பட்ட, சிலுவையில் அறையப்பட்ட, மரித்த நாட்களாகவும், அதனைத் தொடர்ந்து வரும் ஞாயிறு இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமாகவும் கிறிஸ்தவர்களால் சந்ததி சந்ததியாக ஆசரிக்கப்பட்டுவருகின்றன; இந்நாட்களின் தொடக்க நாளே 'சாம்பற் புதன்' என்று அழைக்கப்படுகின்றது. என்றபோதிலும், 'சாம்பற் புதன்' என்றால் என்ன? என்றும், அது எங்கே? எப்படி? யாரால் தொடங்கப்பட்டது? என்றும், 'லெந்து நாட்கள்' என்பது, ஏன் 40 நாட்களாக ஆசரிக்கப்படுகின்றன?' என்பதின் உண்மையை நாம் அறிந்துகொள்வது அவசியமல்லவா!
'அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று' (மத். 4:1,2) என்று இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தின் தொடக்கத்தை பரிசுத்த வேதம் எடுத்துக்கூறினாலும், இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளுக்கும், இந்த நாற்பது நாட்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது நிச்சயம். இயேசு கிறிஸ்துவுடன் கூட இருந்த சீஷர்களின் ஊழிய அனுபவங்களிலும், இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தைச் சுட்டிக்காட்டும் சுவிசேஷங்களிலும், அப்போஸ்தலர்களின் அஸ்திபார உபதேசங்களிலும், அன்றாட போதனைகளிலும் மற்றும் நடபடிகளிலும், ஆதித் திருச்சபைகளிலும் மற்றும் ஆதி விசுவாசிகளின் வாழ்க்கைமுறைகளிலும் கடைபிடிக்கப்படாத இந்த 'பழக்கம் இன்றைய நாட்களில் புழக்கத்தில் வந்தது எப்படி?' இயேசு கிறிஸ்துவையே நினைவில் கொண்டு, அவரது பாடுகளை மனதில் கொண்டு இந்த நாற்பது நாட்களை நாம் அனுசரித்தாலும், அவருடைய பாடு மரணங்களை பல மணி நேரம் தியானித்தாலும், 'இந்த நாற்பது நாட்கள்' துக்கம் தொடங்கினதின் மறுபக்கத்தையும், அது யாருக்காக அனுசரிக்கப்பட்டது? என்பதின் ஆரம்பத்தையும் நாம் அறிந்துகொள்வது அவசியமல்லவா? இதனைப் புரிந்துகொள்ள, சில வரலாற்றுப் பக்கங்களை நாம் புரட்டிப் பார்க்கவேண்டியதும் அவசியமே.
நோவாவின் குமாரர்களை 'சேம், காம், யாப்பேத்' என்ற வரிசையில் வேதாகமத்தின் பல பகுதிகளில் நாம் வாசித்தாலும் (ஆதி. 6:10; 7:13; 9:18,23; 10:1,21; 1நாளா. 1:4), ஆதியாகமம் 10-ம் அதிகாரத்தின் சரித்திரத்தினையும், ஆதியாகமம் 9:24-ல் 'இளையகுமாரன்' என்று காம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதினாலேயும், அவர்களது வரிசை, யாப்பேத், சேம், காம் என்பதை நாம் புரிந்துகொள்ளமுடியும். காமின் குமாரனான கூஷ், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்ற குமாரர்களைப் பெற்றதைத் தொடர்ந்து, கூஷின் குமாரர்களுள் ஒருவனான ராமாவுக்கும் சேபா, திதான் (ஆதி 10:7) எனற குமாரர்கள் பிறந்த பின்பு, கூஷ் தனது வயதான நாட்களில் மற்றொரு மனைவியைச் சேர்த்துக்கொண்டு அவளிடத்தில் 'நிம்ரோத்தைப்' பெற்றான் என்றும், தனது வயதான நாட்களில் அவனைப் பெற்றதினால், அவன் மீது கூஷ் அதிகமான அன்பு கொண்டிருந்தார் என்றும் யாசேரின் புத்தகத்தில் வாசிக்க முடியும் (யாசேர் 7:23). வயதான நாட்களில் கூஷ் மணமுடித்துக்கொண்ட மனைவியின் பெயரை 'சிமிராமிஸ்' என்று கூறுகிறது வரலாறு.
ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் உடுத்துவிக்கும்படி தேவனால் உண்டாக்கப்பட்ட தோலுடைகள், ஏதேன் தோட்டத்தை விட்டு அவர்கள் வெளியேறியபின் அவைகள் சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத் என்பவர்களைக் கடந்து, ஏனோக்கின் வசத்தில் வந்து சேர்ந்தன என்றும், ஏனோக்கு தேவனால் எடுத்துக்கொள்ளப்பட்டபின் அவைகள் மெத்தூசலாவை வந்தடைந்தன என்றும், மெத்தூசலாவின் மரணத்திற்குப் பின் அவைகள் நோவாவினிடத்தில் காணப்பட்டன என்றும், பேழைக்குள் எடுத்துச்செல்லப்பட்டன என்றும், நோவா பேழையிலிருந்து வெளியேறிய நேரத்தில் திராட்சரசத்தினால் வெறிகொண்டிருந்தபோது அவைகள் நோவாவின் இளையகுமாரனான காமினால் திருடப்பட்டன, இதுவே காம் சபிக்கப்பட்டதற்குக் காரணம் என்றும், காமினைத் தொடர்ந்து அவைகள் காமின் முதல் குமாரனான கூஷினிடத்தில் கொடுக்கப்பட்டன என்றும், கூஷ் தனது வயதான நாட்களில் நிம்ரோதைப் பெற்றதினாலும், அவன் மீது அதிக பிரியம் வைத்திருந்ததினாலும் அவைகளை நிம்ரோத்திற்குக் கொடுத்தான் என்றும் யாசேரின் புத்தகத்தின் சரித்திரம் கூறுகின்றது. (யாசேர் 7:23-29)
காமின் குமாரனான கூஷ;-ன் மகன் 'நிம்ரோத்' நல்லதோர் வேட்டைக்காரனாயிருந்தான். ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று (ஆதி. 10:9) என்று இவனைக் குறித்து வேதமும் கூறுகின்றது. காட்டு மிருகங்களை வேட்டையாடி, பலிபீடங்களைக் கட்டி, அவைகளை கர்த்தருக்கும் பலியிட்டுவந்தான். தன்னையும் மற்றும் தனது சகோதரர்களையும் எதிர்க்கும் சத்துருக்களோடு போராடி வெற்றியும்கண்டான் நிம்ரோத் (யாசேர் 7:30,31). நிம்ரோத் 40 வயதாயிருக்கும்போது, யாப்பேத்தின் பிள்ளைகள் நிம்ரோத்தின் சகோதரர்களுக்கு விரோதமாகப் போரிடப் புறப்பட்டுவந்த நேரத்தில், நிம்ரோத், கூஷின் குடும்பத்தைச் சேர்ந்த 460 பேரையும் மற்றும் கூலிக்கு அமர்த்திக்கொண்ட பிற மனிதர்களாகிய 80 பேரையும் தன்னுடன் அழைத்துச் சென்று, எதிர்த்து வந்த சத்துருக்கள் மீது மாபெரும் வெற்றியினைப் பெற்றான்; எதிரிகளில் சிலரை வேலையாட்களாகவும் பிடித்துக்கொண்டுவந்தான். நிம்ரோத்தின் இந்த துணிவையும், போர் திறமையையும் கண்ட நிம்ரோத்தின் சகோதரர்கள், தங்களை அரசாளும் ராஜாவாக அவனை எல்லாருக்கும் லோக உயர்த்தி, அவனது தலையின் மேல் ராஜ கிரீடத்தையும் அணிவித்து மகிழ்ந்தனர் (யாசேர் 7:34-40). காமின் குமாரனனும், கூஷின் மகனுமான நிம்ரோத் அரசனானதும், அரியணை ஏறியதின் சரித்திரமும் இதுவே! நிம்ரோத் 185 ஆண்டுகள் தனது ஜனத்தின் மேல் ஆட்சிபுரிந்தான் (யாசேர் 27:16). சத்துருக்களின் கைகளிலிருந்து தனது ஜனத்தை பாதுகாத்துவந்தான்.
முதல் மனிதனாகிய ஆதாம் முதல் நிம்ரோத் வரையிலான வரலாற்றினை வேதாகமத்திலுள்ள நாளாகமப் புத்தகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றதே (1நாளா. 1:1-12). சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே இவன் ஆண்டுவந்தான் (ஆதி. 10:10) என்றும், அவைகள் 'நிம்ரோதின் தேசம்' என்றே அழைக்கப்பட்டன (மீகா. 5:6) என்றும், நினிவே, ரெகொபோத், காலாக், ரெசேன் போன்ற பட்டணங்களை அவன் கட்டினான் என்றும் (ஆதி. 10:11,12), மிஸ்ராயீம், லூதீம், அனாமீம், லெகாபீம், நப்தூகீம், பத்ருசீம், பெலிஸ்தியரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீம் மற்றும் கப்தொரிம் ஆகியோரைப் பெற்றான் என்றும் வேதத்தில் நாம் வாசிக்கின்றோமே (ஆதி. 10:13-14).
நிம்ரோத் அரசனாக ஆட்சிபுரிந்துகொண்டிருந்த நாட்களில், நாகோரின் குமாரன் தேராகை (ஆதி. 11:24) தனது ராஜ்யத்தில் எல்லா ஜனத்திற்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் மேலாக உயர்த்திவைத்திருந்தான் நிம்ரோத் (யாசேர் 7:41). இந்த நாட்களில், பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், (தற்போது ஈராக் என்று அழைக்கப்படுகின்ற) சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டதுடன் (ஆதி. 11:1-4), அதை நிறைவேற்றவும் தொடங்கினார்கள்; 'நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போதபடிக்கு' என்றும் 'நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம்' என்றும் ஜனங்கள் செய்யத்தொடங்கின இந்தக் காரியம், கர்த்தரின் பார்வைக்கோ தகாததாயிருந்தது. எனவே, நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்கிறார் ஆண்டவர்.(ஆதி 11:7)
நிம்ரோத்தின் ஆட்சிக்குட்பட்ட ஜனங்களிடத்தில் மாத்திரமல்ல, அரசான நிம்ரோத்தின் வாழ்க்கையிலும் ஆண்டவருக்கு விரோதமான போக்கு ஆரம்பமாகத் தொடங்கியது. ஆண்டவரை மறந்து, ஆங்காங்கே இருக்கும் கற்களையும் மற்றும் மரங்களையும் கடவுளாக வணங்கத் தொடங்கினான். தான் வணங்கியதோடு நிறுத்திக்கொள்ளாமல், தனது ராஜ்யத்திற்குட்பட்ட ஜனங்களையும் அத்தகைய வணக்கத்திற்கு நேராக வழிநடத்தினான். நிம்ரோத்-ன் மகனான 'மாரடோன்' தனது தகப்பனைக் காட்டிலும் அதிகமான தீமைகளை தேவனுக்கு விரோதமாகச் செய்துவந்தான் (யாசேர் 7:47). நிம்ரோத்தின் வாழ்க்கை முற்றிலும் தேவனை விட்டு விலகிப் போயிருந்த நாட்களில், தனது தகப்பனாகிய கூஷ் மரித்ததைத் தொடர்ந்து, தனது தாயைப் போன்ற அழகான ஒரு பெண்ணைத் தேடிய நிம்ரோத், அது கிடைக்காததினால், தனது பெற்ற தாயாகிய 'சிம்ராமிஸை' தனக்கு மனைவியாக்கிக்கொண்டான் என்பது சரித்திரம் கூறும் வரலாறு.
அரசனானபோதிலும், வேட்டையாடும் தனது பழக்கத்தை நிம்ரோத் விட்டுவிடவில்லை. நிம்ரோதின் வயதான நாட்களில், ஈசாக்கின் குமாரனான ஏசாவும் வேட்டையாடுவதில் வல்லவனாயிருந்தான்; நிம்ரோத் காட்டிற்குச் சென்று வேட்டையாடும் நேரங்களில், ஏசாவை காணும்போதெல்லாம் அவன் மீது எரிச்சலைந்துவந்தான் (யாசேர் 27:3). ஒருநாள் வேட்டையாடும்படியாக நிம்ரோத் வனத்திற்குச் சென்றிருந்தபோது, வேட்டையாடும்படியாக நிம்ரோத்துடன் வந்திருந்த மற்ற மனிதர்கள், அவனை விட்டு சற்று விலகிச் சென்றிருந்த வேளையில், இரண்டு மனிதர்களுடன் மாத்திரம் வனத்தில் நிம்ரோத் நடந்துகொண்டிருப்பதைக் கண்ட ஏசா, அந்த இரண்டு மனிதர்களும் சற்று அப்புறமாகச் சென்ற நேரத்தில், தான் மறைந்திருந்த இடத்திலிருந்து தந்திரமாக எழுந்து சென்று பட்டயத்தினாhல் நிம்ரோத்தின் தலையைத் துண்டித்துப்போட்டதுடன் (யாசேர் 27:5-7), சற்று நேரத்தில் அங்கு வந்த நிம்ரோத் உடனிருந்த இரண்டு மனிதர்களோடும் கடுமையாகப் சண்டையிட்டு அவர்களையும் வீழ்த்திவிட்டு, கூஷ் தனது குமாரனான நிம்ரோத்திற்குக் கொடுத்திருந்த 'உடைகளை' (ஆதாம் ஏவாளுக்கு ஆண்டவர் செய்த தோலுடைகள்) நிம்ரோத்தினிடத்திலிருந்து எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டுத் தப்பிச் சென்று, அதனை தனது வீட்டில் மறைத்துவைத்தான். (யாசேர் 27:10)
ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன். இதோ, நான் சாகாப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு (ஆதி 25:29,30,32) என்று சொல்லும் நிகழ்வு 'ஏசா நிம்ரோத்தை கொன்றுவிட்டு வந்தபோது' நடைபெற்றதே (யாசேர் 27:10-12). நிம்ரோத் 215 வருடங்கள் உயிரோடிருந்தான் (யாசேர் 27:15). ஆபிரகாமின் பிறப்பின்போது, ஞானிகள் முன்னறிவித்ததின்படி, ஆபிரகாமின் வித்தாகிய ஏசாவினால் நிம்ரோத் கொல்லப்பட்டான் என்பது யாசேர் புத்தகம் நமக்குச் சொல்லும் கூடுதல் செய்தி (யாசேர் 27:16; 7:50,51; 8:13). கி.மு 1880-ம் ஆண்டு, ஏசா 16 வயதாயிருக்கும்போது, நிம்ரோத்தை கொன்றான் என்று சரித்திர ஆசிரியர்கள் எழுதுகின்றனர்; அப்போது அவனுக்கு வயது 215; அப்படியென்றால், நிம்ரோத் பிறந்த ஆண்டு கி.மு 2095 என்பதையும் நாம் கணக்கிட்டுக்கொள்ளமுடியுமே!
நிம்ரோத் மரணமடைந்ததும், ஆட்சி அரியணையில் அமர்ந்த நிம்ரோத்தின் தாயும் மனைவியுமான சிம்ராமிஸ், நிம்ரோத்தை சூரியனாகவும், தன்னை சந்திரனாகவும் அறிமுகப்படுத்தி ஜனங்களை வணங்கும்படிச் செய்தாள். 'மோளேகு' என்றும், 'அஸ்தரோத்' என்றும் 'தியானாள்' என்றும் பல்வேறு மறு பெயர்களில் சிம்ராமிஸைக் குறித்தும் 'பாகால்' என்ற பெயரில் நிம்ரோத்தைக் குறித்தும் வேதத்தில் நாம் வாசிக்க முடியும். சில நாட்களுக்குப் பின், தவறான உறவினால் கர்ப்பமடைந்த 'சிமிராமிஸ்', அதனை மறைக்கும்படியாக, 'நிம்ரோத்தின் சூரியக் கதிர்கள் தன் மீது பட்டதினால், தான் கருவுற்றிருப்பதாக' ஜனங்களை நம்பச் செய்ததுடன், தான் பெற்றெடுத்த குழந்தைக்கு 'தம்மூஸ்' என்றும் பெயரிட்டாள். தம்மூசும் தகப்பனைப் போலவே வனத்திற்குச் சென்று அடிக்கடி வேட்டையாடுகிறவனாகக் காணப்பட்டான்.
40 வயதாயிருக்கும்போது, தம்மூஸ் காட்டுப்பன்றியினால் தாக்கப்பட்டு உயிரிழந்தான். தம்மூஸ் செத்துக்கிடந்த இடத்தில், அவனது சரீரத்திலிருந்து சிந்திய ரத்தத்தினால் பட்டுப்போன மரம் பசுமையாகத துளிர்விட்டு வளர்ந்தது என்றும் ஜனங்களை நம்பச் செய்து, வருடா வருடம் ஜனங்கள் அதனை அலங்கரித்து மகிழும்படிச் செய்தாள்; இன்று கிறிஸ்தவர்கள் அலங்கரித்து ஆராதிக்கும் 'கிறிஸ்மஸ் மரத்தின்' தொடக்கமும் இதுவே. 40-வது வயதில் தம்மூஸ் உயிரிழந்ததினால், தன் ராஜ்யத்திலிருக்கும் ஜனங்கள் அனைவரும் தம்மூசிற்காக ஒவ்வொரு வருடமும் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கவேண்டும் என்று ஆணையிட்டாள் சிமிராமிஸ். இந்த நாற்பது நாளுக்கான தொடக்கத்தை, தங்கள் நெற்றிகளில் 'தம்மூசின் பெயரால் சாம்பலைப் பூசிக்கொண்டு' துக்கநாட்களாக, எவ்வித மகிழ்ச்சியான காரியங்களையும் கைக்கொள்ளாமல் ஆசரித்துவந்தார்கள். மேலும், தாயும் பிள்ளையும் இருப்பதைப் போன்ற சிற்பங்களைச் செய்தும் ஜனங்கள் வழிபடத் தொடங்கினர். இதுவே 'சாம்பற்புதனாக' அவர்களால் தொடர்ந்து ஆசரிக்கப்பட்டுவந்தது. பாபேல் கோபுரம் கட்டப்பட்டபோது, பாஷைகளை ஆண்டவர் தாறுமாறாக்கினதினால், வௌ;வேறு இடங்களுக்குச் சிதறிச் சென்ற ஜனங்கள், தாங்கள் பேசும் பாஷைகளில், வெவ்வேறு பெயர்களில் 'சிம்ராமிஸை' வழிபடத் தொடங்கினர். பல்வேறு இடங்களிலும் மற்றும் தேசங்களிலும் பெண் தெய்வங்கள் மற்றும் சிங்கங்களின் மேலிருக்கும் பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் சிம்ராமிஸையே குறிக்கின்றன.
சிமிராமிஸ் கருத்தரித்த தினத்தையே 'ஈஸ்டர்' என்று கொண்டாடிவந்தார்கள் பாபிலோனியர்கள். இதுவே 'ஈஸ்டர்' தினத்தன்று ஜனங்கள் அலங்காரம் செய்த முட்டைகளைக் கொடுத்து மகிழ்வதற்கானக் காரணம். 'முட்டையும் முயலும்' இனப்பெருக்கத்தின் அடையாளங்களாகவே கருதப்படுபவை. 'ஈஸ்டர்' தினத்தன்று, சிம்ராமிஸ்-ன் கோவிலுக்குள் வரும் ஆடவர்கள், அங்கிருக்கும் பெண்களோடு உடலுறவில் ஈடுபட்டுவந்ததோடு, 9 மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளை, அடுத்த ஆண்டு 'ஈஸ்டர்' தினத்தன்று பலியாகவும் செலுத்திவந்தார்கள். கோவில்களில் தேவதாசி முறை உண்டானதின் வரலாறும் அத்துடன் நரபலி செலுத்தப்பட்டதின் வரலாறும் இதுவே. 'கிறிஸ்மஸ்' 'கிறிஸ்து' என்று உதட்டளவில் உச்சரிக்கப்பட்டாலும், சத்துருவின் சூழ்ச்சியில் எத்தனையாய் சிக்கிக்கிடக்கின்றது இன்றைய கிறிஸ்தவ உலகு, என்பதை நினைக்குங்கால் வேதனையே மிஞ்சுகிறது.
இந்தத் தீமையையே, எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தர் வேதத்தில் எழுதிவைத்திருக்கின்றார், பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி, என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள் (எசே. 8:13-16) என்று வாசிக்கின்றோமே. இவை அனைத்தும் வெளிப்படுத்துவது, 'நிம்ரோத்' 'சிமிராமிஸ்' 'தம்மூஸ்' வழிபாட்டினையே!

செவ்வாய், 7 மார்ச், 2023
'பஸ்காவின் பலி'
யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது. 'சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில் காணமுடியும். அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.
சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங்குகின்றான். ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவுசெய்தருளும் (ஆதி. 24:12) என்று தான் செல்லுகின்ற காரியம் வாய்கக, சாயங்காலமானவுடன் தேவ சமுகத்தில் வேண்டிநிற்கின்றானே. ஒரு நாளின் தொடக்கத்தை ஆண்டவரின் பாதத்திலேயே ஆரம்பிக்கவேண்டும் என்பதற்கான முன்னுதாரணங்கள்தானே இவைகள்.
இவ்வுலகத்தை விட்டு இயேசு கிறிஸ்து பிரியும் வேளை வந்தபோது, பாவிகளுக்காக பாவிகளால் சிலுவையில் அறையப்படவேண்டிய வேளை நெருங்கினபோது, தம்முடைய சீஷர்களை நோக்கி, இரண்டுநாளைக்குப் பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்று சொல்லுகின்றார் (மத். 26:2). பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டு பேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்; அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்ன படியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். சாயங்காலமானபோது (நிசான் மாதத்தின் 14-ம் நாளின் தொடக்கமான சாயங்காலத்தில்), அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்து (மாற். 14:12-17) அவர்களோடு பந்தியிருந்தார் (மத். 26:20) என்று வாசிக்கின்றோம்.
சீஷர்களோடு இயேசு கிறிஸ்து பஸ்காவை ஆசரித்ததைத் தொடர்ந்து, (மத். 26:17-29), அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போய் (மாற். 14:26), தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறத்திலுள்ள கெத்செமனே எனப்பட்ட இடத்திற்கு வந்தார்கள் (மாற். 14:32); அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான் (யோவான் 18:1,2). கெத்செமனே தோட்டத்திற்குச் செல்லும் வழியில் கிறிஸ்து தன்னுடைய சீஷர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள் (மத். 26:31) என்று சொன்னதோடு, உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் (மத். 26:33) என்று சொன்ன பேதுருவை நோக்கி, இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (மத். 26:34) என்றும் சொல்லுகின்றார்.
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்த அந்த நாள் (நிசான் மாதத்தின் 14-ம் நாள்) பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள் (யோவான் 19:31). யூதர்கள் கேட்டுக்கொண்டதின்படி, போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது (யோவான் 19:32-34). 'பெரிய ஓய்வுநாள்' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த ஓய்வு நாள், வழக்கமாக வாரந்தோறும் வருகின்ற வாரத்தின் ஏழாவது நாளான ஓய்வு நாள் அல்ல; மாறாக, பஸ்கா பலியிடப்பட்ட நாளான நிசான் மாதத்தின் 14-ம் நாளுக்கு அடுத்துவரும் 'வருடாந்திர பெரிய ஓய்வு நாள்' (great sabbath, very special sabbath, high sabbath); இதனை, நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, இந்த நாள் அந்த வாரத்தின் ஐந்தாம் நாளாக வந்தது; அதாவது நிசான் மாதத்தின் 15-ம் நாள்.
காலியான கல்லறையைப் பார்த்துவிட்டு வந்த ஸ்திரீகளின் வார்த்தைகளைக்கூட இயேசு கிறிஸ்துவோடு கூட இருந்த சீஷர்கள் நம்பவில்லையே! 'இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை (லூக். 24:11). சந்தேகப்பட்ட பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான் (லூக். 24:12) என்றுதான் வாசிக்கின்றோம்; 'விசுவாசித்தான்' 'நம்பினான்' என்று எழுதப்படவில்லையே. ஸ்திரீகள் சொன்னதை உடனே 'நம்பாததினாலேயே' பேதுரு எழுந்திருந்து 'அது உண்மையா?' என்று பார்க்க கல்லறையினிடத்திற்கு ஓடுகின்றான். தோமாவின் நிலையோ இன்னும் சற்று மோசமாயிருந்தது. மற்ற சீஷர்கள், கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னபோது, தோமா பிரதியுத்தரமாக, 'அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என்விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்' (யோவான் 20:25) என்கின்றானே!
அன்றையத்தினமே, அதாவது, காலியான கல்லறையை ஸ்திரீகள் பார்த்துவிட்டு வந்த அன்றையத் தினமே, அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள் (லூக். 24:13). அவர்களது பயணத்தின்போது, வழியிலே, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து அவர்களோடு இணைந்து, உரையாடிக்கொண்டு சென்றபோனபோதும் அவர்களது இருதயம் உணர்வடையவில்லை. 'எங்களுடனே தங்கியிரும்' (லூக். 24:29) என்ற அவர்களது வேண்டுகோளுக்கிணங்கி, இயேசு கிறிஸ்து அவர்களோடு சென்று பந்தியிருக்கையில், 'அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தபோது, அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள் (லூக். 24:31). இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது (லூக். 24:21) என்ற இந்த சீஷர்களின் வார்த்தைகள், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 'மூன்று நாட்கள் ஆகிவிட்டன' என்பதையும் கூடவே உறுதிப்படுத்துகின்றனவே. 'வாரத்தின் முதல்நாள்' என்றும் 'இன்று மூன்று நாளாகிறது' என்றும் சொல்லப்படும் வார்த்தைகள், வாரத்தின் கடைசி நாளும், ஏழாம் நாளுமாகிய ஓய்வு நாளையும் மற்றும் அதற்கு முன்னிருக்கும் இரண்டு நாட்களையும் குறிக்கின்றதல்லவா. அப்படியென்றால், வாரத்தின் 'நான்காம்' நாளின் முடிவில் அதாவது ஐந்தாம் நாளின் தொடக்கமான மாலை நேரத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று நாம் அறிந்துகொள்ள முடிகின்றதே.
இயேசு கிறிஸ்துவை சந்தித்த இந்த சீஷர்கள் எருசலேமுக்குத் திரும்பிப்போய், வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொல்லிக்கொண்டிருந்தபோது (லூக். 24:33,35), வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் (யோவான் 20:19). என்றபோதிலும், அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என்கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்பட்டார்கள் (லூக். 24:37-41) என்றுதானே வாசிக்கின்றோம். பூட்டிய அறைக்குள் இயேசு கிறிஸ்து வந்தபோதும் விசுவாசிக்க தயங்கினவர்கள், 'கல்லறையில் கல் அகற்றப்படாதிருந்தால்' எத்தனையாய் விசுவாசிக்கத் தடுமாறியிருப்பார்கள்? கல்லறையின் கல் அகற்றப்பட்ட கர்த்தருக்காக அல்ல, சீஷர்களுக்காகவும் மற்றும் ஜனங்களுக்காகவுமே!
பஸ்காவா? ஈஸ்டரா?
சத்தியம் சொல்லும்
சரித்திரம்
பஸ்காவா? ஈஸ்டரா?
பிரியமானவர்களே! இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும் காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்கிறான். பண்டிகை நாட்களிலும்கூட, பரலோகத்தை நோக்கி ஜனங்களின் கண்கள் திரும்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு, பூலோகத்திற்கடுத்தவைகளாலேயே அவர்களது வாழ்க்கையினைப் பொதிந்துவிட முனைந்து நிற்கிறான். 'கர்த்தருக்குப் பண்டிகை' என்ற வாசகத்தோடு காரியங்களைச் செய்ய அனுமதித்தாலும், வசனத்தை விட்டு விலகச்செய்துவிடுகின்றான். மாம்சத்திற்கடுத்தவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆவிக்குரியவைகளை அசட்டைபண்ணும் ஜனங்கள், கர்த்தருக்கு அல்ல, சத்துருவுக்கே பண்டிகை கொண்டாடுகின்றனர் என்பதே உண்மை.
சமாரியாவின் ராஜாவாகிய ஆகாப் யெஸ்ரயேலனாகிய நாபோத்தை நோக்கி, 'உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு' (2 இராஜா. 21:2) என்று கேட்டபோது, 'நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக' (2 இராஜா. 21:3) என்ற நாபோத்தின் வார்த்தையினால், சலிப்பும் சினமுமாய்க் காணப்பட்டதை அறிந்த ஆகாபின் மனைவியாகிய யேசபேல், ஆகாபின் பெயரால், 'நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள்' என்று நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப்; போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினதைப் போல (1 இராஜா. 21:9,10,8), இன்றைய 'பண்டிகையின்' நாட்களிலும், கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தைக் கீரைக்கொல்லையாக்கிப்போடும்படிக்கும், திராட்சத்தோட்டத்தைக் காத்துக்கொண்டிருக்கும் நாபோத்துக்களை கொலைசெய்யும்படிக்கும் சத்துரு திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டுமே.
இப்படிப்பட்ட சத்துருவின் சதியினை அறியாதோர், சத்தியத்தை விட்டுத் தூரமாகத் தாங்கள் பயணிப்பதை அறியாமலேயே தங்கள் பயணத்தை இன்னமும் தொடர்ந்துகொண்டிருப்பார்கள்; இலக்கை விட்டு விலகிச் செல்லும் அத்தகையோரின் முடிவு வேதனையே என்பதை நியாயத்தீர்ப்பு நிச்சயம் வெளிப்படுத்தும்.
'ஆபிப்' மாதத்தின் ஆரம்பம்
வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டுக் காலங்களில், சந்திரனை மையமாகக் கொண்டே காலங்களும் மற்றும் நாட்களும் கணக்கிடப்பட்டுவந்தன. 'பௌர்ணமி' முழு நிலவு (full moon) என்றும், 'அமாவாசை' புது நிலவு (new moon) என்றும் அழைக்கப்பட்டன. ஒவ்வொரு 'அமாவாசை' அதாவது 'புது நிலவின்' (new moon) தொடக்கத்தின் போது, புதிய மாதத்தின் தொடக்கமும் கணக்கிடப்பட்டுவந்தது.
'நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்' (1 நாளா. 23:30) என்று கர்த்தரை ஆராதிக்கும் சமயத்திற்குள்ளும் 'அமாவாசை' இடம்பெற்றிருப்பதற்குக் காரணம், அது யூதர்களது புதிய மாதத்தின் தொடக்கம் என்பதினாலேயே. புதிய மாதத்தின் தொடக்கத்திலே, ஜனங்கள் விருந்து உண்டு மகிழ்வதும் வழக்கமாயிருந்தது. இதனையே தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம்நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும் (1 சாமு. 20:5; 20:18) என்று சாமுவேலின் புஸ்தகத்தில் நாம் வாசிக்கின்றோம். மேலும், தன் மகன் மரித்துப்போனதை அறிந்த கனம் பொருந்திய ஸ்திரீயாகிய சூனேமியாள், தேவ மனிதனாகிய எலிசாவினிடத்தில் செல்ல முற்பட்டபோது, அவளது கணவன் அவளை நோக்கி, 'இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன? (2 இராஜா. 4:23) என்று கேட்பதையும் வேதத்தில் வாசிக்கின்றோமே. மாதங்கள் எப்போது முடிவடைகின்றன, புதிய மாதங்கள் எப்போது தொடங்குகின்றன என்பதை, சூரியக் கடிகாரத்திற்கு ஈடாக மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் கணிக்கக்கூடிய மனிதர்களும் அவர்களுக்குள் காணப்பட்டனர் என்பது இன்றைய விஞ்ஞானிகளும் வியக்கும் விசயமாகவே பேசப்படுகின்றது. (ஏசா. 47:13)
வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது (ஆதி. 1:14) என்றுதானே கூறுகின்றார் கர்த்தர்.
பாபிலோன் சிறையிருப்பிற்கு முன் யூதர்களது பழக்கத்திலிருந்த 'ஆபிப்' (யாத். 12:2; 13:4), 'சீப்' (1 இராஜா. 6:1), 'ஏத்தானீம்' (1 இராஜா. 8:2) மற்றும் 'பூல்' (1 இராஜா. 6:38) ஆகிய மாதங்களின் பெயர்களை வேதத்தில் நாம் வாசிக்கின்றபோதிலும், பாபிலோனின் சிறையிருப்பிற்குப் பின், யூதர்கள் கைக்கொண்டுவந்த 12 மாதங்களின் பெயர்கள், ‘Tishri, Cheshvan, Kislev, Tevet, Shevat, Adar, Nisan, Iyar, Sivan, Tammuz, Av, and Elul’ என்று மாற்றி அழைக்கப்பட்டன. யூதர்களின் வருடத்தில், 'Tishri - திஸ்ரி' என்பது முதல் மாதமாகக் கருதப்பட்டுவந்தபோதிலும், எகிப்திலே நானூற்று முப்பது வருடங்கள் அடிமைகளாகத் தங்கள் வாழ்க்கையினைக் கழித்த தேவ ஜனமாகிய இஸ்ரவேல் மக்கள், 'ஆபிப்' மாதத்தின் 14-ம் தேதி (அதாவது, பாபிலோனின் சிறையிருப்பிற்குப் பின் 'நிசான்' என்று மாற்றி அழைக்கப்பட்ட 'ஆபீப்' மாதத்தின்' 14-ம் தேதி) எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்டபோது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக (யாத். 12:1,2). ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள் (யாத். 13:4) கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே (யாத். 12:42) என்று கூறுகின்றார்.
பிரியமானவர்களே! எகிப்திலிருந்து அதாவது பாவத்திலிருந்து நாம் விடுதலையாகாதவரை, நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய வருடம் பிறக்கப்போவதில்லை; எகிப்திலிருந்து புறப்பட்ட மாதம், இஸ்ரவேல் மக்களுக்கு வருடத்தின் முதல் மாதமாக மாற்றப்பட்டதுபோல, பாவத்திலிருந்து விடுதலையடைந்து, ஆவிக்குரிய வருடத்தை நாமும் ஆரம்பிக்கவேண்டுமே. அப்படி ஆரம்பித்தால் மாத்திரமே, 'அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்' (லூக். 15:10) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையினால் நிறைவேறும்.
'பஸ்கா' விடுதலையின் அடையாளம்
எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையாக்கப்பட்ட 'ஆபிப்' மாதத்தில், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள். ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள். பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.
அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக. அதைப் புசிக்கவேண்டடிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா (யாத். 12:3-11) என்று கூறுகின்றார். எகிப்திலிருந்து விடுதலையடைந்த நாளிலேயே பஸ்கா பலி செலுத்தப்பட்டது. பஸ்கா என்பது ஆங்கிலத்தில் 'Passover' 'கடந்து செல்லுதல்' என்றும் கிரேக்க மொழியில் 'Pascha' என்றும் அழைக்கப்படுகின்றது.
அதுமாத்திரமல்ல, அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள். புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான். முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம். புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள். முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள். ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான். புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றும் கட்டளையிடுகின்றார் கர்த்தர். (யாத். 12:14-20)
'பஸ்கா' நாளும், பஸ்காவின்போது செலுத்தப்படுகின்ற பலியும் குறிப்பிட்டுக் கூறுவது என்ன? பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, பரிசுத்தத்திற்கு நேராக நாம் பயணிக்கவேண்டும் என்பதே. எகிப்தியரைச் சங்கரிக்கும்படியாகப் புறப்பட்டு வருகின்ற தேவனின் சங்காரம், என் வீட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்று நாம் நினைப்போமென்றால், நம்முடைய பாவங்களுக்காகப் பலியான யெகோவா தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நம்முடைய வாழ்க்கை கழுவப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு கழுவப்பட்டவர்களைக் குறித்தே, 'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் என்றும், அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்' (யோவான் 1:12,13) என்றும் வாசிக்கின்றோம். தாயின் கருவிலிருந்து, தரையிலே பிறந்த நாளை எத்தனையாய் நாம் கொண்டாடி மற்றோர்களுடன் இனிப்புகளைப் பறிமாறி மகிழ்ந்தாலும், தேவனால் பிறக்கவில்லையென்றால், பரலோகம் மகிழாது. மாம்சத்தின்படி பெற்றோருக்கு நாம் பிள்ளைகளாயிருக்கக் கூடும்; ஆனால், பரமப் பிதாவுக்குப் பிள்ளைகளாயிருக்கமாட்டோம். பெற்றோரின் வீடும் வாசலும், நமக்கு எப்போதும் திறந்திருக்கலாம்; உற்றார் உறவினர்கள் எல்லோரும் தங்கள் இல்லத்திற்குள் நம்மை உள்ளே வர அனுமதிக்கலாம்; ஆனால், பிதாவுக்குப் பிள்ளைகளாக மாறாவிடில், பரலோகத்திற்குள் நாம் உட்புக இயலாது; அது நமக்குப் பூட்டப்பட்டதாகவே காட்சியளிக்கும். நம்முடைய மாம்சீகப் பிறப்பு மனிதர்கள் மத்தியில் மகிழ்வைத் தந்தாலும், நம்முடைய மறுபிறப்பினாலேயே பரலோகத்தில் மகிழ்ச்சி உண்டாகும், பரலோகம் களிகூரும்.
இவ்வுலகத்தின் இன்பத்தை மாத்திரமே கணக்கில் கொண்டு, கருத்தில் கொண்டு, மறுபிறப்பையும் அத்துடன் மறுவுலக வாழ்வையும் மறந்தவர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருப்போமென்றால் இன்றே மனந்திரும்பி, பாவ மன்னிப்பின் நிச்சயத்தினைப் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். 'பஸ்கா' நமக்காகப் பலியிடப்பட்டிருந்தும், பாவத்திலேயே நாம் வாழ்ந்துகொண்டிருப்போமென்றால், நம்முடைய வாழ்க்கை பரிதாபமாகிவிடுவதோடு, பரலோகத்திற்குத் தூரமாகிவிடுமே!
ஆசரிப்பும் ஆட்டுக்குட்டியும்
இப்படிப்பட்ட பஸ்காவின் பலிக்கும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கும் இடையிலான ஒற்றுமைகளையும் கூடவே நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.
யோவான் இயேசு கிறிஸ்துவை தன்னிடத்தில் வரக்கண்டபோது, 'இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' (யோவான் 1:29) என்றுதானே அவரை அறிமுகப்படுத்தினான். அதுமாத்திரமல்ல, வெளிப்படுத்தின விசேஷம் முழுவதிலும் இயேசு கிறிஸ்து 'ஆட்டுக்குட்டியானவர்' என்றுதானே அழைக்கப்படுகின்றார்.
மேலும், என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் (யோவான் 6:54-58) என்றும், நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவா 10:11) என்றும், அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் (மத். 20:28) என்றும்தானே தன்னைக் குறித்து இயேசு கிறிஸ்துவும் அறிமுகப்படுத்துகின்றார்.
1. பஸ்கா ஆட்டுக்குட்டி பழுதற்றதாய் இருக்கவேண்டும் (யாத். 12:5); அதற்கு ஒப்பாக, 'என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?' (யோவான் 8:46)என்று இயேசு கிறிஸ்து கூறினாரே.
2. இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் பஸ்காவை ஆசரித்தபோது, ஈசோப்பு பயன்படுத்தப்பட்டது (யாத். 12:22); அவ்வாறே, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, அவருக்கு முன்பாக ஈசோப்புத் தண்டு நீட்டப்பட்டது (யோவான் 19:29).
3. பஸ்கா ஆட்டுக்குட்டியின் ஒரு எலும்பும் முறிக்கப்படக்கூடாது (யாத். 12:46); அவ்வாறே, இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது, அவரது கால் எலும்புகள் முறிக்கப்படவில்லை. (யோவான் 19:33)
4. பஸ்கா கொண்டாடப்பட்டபோது, எகிப்திலே எகிப்தியரின் தலைப் பிள்ளைகள் சங்கரிக்கப்பட்டனர் (யாத். 12:29); ஆனால், இஸ்ரவேல் புத்திரரிடத்திலோ, இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார் தேவன் (யாத். 13:2). 'தேவன் தன்னுடைய ஒரே பேறான குமாரனை நமக்காகத் தந்தருளினதுபோல', நாமும் நம்முடைய பிள்ளைகளை அவருக்காகத் தரவேண்டும் என்ற தலைமுறையினைச் சார்ந்து நிற்கும் சட்டத்தினையும் இந்த பஸ்கா பண்டிகை நமக்கு வெளிப்படுத்துகின்றதல்லவா!
5. அதுமாத்திரமல்ல, அன்று இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானபோது, எகிப்தியர்களின் 'தலைப் பிள்ளைகள்' கர்த்தரால் சங்கரிக்கப்பட்டதை மனதில் கொண்ட சத்துரு, இஸ்ரவேல் ஜனங்களை அழிக்கும்படியாக, பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டதைப் (யாத் 1:22) போன்ற சம்பவத்தினை, பாவத்தின் அடிமைத்தனத்திலிருக்கும் ஜனங்களை விடுவிக்க பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்து பிறந்தபோது திட்டமிட்டுச் செய்தானே. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான் (மத். 2:16) என்று வாசிக்கின்றோமே.
மேலும், இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, 'அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்' (யோவான் 19:31) என்ற வசனம், 'பஸ்கா அன்றே இயேசு சிலுவையில் பலியானார் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றல்லவா; பஸ்கா பலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து வரும் முதல் நாள் 'பெரிய ஓய்வு நாள்' என்று அழைக்கப்பட்டது (பஸ்கா நிசான் 14 என்றால் பெரிய ஓய்வு நாள் என்பது, அதைத் தொடர்ந்து வரும் முதல் நாள்; இது வழக்கமான ஓய்வுநாள் அல்ல, வருடத்திற்கு ஒருமுறை அனுசரிக்கப்படும் பெரிய ஓய்வுநாள்). ஆங்கில வேதாகமத்தில், இப்பதம் great sabbath, very special sabbath, high sabbath என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது, 'பஸ்காவின் பலி இயேசுவே' என்பதை எத்தனை உறுதியாய் நமக்கு நிரூபிக்கின்றது.
அதுமாத்திரமல்ல, 'இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்' (மத். 26:2) என்று சீஷர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளும், பஸ்காவின் நாளன்று பலியாகவிருப்பது தான்தான் என்பதை அவர்களுக்கு வெளிப்படச்செய்கின்தே. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டபோது, இயேசு கிறிஸ்து அவர்களை நோக்கி: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் (மத் 26:17,18) என்று சொல்லுகின்றாரே.
பஸ்காவாகப் பலியாகவிருப்பது தங்களோடு கூட பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு கிறிஸ்துதான் என்பதை அத்தருணத்தில் சீஷர்களும் அறிந்துகொள்ளாதிருந்தார்களே! பஸ்காவாக தான் பலியாகவிருப்பதின் அர்த்தத்தை சீஷர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, 'அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்' (மத். 26:26-29) என்றாரே. பலியோடு பந்தியிருந்தும், அவர் பிடிக்கப்பட்டபோது, தாங்கள் பலியாகிவிடக்கூடாது என்று அவர்கள் ஓடிவிட்டார்களே! (மத். 26:56). பந்தியிலிருக்க மாத்திரமல்ல, அவருக்காக பலியாகவும் அழைக்கப்பட்டவர்கள் நாம் என்பதை மறந்துவிடக்கூடாது. சத்துருவின் கையிலிருந்து நாம் விடுதலையான இப்படிப்பட்ட பஸ்காவை நினைவுகூரும்படியாகவே இன்றும் நாம் கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுகின்றோம்.
பஸ்கா என்பது எகிப்திலிருந்து விடுதலையான இஸ்ரவேலருக்கு மட்டும்தானோ? யூதர்களுக்கு மட்டும்தானோ? அல்லவே. 'ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது' (ரோமர் 2:8,29) என்று பவுல் எத்தனையாய் உறுதிப்படுத்துகின்றார். இதைத்தானே கொலோசெயருக்கு எழுதுகின்;றபோதும், 'தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாத வனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமா யிருக்கிறார்' (கொலோ. 3:10,11) என்று குறிப்பிடுகின்றார். மேலும், 'நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடேஅல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்' (1கொரி 5:6-8) என்றும் கூறத் தவறவில்லையே; ஆம், பஸ்கா என்பது பிதாவின் பிள்ளைகளின் பண்டிகை.
அரிக்கட்டும், ஆத்துமாக்களும்
பஸ்காவைத் தொடர்ந்து செய்யப்படும் மற்றும் ஒரு நிழ்வினையும் நாம் மனதில் நிறுத்தவேண்டியது அவசியம். 'நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும்' (லேவி. 23:10,11) என்று கட்டளையிட்டிருந்தார் ஆண்டவர்.
'வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்' (யோபு 41:11) என்றும், 'நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே' (சங். 50:12) என்றும், 'வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி' (ஏசா. 66:1) என்றும் 'தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்?' (யோபு 41:11) என்றும் கூறுகின்றார் தேவன்; இதனையே, 'தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?' (ரோமர் 11:35) என்று உறுதிப்படுத்துகின்றார் பவுல்.
இப்படியிருக்க, பூமிக்கடுத்த பொருட்களைக் கொடுத்துவிடுவதினால் மாத்திரம் பரலோகத்திலிருக்கும் பிதாவின் மனம் திருப்தியடைந்துவிடாது என்பது நிச்சயம்; அவரிடத்திலிருந்து பெற்றுக் கொண்டவைகளைத்தான் அவருக்குக் கொடுக்கின்றோம். ஆனால், இந்த பண்டிகையின் நாட்களிலோ, தன்னுடைய சொந்த குமாரனையே 'விலையாகக் கொடுத்தும்' இன்னமும் தனது கரங்களில் வந்து சேராத 'அரிக்கட்டுகளாகிய ஆத்துமாக்களையே' அவர் எதிர்பார்க்கின்றார் என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டுமே.
நம்முடைய பாவங்களுக்காக பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய 'இயேசு கிறிஸ்து' சிலுவையில் பலியானார் என்பதை நினைத்து நாம் மாத்திரம் ஆனந்திப்பதோடு பண்டிகையை நிறுத்திக்கொள்ளலாமோ? வயல்வெளியில் இருக்கும் 'கதிர்களாகிய ஆத்துமாக்களையும்' விரைவில் அறுத்து அசைவாட்டும் பலியாக அவரது சந்நிதிக்கு கொண்டுவரவேண்டுமே; பஸ்காவின் இந்த மறுபக்கத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது.
ஆழிந்துபோன அடையாளங்கள்
பஸ்காவின் பலி எப்படியிருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததோடு மாத்திரமல்ல, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா (யாத் 12:11) என்று அதனைப் புசிக்கும் விதத்தையும் கூடவே கற்றுக்கொடுத்தார் கர்த்தர்.
'அரைகளில் கச்சை' 'கால்களில் பாதரட்சை' மற்றும் 'கைகளில் தடி' என இம்மூன்றும் கற்றுத்தரும் சத்தியத்தையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டுமே. நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும் (ஏசா. 11:5) என்றே ஆண்டவரைக் குறித்து வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். 'கச்சை' என்பது நம்மை நிர்வாணிகளாகக் காணப்படாதபடிக்குக் காப்பது மாத்திரமல்ல, சத்துருவோடு போராடக்கூடிய ஆயுதங்களையும் உள்ளடக்கிக்கொள்ளக்கூடிய ஒன்று. இரட்சிப்பின் வஸ்திரம் என்று அதனை நாம் வர்ணித்தாலும், பாவத்தோடும் மற்றும் சத்துருக்களோடும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆயுதங்கள் அதில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கூடவே நாம் அறிந்துகொள்ளவேண்டும் அல்லவா!
இதனையே, சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபே. 6:14-17) என்று எழுதுகின்றார் பவுல்.
மேலும், அந்த எகிப்தியன் கையில் ஓரு ஈட்டி இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான் (2 சாமு. 23:21) என்று தாவீதைக் குறித்து வாசிக்கின்றோமே, எதிரியைச் சந்திக்கச் செல்லும்போது எடுத்துச் சென்ற ஆயுதமல்லவா இது; என்றாலும், கூழாங்கல்லைக் குறித்து அதிகம் பேசிக்கொள்ளும் நாம், சில நேரங்களில் தடியையும் கூடச் கொண்டுசென்றான் என்பதை நினைவில் கொள்ள மறந்துவிடுகின்றோம்.
'கச்சை' 'பாதரட்சை' 'தடி' இம்மூன்றும் நமது பாதுகாப்பிற்காக மாத்திரல்லாமல், சத்துருவினிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும்படியாகவும் உபயோகப்படுகின்றது என்பதுதானே பஸ்காவை ஆசரிக்கும் விதம் வெளிப்படுத்தும் ஆவிக்குரிய சத்தியம்.
அதுமாத்திரமல்ல, கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார் (யாத். 13:9) என்றும் கூறுகின்றார் கர்த்தர். 'கையிலே ஒரு அடையாளம்' என்ற வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் “Amulet" “Tephillin” “Phylacteries” என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனையே, 'அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது' (உபா. 6:8) என்றும், 'நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து' (உபா. 11:19) என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார். இதனை மனதில் கொண்டே சாலொமோனும், 'கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்' (நீதி. 3:3) என்று எழுதுகின்றார்.
பஸ்காவின்போது, யெகோவா தேவன் செய்யச் சொன்ன இந்தக் காரியங்கள் இக்கடைசி நாட்களில் மறக்கப்பட்டுப்போயிற்றே! அந்திக்கிறிஸ்துவின் நாட்களில், இதன் போலியான மாற்றுருவத்தினைத்தானே அந்த மிருகம் உண்டாக்குகின்றது என்று வேதம் நமக்கு வெளிப்படுத்துகின்றது. 'அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது' (வெளி. 13:16,17) என்று வாசிக்கின்றோமே.
அதுமாத்திரமல்ல, எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையாக்கப்பட்ட நாளை ஆசரிக்கவிடாதபடி, 'பஸ்கா' என்ற சொல்லையே 'ஈஸ்டர்' என்று தந்திரமாக மாற்றிவிட்டான் சத்துரு. KJV 1611 ஆங்கில வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டபோது, அப்போஸ்தலர் 12:4-ல் 'பஸ்கா' என்ற வார்த்தை 'ஈஸ்டர்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.
'ஈஸ்டர்' "Eostre or Eostrae" என்பது Anglo-Saxon மக்களால் அழைக்கப்பட்ட, வசந்தகாலத்தையும், இனப்பெருக்கத்தையும் மற்றும் பாலுறவினையும் குறிக்கும் ஓர் ஜெர்மானிய தேவதையின் பெயர். 'ஈஸ்டர்' தினத்தன்று 'உயிர்த்தெழுதல்' என்ற பெயரில் முக்கியப்படுத்தப்படும் 'முயலும்' 'முட்டையும்' வெளிப்படுத்துவதும் இனப்பெருக்கத்திற்கடுத்த சிந்தையினையே. 'கர்த்தருக்குப் பண்டிகை' என்ற பெயரில் இன்று கிறிஸ்தவர்களையும் 'சத்துருவின் காற்று' சுழற்றிச் சுழற்றி அடித்துச் சென்றுவிட்டது வேதனையான நிகழ்வே. யூதர்கள் நிசான் மாதம் 14-ம் தேதி முதல் 21-ம் தேதிவரை 'பஸ்கா' பண்டிகையை ஆசரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்; ஆனால், அரசன் கான்ஸ்டன்டைன் காலத்தில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட 'ரோம கிறிஸ்தவர்கள்' 'ஈஸ்டர்' தினத்தை ஆசரிப்பதையே தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்; இவ்விரண்டு பண்டிகைகளும் வெவ்வேறு தினங்களில் ஆசரிக்கப்பட்டுவந்தினால், இரு பிரிவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாயிற்று. இதனைத் தீர்க்கும்படியாக, துருக்கியில் கூடிய முதல் “Nicaea 325" கூடுகையில், 'ஈஸ்டர்' என்பது, மார்ச் மாதம் (மார்ச் 21) ஏற்படும் Spring Equinox -ஐ தொடர்ந்து வரும் முழு நிலவிற்கு ('full moon' 'பௌர்ணமி') அடுத்த முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படவேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டது. மார்ச் 22-க்கும் ஏப்ரல் 25-க்கும் இடைப்பட்ட எந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையிலும் ஈஸ்டர் கொண்டாடப்படலாம் என்று வரையறுக்கப்பட்டது. ‘Equinox’ என்பது, சூரிய ஒளி பூமியின் மத்திய ரேகை வழியாகக் கடந்து செல்லும் நேரம்; அதாவது, வட மற்றும் தென் துருவங்கள் ஏறக்குறைய சமமான ஒளியினை சூரியனிடமிருந்து பெறும் நேரம். வருடத்தில் இருமுறை நடைபெறும் இந்நிகழ்வு, மார்ச் மாதத்தில் 'Spring Equinox' என்றும் செப்டம்பர் மாதத்தில் ‘Autumnal Equinox’ என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் விளைவாக, ஆண்டவர் கடைபிடிக்கும்படியாக் கட்டளையிட்ட 'பஸ்கா' ஆசரிப்பு அடங்கிப்போனது.
புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் (எரே. 10:2) என்பது கர்த்தர் நமக்கு விதித்திருக்கும் கட்டளையல்லவா; ஆனால், நாமோ, புறஜாதிகளின் மார்க்கத்தோடு நமது மார்க்கத்தைக் (பாதையைக்) கலந்துவிட்டோமே! கிறிஸ்து பிறப்பின் தினத்தன்று, கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல், 'கிறிஸ்மஸ் தாத்தா' வுக்கும் 'கிறிஸ்மஸ் மரத்துக்கும்' முக்கியத்துவம் தரப்படுவதுபோல, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளன்று பஸ்காவின் பலியாகிய கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் தரப்படாமல், 'முயலுக்கும்' 'முட்டைக்கும்' முக்கியத்துவம் தரப்படுவது படைத்தவரை எத்தனையாய் வருத்தமடையச் செய்யும்? முன்னோர்கள் கடைபிடித்தார்கள், முற்பிதாக்கள் பழக்கப்படுத்திவிட்டார்கள் என்று சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டிராமல், நித்திரையை விட்டு எழுந்திருப்போம். 'நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?' (மத். 15:3) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு நாமும் எச்சரிக்கையாயிருப்போம்.
இயேசு 'கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்' என்பதை நினைவுகூருவது தவறல்ல 'இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்' என்பதை நினைவுகூருவதும் தவறல்ல; ஆனால், அதனை அந்நிய தேவதையான 'ஈஸ்டர்' என்ற பெயரில் ஆசரிப்பது, ஆண்டவருக்கு அருவருப்பானது அல்லவா!










