கிறிஸ்துவில் அன்பான அண்ணனுக்கு, தம்பி எழுதுவது.
எனது நண்பனின் மூலமாக இரட்சிப்பில் வழிநடத்தப்பட்ட நான் எனது நண்பனோடு மற்றும் ஒரு குழுவோடு இணைந்து எனது பகுதியில் இப்போது ஊழியம் செய்துவருகிறேன். எனது நண்பன் உடன் வரும்போது, உற்சாகமாக எல்லா ஊழியங்களிலும் கலந்துகொள்ளுகிறேன்; ஆனால், தனியாக இருக்கும்போது சில வேளைகளில் சோர்ந்துபோய்விடுகின்றேன். ஏதாவது ஆலோசனை தர முடியுமா?
கிறிஸ்துவுக்குத் தூரமாக வாழ்ந்துகொண்டிருந்த உங்களை, கிறிஸ்துவின் பக்கமாக கவர்ந்திழுத்ததும், அவரை ஏற்றுக் கொள்ளவும் மற்றும் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவும் உதவியாயிருந்தது உங்களது நண்பனின் அன்றாட நடவடிக்கைகளும் மற்றும் சாட்சியுள்ள வாழ்க்கையுமே என்று எழுதியிருந்தீர்கள்; மிகுந்த சந்தோஷம்! தங்கள் வாலிபத்தை வல்லவரின் விரல்களில் வளைத்துக் கொடுத்து, மலைகளைப் பெயர்க்கும் பெலனோடு வாழும் இப்படிப்பட்ட நண்பர்களை உங்களுக்குத் தந்த ஆண்டவருக்கு நன்றி செலுத்துகின்றேன்! பெயர்க்கக்கூடாத மலைகளைப் போன்ற அநேக வாலிபர்களை, கிறிஸ்துவின் பக்கம் பெயர்த்துக் கொண்டுவரும் பணிகளை இத்தகைய வாலிபர்கள் இன்னும் செய்யட்டும்.
என்றபோதிலும், உங்கள் சந்தோஷத்தின் தொடர்ச்சி உங்களுக்கும் உங்கள் நண்பனுக்கும் இடையிலான உறவில் இல்லை; அந்த உறவு உங்களை இரட்சிப்பின் வழிகளில் உற்சாகப்படுத்தக்கூடும், ஊக்கப்படுத்தக்கூடும்; ஆனால், கிறிஸ்துவுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவிலேயே உங்கள் சந்தோஷத்தின் தொடர்ச்சி இருக்கிறது; அதிலேயே நீங்கள் உறுதியாருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ள முதலில் உங்களை நினைவுறுத்துகின்றேன். நண்பனின் மூலமாக இரட்சிப்பின் ஊற்று உங்கள் உள்ளத்தில் தோண்டப்பட்டிருக்கலாம், ஊற்றப்பட்டிருக்கலாம் அல்லது ஊற்றெடுத்துமிருக்கலாம். அது இயேசு கிறிஸ்துவை அவர்கள் உங்கள் உள்ளத்தில் ஊற்றியதின் விளைவு. ஆனால், உங்கள் சந்தோஷத்தை நிலைத்திருக்கச் செய்வதும், இரட்சிப்பின் வழிகளில் உங்களைக் களிகூரப்பண்ணுவதும், இரட்சிப்பின் பாத்திரத்துடன் தினம் தினம் அவரைத் தொழுதுகொள்ளச் செய்வதும் அவருடனான உறவே! இதனை நீங்கள் இழக்கும் வேளையில், இரட்சிப்பின் சந்தோஷமும் விலக்கி வைக்கப்பட்டுவிடும்.
கிறிஸ்துவுக்குள் அன்பான தம்பியே, "சேர்ந்திருப்பதைக் குறித்தும் (being united / togetherness) மற்றும் சார்ந்திருப்பதைக் குறித்தும்" (dependence / relying on) அத்துடன் இவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தினைக் குறித்தும் சற்று விளக்க விரும்புகிறேன்; புரிந்துகொள்ள கர்த்தர் உங்களுக்குத் உதவிசெய்வாராக!
நண்பனோடு நீங்கள் 'சேர்ந்திருக்கலாம்'; ஆனால், நீங்கள் சார்ந்திருக்கவேண்டியது, இயேசு கிறிஸ்துவையே! சேர்ந்திருப்பதற்கும் மற்றும் சார்ந்திருப்பதற்கும் உண்டாயிருக்கும் சில வித்தியாசங்களை உங்களுக்கு விளக்க முற்படுகின்றேன். ஒரு கொய்யா மரமும் ஒரு மா மரமும் ஒரு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தால், ஒன்றுபோலவே இரண்டிற்கும் தோட்டக்காரன் நீர் பாய்ச்சுவான்; இரண்டிற்கும் ஒன்றுபோலவே உரமிடுவான்; என்றபோதிலும், கொய்யா மரம் கொய்யா மரமாகவே வளரும், மாமரம் மாமரமாகவே வளரும்; ஆனால், இரண்டும் இருப்பது ஒரே தோட்டத்தில், இரண்டிற்கும் பாய்ச்சப்படுவது ஒரே நீர்தான்; இரண்டிற்கும் நீர் பாய்ச்சுபவரும் ஒரே தோட்டக்காரர்தான்; அப்படியிருக்க, ஏன் இந்த வித்தியாசம்? அது இறைவனால் இயற்கையாகவே அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. தண்ணீருக்கோ, விவசாயிக்கோ, உரத்திற்கோ அல்லது தோட்டக்காரனுக்கோ அந்த மரத்தின் தன்மையை மாற்றும் சக்தி இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அவ்வாறே, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் 'சில தனித் தன்மைகளை' வைத்திருக்கிறார் தேவன்; அத்தன்மையோடேயே அவன் வளர்ந்து, அவர் விரும்பும் கனிகளைக் கொடுக்கவேண்டுமென்றும் விரும்புகின்றார். பல்வேறு வரங்கள் உடையவர்கள், பல்வேறு தாலந்துகளைக் கொண்டவர்கள் மற்றும் பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவர்களோடு நீ சேர்ந்திருக்கலாம்; அதில் தவறேதுமில்லை. பல்வேறு வாத்தியங்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவைப் போல, இசைந்து, இணைந்து, இனிமையான ஒலியெழுப்புவது இறைவனுக்கு இன்பமானதே; எனினும், ஒவ்வொரு வாத்தியமும் தன் தன் ஒலியையே எழுப்புவதுதான் ஒழுக்கமும் ஒழுங்கும்கூட. அது இன்பமானதே!
ஆனால், சார்ந்திருக்கவேண்டியது 'கர்த்தர் ஒருவரை மாத்திரமே'. அதனை விட்டுவிட்டு, உடனிருப்பவர்களையே நீ சார்ந்திருந்தால், அவர்களாலேயே உனது வாழ்க்கையின் அடிகள் (steps) தீர்மானிக்கப்படத்தொடங்கும் என்பதை ஞாபகத்தில் கொள். ஒருவேளை அவர்கள் உன்னை ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நேராக வழிநடத்தி, உன்னை வளர்ச்சியின் பாதையிலும் ஊக்குவித்திருக்கலாம்; என்றபோதிலும், அவர்களின் வீழ்ச்சி உன்னையும் விழத்தள்ளிவிடும். ஒரு தோட்டத்தில் இருக்கும் ஒரு மரத்தின் மீது ஒட்டி வளரும் கொடியைப் போலவே உனது வாழ்க்கையும் காணப்படும். மரம் காய்ந்துபோனால், செடியும் காய்ந்துபோவதுபோல நண்பனைச் சார்ந்து நிற்கும் உனது வாழ்க்கையும் காய்ந்துபோகும். உன் நண்பன் சோர்ந்துபோகும் நேரத்தில், நீயும் சோர்ந்துபோய்விடுவாய்; உன் நண்பன் ஆலயத்திற்குப் போகத் தயங்கும்போது, நீயும் ஆலயத்திற்குப் போகத் தயங்குவாய்; உன் நண்பன் தேவனை விட்டும் வேதத்தை விட்டும் வழிவிலகத் தொடங்கும்போது, நீயும் தேவனை விட்டும் மற்றும் வேதத்தை விட்டும் வழிவிலகத் தொடங்குவாய். அவன் ஆவிக்குரிய வாழ்க்கையில் மரணமடையும்போது, நீயும் அருகிலேயே உன் ஆவிக்குரிய வாழ்க்கைக்குக் குழிதோண்டிவிடுவாய். உனது ஆவிக்குரிய வாழ்க்கையின் தொடக்கமும் முடிவும் நண்பனாலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும். இன்றைய நாட்களில், மற்றவர்களின் அதாவது உடனிருப்போரின் ஆவிக்குரிய வாழ்க்கையைப் பார்த்து தன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் தரத்தைக் குறைத்துக்கொள்ளுகின்ற வாலிபர்கள் அநேகர் உண்டு. 'அவர்கள் இப்படி இருக்கிறார்கள்; எனவே, நான் இப்படி இருக்கிறேன்' என்ற பதில் பரத்திற்கு ஒவ்வாத ஒன்று. மனிதர்களைப் போல மாறுவதற்கு உன்னை தேவன் அழைக்கவில்லை; அவரைப் போலவே மாறுவதற்கு அழைத்திருக்கிறார்.
உன் ஓட்டத்தில் அவர் உடனிருக்க ஜெபிக்கிறேன்; அவரையே சார்ந்துகொள், இன்பத்திலும் துன்பத்திலும் அவரையே நோக்கிப் பார். கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் (உபா. 31:8).
கருத்துகள்
கருத்துரையிடுக