Skip to main content

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து 

வேதம் சொல்லுவது என்ன?


www.sinegithan.in


  • விவாகரத்து செய்யலாமா? 
  • யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது?
  • தள்ளிவிடப்பட்டவரை விவாகம் செய்யலாமா? 
  • மறுமணம், வேதம் போதிப்பது என்ன? 

இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும். 

தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன் அவன். மனிதர்கள் இணையும்போது 'முப்புரி நூலாக' இடையிலே நின்று அவர்களது உறவின் பிணைப்பினை மேலும் மேலும் பெலப்படுத்துகின்றவர் படைத்தவராகிய யேகோவா தேவன்; ஆனால், சாத்தானோ, அத்தகையப் பிணைப்பினைப் பெலவீனப்படுத்தும்படியாகவும், ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துசெல்லும்படியாகவுமே நித்தம் நித்தம் புதிது புதிதாகக் காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றவன். இருவரது இணைப்பிற்கு இடையிலே வந்து நின்று, 'இரும்பாகிய அவர்களது உறவில் துரும்பாகவும் தூசியாகவும் படிந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த உறவின் மேல் துருவாக உருவமெடுத்து, உறவின் வலிமையையும் மற்றும் கடினத்தன்மையையும் இழக்கச் செய்து அதனை கசப்பாக்கி,  கல்லறைக்குச் செல்லும்வரை இருவரது இதயத்தையும் கல்லாக்கிவிடுகின்றான்.' சத்துருவின் இத்தகைய தந்திரத்தை அறியாமல், குடும்ப வாழ்க்கையின் பாதியில் பாதத்தை அவனது பாதையில் வைத்து, ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பாசத்தைப் பறிகொடுத்துவிட்டவர்களாகப் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கும் கணவனும் மனைவியும், குடும்பங்களும் இன்றைய நாட்களில் ஏராளம் ஏராளம்.  விவாகரத்து செய்தால், தேவசமுகத்தில் ஒரு மனிதனோடு பண்ணிய உடன்படிக்கை உடைந்துபோய்விடுமே என்ற உணர்வற்றவர்களாக, விவாகரத்து செய்துகொண்டு விடுதலை கிடைத்துவிட்டதைப் போலவும், தன் பக்கத்தில் வெற்றி கிடைத்துவிட்டதைப் போலவும் வாழ்க்கையிலிருந்து விழுந்துபோனவர்களின் சரித்திரங்கள் எத்தனை எத்தனை!


பலுகிப் பெருகும் பாத்திரங்கள்

    ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும், பூமியின் மேலுள்ள மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்கள் யாவையும் சிருஷ்டித்த பின்பு, 'நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்' என்று சொன்னதைத் தொடர்ந்து, தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (ஆதி. 1:26,27) என்று வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். பலுகிப் பெருகி பூமியை நிரப்பும்படியாகவும், பூமியனைத்தையும் ஆளும்படியாகவும் உண்டாக்கப்பட்டவன் மனிதன்; இதை நாம் மறந்துவிடக்கூடாது. 

மனிதனைச் சிருஷ்டிக்கவேண்டும் என்ற விருப்பம் தேவனுடைய மனதில் இருந்தபோதே, மனிதனைக் கொண்டே மனித சந்ததியைப் பெருக்கவேண்டும் என்ற விரிவாக்கத்திற்கடுத்த திட்டமும் இருந்தது என்பதையும் மேற்கண்ட வசனங்கள் கூடவே நமக்கு வெளிப்படுத்துகின்றதே. 'மனுஷனை' என்று அவர் சொல்வதைத் தொடர்ந்து 'அவர்கள்' என்றும் 'ஆளக்கடவர்கள்' என்றும்; 'மனுஷனை' 'அவனை' என்று சொல்வதைத் தொடர்ந்து 'ஆணும் பெண்ணுமாக' என்றும் மற்றும் 'அவர்களை' என்றும் சொல்லுவதோடு நிறுத்திவிடாமல், தனது விருப்பத்தையும், திட்டத்தையும், சித்தத்தையும் தான் சிருஷ்டித்த மனுஷனும் அறிந்துகொள்ளவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணதோடு, அவர்களையும் நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்றும் சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் (ஆதி. 1:28) என்று வாசிக்கின்றோமே. 

    மனிதர்களுக்கான உணவைத் திட்டம் பண்ணுவதிலும்கூட, 'இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது (ஆதி. 1:29) என்று பலுகிப் பெருகுபவைகளைத்தானே புசிக்கும்படியாகக் கூறுகின்றார். மனிதனுடைய சிருஷ்டிப்பினைக் குறித்து மல்கியா தீர்க்கதரிசியின் மூலமாக வெளிப்படும் வார்த்தைகளும், 'அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே' (மல். 2:15) என்று, ஒருவனாய்ப் படைக்கப்பட்டிருந்தாலும், 'பலுகிப் பெருகும்படியாகவே படைக்கப்பட்டவன் மனிதன்' என்பதனை உறுதிப்படுத்துகின்றதே. அதுமாத்திரமல்ல, 'மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்' (ஆதி. 2:18) என்ற தேவனது வார்த்தைகள், பலுகிப் பெருகுவதற்கான பாத்திரமாகவே துணையாகிய ஏவாள் உருவாக்கப்படுவதின் உண்மையையும் நமக்கு வெளிப்படுத்துகின்றல்லவா! 

மண்ணினால் உருவாக்கப்பட்ட ஆதாமுக்கு மனிதனாக வாழ்க்கை கொடுத்து, அவனது வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் வசிப்பிடத்தையும் அழகிய தோட்டமாக வடிவமைத்துக் கொடுத்து, ஆதாமின் வாழ்க்கையைத் தொடங்கிவைத்தார் ஆண்டவர். 'தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்' (ஆதி. 2:7) என்றும், தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார் (ஆதி. 2:8) என்றும், அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார் (ஆதி. 2:15) என்றும் முதல் மனிதனது சிருஷ்டிப்பின் சரித்திரத்தைக் எடுத்துக்கூறுகிறது சத்திய வேதம். 

    சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் ஆதாம் பேரிட்டபோதிலும், ஆதாமுக்கு ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை (ஆதி. 2:20) என்பதை ஆண்டவர் கண்டபோதிலும், ஆதாமின் தனிமை ஆண்டவரோடு செலவிடப்பட்டுக்கொண்டிருந்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனினும், 'மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்' (ஆதி. 2:18) என்கிறார் ஆண்டவர். ஆதாம் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டவன்; ஆனால், ஏவாளைக் குறித்தோ, 'இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி எனப்படுவாள்' (ஆதி. 2:23) என்று கூறுகின்றான் ஆதாம். அப்போஸ்தலனாகிய பவுலும், 'முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்' (1தீமோ. 2:13) என்று தனது நிருபத்தில் சுட்டிக்காட்டுகின்றாரே. ஆதாம் ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்ட பின்னரே, ஏவாள் உருவாக்கப்படுகின்றாள். 

ஏவாள் உருவாக்கப்பட்டதன் காரணத்தை, 'துணை' (ஆதி. 2:18,20) என்றும் 'மனைவி' (ஆதி. 2:24,25) என்றும் இரண்டு வார்த்தைகளில் வேதம் விவரித்துக் கூறுகின்றது. பூமியையும்  மற்றும் பூமியிலுள்ளவைகளையும், வானத்தையும் மற்றும் வானத்திலுள்ளவைகளையும் ஆறு நாட்களுக்குள் சிருஷ்டித்து, ஏழாம் நாளிலே தேவன் ஓய்ந்திருந்தார் (ஆதி. 2:2). ஆனால், ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை (ஆதி. 2:19,20) என்றே வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். அப்படியென்றால், ஆதாமும் ஏவாளும் ஒன்றாக உருவாக்கப்படவில்லை என்பதை நாம் உறுதிசெய்துகொள்ளமுடியும்; அவ்வாறே, ஏவாள் சிருஷ்டிக்கப்படும்வரை ஆதாம்  தனிமையாகவே இருந்தான் என்பதையும் நாம் அறிந்துகொள்ளமுடியும். ஆதாம் 930 வருஷங்கள் உயிரோடு இருந்தான் (ஆதி. 5:5); ஆனால், ஏவாளின் காலத்தைக் குறித்து வேதம் எதுவும் நமக்கு எடுத்துக்கூறவில்லை. என்றபோதிலும், 'துணை' 'மனைவி' மற்றும் 'மனித சந்ததியின் தொடக்கம்' ஆகிய இம்முப்பெரும் பணிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தவள் ஏவாள் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். 


மூலைக்லுடன் முறியும் உறவு


அதுமாத்திரமல்ல, 'நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள்' என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்ததை (ஆதி. 1:28) அறிந்த சாத்தான், அந்த ஆசீர்வாதத்திற்கு விரோதமாகக் கிரியை செய்யவும் ஆரம்பித்தான். ஆதாமும் ஏவாளும் ஆசீர்வதிக்கப்படுவதைத் தடுக்கவேண்டுமென்றால், ஆசீர்வதிப்பவருக்கும் அவர்களுக்கும் இடையிலிருக்கும் உறவினை முதலில் உடைக்கவேண்டும் என்பதை அறிந்த சாத்தான், புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்ன மரத்தின் கனியைப் பறித்து புசிக்கச் செய்து,   ஏவாளின் மூலமாக தனது திட்டத்தினை நிறைவேற்றி முடித்தான். 

நம்முடைய வாழ்க்கையிலும் தேவனுக்கும் நமக்கும் இடையிலுள்ள உறவினையே முதலில் உடைக்க சத்துரு முற்படுகின்றான். ஆலய ஆராதனை, குடும்ப ஜெபம், தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்க்கை ஆகியவற்றிற்கு இடையுறாக எழுந்து நிற்கின்றான். சில குடும்பங்களில், குடும்ப ஜெபத்தின்போது, கணவன் அல்லது கணவனும் பிள்ளைகளும் மாத்திரம் காணப்படுவதும், சில குடும்பங்களில் குடும்ப ஜெபத்தில் மனைவி அல்லது மனைவியும் பிள்ளைகளும் மாத்திரம் பங்குபெறுவதும் தேவனுக்கும் குடும்பத்திற்கும் இடையிலான உறவினை சத்துரு உடைக்கும் காரணிகள் என்பதை நாம் கணக்கில் கொள்ளவேண்டியது அவசியம். ஆதாமை விட்டு சற்று தூரத்திலிருக்கும்போதே ஏவாளை ஏய்த்துவிட்ட சாத்தான், குடும்பத்தின் ஆவிக்குரியவைகளுக்கு அடுத்தவைகளில் கவலையற்றவர்களாயிருக்கும் கணவனையோ அல்லது மனைவியையே ஏய்த்துவிடுவது எத்தனை நிச்சயம். தேவனுடனான உறவினை முறித்துப்போட்டுவிட்ட மனிதர்களாலேயே அநேக குடும்பங்களில் கணவன் - மனைவி - பிள்ளைகள் இடையிலான உறவு உதாசீனப்படுத்தப்பட்டு, ஒன்றுமில்லாமற்போய்விட்டது. 

    ஏவாள் உருவாக்கப்படுவதற்கு முன், ஏதேன் தோட்டத்தில் தனியாக இருந்த ஆதாமை சோதிக்கும்படியாக சாத்தான் வரவில்லை; ஆதாமுக்கும் தேவனுக்கும் இடையிலான உறவில் சாத்தானால் உள்நுழைய வழியில்லாதிருந்திருக்கக்கூடும், அல்லது சற்றாகிலும் சத்துரு நுழைவதற்கு அதாம் இடங்கொடாதிருந்திருக்கக்கூடும். ஆதாமுக்கும் படைத்தவராகிய தேவனுக்கும் இடையிலான உறவு அத்தனை வலுவாயிருந்திருக்கக்கூடும். என்றபோதிலும், ஏவாள் உருவாக்கப்பட்ட பின்னர், அவள் மூலமாக ஆதாமை வீழ்த்தும்படியாக சாத்தான் பாதை அமைக்கின்றான், தேவனோடு நல்லதோர் உறவில் இருக்கும் மனிதனை வீழ்த்த, அவனுக்குத் துணையாயிருக்கும் மனுஷியையே பயன்படுத்துகின்றான். அவள் மூலமாக மனித சந்ததியையே சரிந்துவிழச்செய்கின்றான். நம்முடைய வாழ்க்கையிலும், தனிமையில் நம்மோடு போராடி வெற்றிபெற இயலாவிடில், சத்துரு இப்படிப்பட்ட யுக்தியைப் பயன்படுத்தக்கூடும். துணையாயிருக்கும் மனிதர்களை தன் வசப்படுத்திக்கொண்டு, அவர்கள் மூலமாக நம்மை தேவனை விட்டுத் தூரப்படுத்திவிடக்கூடும். சில மனிதர்களின் வாழ்க்கையை வாய்க்காலாகப் பயன்படுத்த முயலும் சத்துருவின் செயலுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம். 

    சிம்சோன் இதற்கு மேலும் ஓர் உதாரணமல்லவா! சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்று சொல்லி, விருந்துண்கிற ஏழுநாளும் அவனுக்கு முன்பாக அழுதுகொண்டும், அலட்டிக்கொண்டும் இருந்ததினால், ஏழாம்நாளிலே அவன் அதை அவளுக்கு விடுவித்தான். சிம்சோன் அவளுக்கு விடுவித்ததும், அவள் உடனே சென்று தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்துவிட்டாளே (நியா. 14:16,17). சிம்சோனை வீழ்துவதற்குச் சத்துருக்கள் பாதை அமைத்துப் பயன்படுத்திக்கொண்டு பெண்தானே அவள். 

  உன்னதமான தேவனுக்கு ஆலயத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்ட சாலொமோனை, தனக்கும் கோவில்களைக் கட்ட உபயோகப்படுத்தவேண்டும் என்று நினைத்த சாத்தான், சாலொமோன் தேடித்  தேடித் துணையாக்கிக்கொண்ட பல பெண்களின் மூலமாக அதைச் சாதித்துவிட்டான் அல்லவா! 

வீட்டை விட்டு வெளியேற்றுவதுபோல, ஏதேன் தோட்டத்தை விட்டே ஆதாமையும் ஏவாளையும் தேவன் வெளியேற்றினாலும்,  கீழ்ப்படியாமையின் வாழ்க்கையினால், 'மரணம்' என்ற வலைக்குள் அவர்களது வாழ்க்கை மாட்டிக்கொண்டாலும், உலகத்தில் அவர்களது வாழ்நாட்கள் எண்ணப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டாலும், 'விழுந்துபோன அவர்களைக் கொண்டும் மனித சந்ததியை இந்த உலகத்தில் தேவன் விதைத்தார்' என்பது எத்தனை ஆச்சரியமான செய்தி! ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டாலும், தங்கள் குடும்ப வாழ்க்கையிலிருந்து அவர்கள் வெளியேறவில்லையே; இதுவே, சாத்தான் அவர்களை விழச்செய்திருந்தாலும், தேவ ஆசீர்வாதம் அவர்களது வாழ்க்கையில் தொடர்ந்ததற்கான காரணம். 

இன்றைய நாட்களிலோ, குடும்பத்தில் யாரோ ஒருவர் தவறு செய்துவிட்டார் என்பதற்காக, தேவன் உருவாக்கித் தந்த, தேவ சமுகத்தில் உருவாக்கப்பட்ட குடும்பத்தை உடைத்துவிட்டு, உருக்குலைத்துவிட்டு, பெற்றெடுத்தப் பிள்ளைகளைத் தவிக்கவிட்டுவிட்டு, அல்லது யாராவது ஒருவர் குழந்தைகளைப் பிரித்து தன்வசப்படுத்திக்கொண்டு ஆண்டவரின் ஆசீர்வாதத்திற்குத் தூரமாகப் பயணிக்க துரிதமாகச் செயல்படுகின்றார்களே! ஏதேன் தோட்டத்தை விட்டும், தேவ சமுகத்தை விட்டும் தூரமாக விரட்டப்பட்ட விழுந்துபோன ஆதாம் - ஏவாளின் சந்ததியின் வரிசையில்தானே, அவர்களை  'வீழ்த்தியவனை வீழ்த்தும் கிறிஸ்து பிறந்தார்'. அப்படியே நம்முடைய சந்ததியிலும் சாத்தானை ஜெயிக்கும் வீரர்களை தேவன் உருவாக்க முடியுமே. இதைத்தான், 'வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்' (சங். 127:4,5) என்று சங்கீரதக்காரன் எழுகின்றாரோ! நம்முடைய குடும்பத்தைக் குறித்து தேவன் வைத்திருக்கும் இத்தகைய திட்டத்திலிருந்து நாம் விலகிச்சென்றுவிடாமல், ஒருவருக்கொருவர் விரோதிகளாக அல்ல; ஒரே சரீரமாக வீரர்களாக சத்துருவுக்கு எதிரான போரில் வெற்றிபெற கர்த்தர் பெலன் தருவாராக. 


தள்ளிவிடுதலை வெறுக்கும் தேவன்


ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே (பிர. 4:9,10) என்பதுதானே சாலொமோனின் வார்த்தைகள். அப்படியிருக்க, விழுந்துவிட்டார் என்று கணவனையோ அல்லது விழுந்துவிட்டாள் என்று மனைவியையோ வீட்டை விட்டுத் துரத்திவிட்டால், அல்லது விழுந்துகிடக்கும் கணவனோ மனைவியோ வசிக்கும் வீட்டை விட்டு ஒருவர் வெளியேறிவிட்டால், 'தவறு செய்த கணவனையோ அல்லது தவறு செய்த மனைவியையோ தூக்கிவிடத் துணையிருக்காதே! ஒருவேளை அப்படிப்பட்டவர்களைத் தூக்கிவிடுவதற்காக, துணையாக மனைவியையோ அல்லது கணவனையோ கர்த்தர் கொடுத்திருக்கலாமே! இதனை புரிந்துகொள்ளத் தவறும் மனிதர்களே குடும்பத்தை விட்டுப் பிரிந்துசெல்வதில் கவனம் செலுத்துகின்றனர். ஆண்டவரின் சூத்திரத்திலிருந்து, சாத்தானின் சூழ்ச்சிக்குள்ளாக நாம் சிக்கிக்கொள்ளக்கூடாதே. 

தேசத்தைக் குறித்து பேசுகின்றபோதிலும், உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் பண்ணினாயே என்றும், ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் (மல். 2:14,15) என்றும் சொல்லும் தேவன் 'தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன்' (மல். 2:16) என்று சொல்லத் தவறவில்லையே. ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடைமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்யஒட்டாமல்; நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள் (மாற். 7:11-13) என்று பெற்றோர்களைத் தள்ளிவிடுவதைக் குறித்தும் இயேசு கிறிஸ்து கண்டித்துப் போதிக்கின்றாரே; அப்படியிருக்க, தள்ளிவிடுதல் கர்த்தருக்கு விரோதமானது என்பதை இன்றைய சமுதாயம் கண்டுகொள்ளாமல் வாழுவதெப்படி? 

பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன்  மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டபோது (மத். 19:3), இயேசு கிறிஸ்து அவர்களை நோக்கி, 'ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும் (ஆதி. 2:24), நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் (மத். 19:4-6) என்று சொன்னாரே. அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார்  (மத். 19:7) என்று அவர்கள் கேட்டபோது, அவர் அவர்களை நோக்கி, உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதய கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை (மத். 19:8) என்று சொன்னதோடு, ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன்  விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை  (வேசித்தனம் செய்தவளானாலும், வேசித்தனம் செய்யாதவளானாலும்) விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றாரே (மத். 19:9). அப்படியென்றால், வேசித்தன முகாந்தரமில்லாமல், தள்விவிடுவது வேதத்தின்படி செல்லுபடியாகாதே! அப்படி தள்ளிவிட்டு வேறோருத்தியை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டாலும், அது விவாகமல்ல விபச்சாரம்தானே! 'வேசித்தத்தில்' விழுந்துவிட்டால் மாத்திரம்தானே வேறொரு திருமணத்திற்கு வேத்தில் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றது; இதுதானே இயேசு கிறிஸ்துவின் போதனை. பத்துக் கட்டளைகளில் ஒன்றான 'விபசாரம் செய்யாதிருப்பாயாக' (யாத். 20:14) என்ற கட்டளை அனைவரும் அறிந்ததே; என்றாலும், திருமணத்திற்கடுத்த காரியத்தில் 'வேசித்தனம்' 'மரணம்' என்ற காரணங்களைத் தவிர்த்து பிற காரணங்களுக்காகப் பிரிந்துசென்று பிறரை மணமுடிக்கும் மனிதர்கள் இதனை மறந்துபோவது ஏன்?

அதுமாத்திரமல்ல, 'வேசித்தனஞ்செய்ததினிமித்தம் புருஷனால் தள்ளிவிடப்பட்ட ஒரு ஸ்திரீயை இன்னொரு மனிதன் தனது வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டாலும், வேசித்தனம் செய்யாதபோதிலும் புருஷனால் தள்ளிவிடப்பட்ட ஒரு ஸ்திரீயை இன்னொரு மனிதன் தனது வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டாலும் அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருக்கிறான்' என்பதை எத்தனை தெளிவாக இயேசு கிறிஸ்துவின் போதனை நமக்கு வெளிப்படுத்துகின்றது. என்றபோதிலும், இயேசு கிறிஸ்துவின் இந்த போதனைக்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காமல், வாழ்கையிலிருந்து வழுக்கிவிழுந்தவர்கள் எத்தனை பேர்?  கரங்களில் இருக்கும் வேதத்தில் எழுதப்பட்டிருக்கும் சத்தியத்திற்குச் செவிகொடாமல், கீழ்ப்படியவும் இருதயத்தில் இடங்கொடாமல், கர்த்தர் கற்றுக்கொடுத்த உபதேசங்களைக் காற்றில் பறக்கவிட்டுவருகின்றதே இன்றய தலைமுறை. 

அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின் படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல (ரோமர் 7:2,3) என்றும் மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங் காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள் (1கொரி. 7:39) என்றும் பவுல் தனது நிருபத்தில் எழுதுகின்றாரே; இதுதானே வேதம் போதிக்கும் நியதி. 

'வேசித்தனம்' (தான் செய்ததினால் அல்ல; தனது கணவன் அல்லது மனைவி செய்ததினால்) 'மரணம்' ஆகிய இரண்டு காரணங்களுக்காக மாத்திரமே மற்றொருவரை மணந்துகொள்ள வேதம் நமக்கு அனுமதி அளிக்கின்றது; இதற்கு மிஞ்சின அனைத்தும் பாவமே. 

    தேசத்தின் சட்டம் வழிவிடுகின்றது என்பதற்காக, சத்தியத்திலிருந்து நாம் வழி விலகிச் சென்றுவிடமுடியாதே. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் (ரோமர் 12:2) என்பதுதானே தேவப் பிள்ளைகளாகிய நமக்கு எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளை. சாதகமாக இருக்கின்ற இடத்தில் சட்டத்தையும், சந்தோஷமாக இருக்கும் இடத்தில் சத்தியத்தையும் நாம் எடுத்துக்கொள்ள இயலாத. இரண்டு எஜமானுக்கு உழியம் செய்ய ஒருவனாலும் கூடாது என்பதுதானே வேத நியதி. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தி, சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்ளக்கடவீர்கள் (தானி. 3:1,4,5) என்று சொன்னபோது, சகல ஜனங்களும் பணிந்துகொண்டார்கள்; என்றபோதிலும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற தேவப் பிள்ளைகள் பணிந்துகொள்ளவில்லையே. 

    எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி;, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணி, ராஜாவாகிய தரியு அந்தப் பத்திரத்திற்குக் கையெழுத்து வைத்துவிட்டபோதிலும் (தானி. 6:7,9), ராஜாவின் கட்டளையைக் குறித்து எவ்வளவும் கவலைப்படாத தானியேல், தினமும் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணினானே (தானி. 6:13). தேசத்தின் சட்டங்கள் சத்தியத்திற்கு விரோதமாயிருந்தால், சாகவும் ஆயத்தம் என்பதுதானே தானியேலின் வாழ்க்கை நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம். 

    ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான். ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு 'இப்படிச் செய்யவேண்டும'; என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை (எஸ்தர் 3:1,2) என்றுதானே மொர்தெகாயைக் குறித்து வாசிக்கின்றோம். 'இப்படிச் செய்யவேண்டும்' என்ற கட்டளை ஒருவேளை தேவப் பார்வையில் தவறாயிருந்திருக்கக்கூடும்; அதனாலேயே, மொர்தெகாய் ஆமானை வணங்கவில்லை. 

    உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல (எஸ்தர் 3:8) என்றுதானே ஆமானும் யூத ஜனங்களைக் குறித்து ராஜாவினிடத்தில் கூறுகின்றான். அப்படியிருக்க, நாம் மட்டும் 'வேதத்திற்கு விரோதமாயிருக்கும் தேசத்தின் சட்டங்களுக்கு' ஏன் இணங்கிச்செல்லவேண்டும்? 

வாழ்க்கையில் உண்டாகும் சிற்சில உராய்வுகளுக்கெல்லாம் உறவினை உதறி எறிந்துவிட்டு, தேவ சமுகத்தில் உண்டான பிணைப்பினைப் பற்றிக் கவலைகொள்ளாதவர்களாகப் பிரிந்துசென்று, புருஷன் உயிரோடிருக்கும்போதே அல்லது மனைவி உயிரோடிருக்கும்போதே மறுமணம் செய்துகொள்ளும் மனிதர்கள் இன்றைய நாட்களில் எத்தனைபேர்? அவ்வாறே, கணவனோ அல்லது மனைவியோ மரித்த பின்பு, மறுமணம் செய்துகொள்ளவும் வேதம் வாய்ப்பளித்திருந்தபோதிலும், வழிதிறந்து கொடுத்திருந்தபோதிலும் ஒருமுறை விவாகத்திற்காகவே தன் வாழ்க்கையை முற்றிலும் அர்ப்பணித்து, 'தனிமையாகவோ அல்லது தான் பெற்றெடுத்தப் பிள்ளைகளுடனோ' விலைக்கிரயமாகவே இந்த பூமியில் தனது ஓட்டத்தை நிறைவு செய்யும் மனைவிகளும் புருஷர்களும் உண்டே. 

விசுவாசியா? அவிசுவாசியா? 

விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள் (1கொரி. 7:10-13) என்று எழுதும் பவுல், ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார் (1கொரி. 7:15) என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லையே! விசுவாசிகள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வதைக் குறித்து அல்ல, அவிசுவாசிகள் அவர்களாகவே குடும்பத்தை விட்டுப் பிரிந்துசெல்வதைக் குறித்தே எழுதுகின்றார் பவுல். பவுலின் வார்த்தைகள், குடும்பத்தை விட்டுப் பிரிந்துசெல்லுபவர்களை 'அவிசுவாசி' என்ற வட்டத்திற்குள்ளும் அடக்குகின்றதோ! அவிசுவாசி குடும்பத்தை விட்டுப் பிரிந்துசென்றாலும், அந்த காரணத்திற்காக விசுவாசி வேறொரு விவாகம் செய்யமுடியாதே! 

கூடவே, அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன (1கொரி. 7:14) என்று ஏன் விசுவாசி பிரிந்துசெல்லக்கூடாது என்பதற்கான காரணத்தையும் பவுல் சுட்டிக்காட்ட பவுல் தவறவில்லை. ஆனால், இன்றைய நாட்களிலோ, வேதத்திற்கு விரோதமாகத்தானே விவாகங்களில் விவகாரங்கள் தலையெடுக்கின்றன. புருஷன் அவிசுவாசி அல்லது பாவி என்று விசுவாசியான கணவன் விலகிச் சென்றுவிடுவதும், மனைவி அவிசுவாசி அல்லது பாவி என்று கணவன் விலகிச் சென்றுவிடுவதும்தானே அரங்கேறிவருகின்றன. அநேக புருஷர்கள் அல்லது மனைவிகள் பரிசுத்தமாகாததற்குக் காரணம் இதுவே. உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள் (1கொரி. 7:5) என்ற, சீக்கிரம் அறாத, 'முப்புரி நூலைத்' (பிர. 4:2) திரிப்பதற்காக மாத்திரமே பிரிவு அனுமதிக்கப்படட்டும். 

'தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்'  (மத். 19:6) என்று சத்தியம் போதித்திருந்தபோதிலும், நீதிமன்றத்திற்குச் சென்று 'விவாகரத்து' பெற்று, 'குடும்பம்' என்ற அமைப்பை வீதியில் விட்டுச் செல்லும் மனிதர்கள் பெருகிவரும் காலம் இது. தேவசமுகத்தில், தேவ ஊழியர்கள் முன்னிலையில் விவாகத்தில் இணைக்கப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் பெறும் 'விவாகரத்துச் சான்றிதழ்' விண்ணகத்திற்கு முன் செல்லுபடியாகாதே; பரலோகம் அதை ஏற்றுக்கொள்ளாதே. வேதத்தை சுமக்கும் மக்களின் கைகள், விவாகரத்துச் சான்றிதழ்களைச் சுமக்குமென்றால், அவர்கள் வாழ்க்கை போலியானதே! 

Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க