முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழு ஊழியம்

கிறிஸ்துவுக்குள் அன்பான அண்ணனுக்கு,

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். குழு ஊழியத்தைப் பற்றி கேள்வி பதிலில் பகுதியில் நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன்; மிகவும் பிரயோஜனமாக இருந்தது. தற்பொழுது சக சகோதரர்களோடு இணைந்து, சிறுசிறு ஊழியங்களைச் செய்யத் தொடங்கியுள்ளேன். குழு ஊழியத்தில் நான் கடைபடிக்கவேண்டிய, அல்லது பின்பற்ற வேண்டிய பிற ஆலோசனைகள் ஏதாகிலும் உண்டா?


கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரனுக்கு,

ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். உங்களது தொடர் உரையாடுதல்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். உங்களது கேள்வியை வாசித்ததும், உடனே என் இதயத்தில் தேவன் கொடுத்த சில ஆலோசனைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். தேவன், உங்கள் வாழ்க்கைக்கு அவைகளை பயனுள்ளவைகளாக மாற்றித் தருவாராக.

ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது (பிரசங்கி 4:9-12) என்பவை, சாலமோன் மூலமாக தேவன் நமக்கு எழுதித் தந்திருக்கிற வார்த்தைகள். 

இந்த வசனங்களில் "பலனுண்டாகும்" "தூக்கிவிடுவான்" "சூடுண்டாகும்" "எதிர்த்து நிற்கலாம்" "முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது" போன்ற வார்த்தைகளை கவனத்தில் கொள்ள உங்களை ஞாபகப்படுத்துகிறேன்.

உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள் (லேவி. 26:8), அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி? (உமா. 32:30) போன்ற வசனங்கள் குழு ஊழியத்தினால் உண்டாகும் முழு பலனையும் வெளிக்காட்டுகின்றது. ஆம், இயேசு கிறிஸ்து சீஷர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினதற்கும் காரணம் இதுவே. "சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்" என்று (1சாமு. 18:7) என்று ஸ்திரீகள் பாடினது, தேவனுடைய துணையோடு அது சாத்தியமே என்பதை வெளிப்படுத்தின போதிலும், தேவனோடு இருக்கும் இரண்டு பேர்களைக் கொண்டும் தேவன் அதனைச் செய்து முடிக்கமுடியும் என்பது வேதம் நமக்குக் கற்றுத் தரும் பாடம். 

இரண்டாவதாக, ஊழியத்தின் ஓட்டத்தில் உண்டாகும் இடையூறுகளைக் கண்டு இளைத்துப் போகும் சூழ்நிலை வாழ்க்கையில் உண்டாகும்போது, பல்வேறு போராட்டங்களை கண்டு நாம் சோர்ந்து போகும்போது, தனியொரு மனிதனாக அதனைத் தாங்கும் பெலனுக்காகப் போராடுகையில், தேவன் நமக்கு உதவி செய்வது நிச்சயமே (சங். 37:24; நீதி. 24:16). என்ற போதிலும், உடனிருக்கும் உடனாளியின் மூலமாகவும் உதவி நம்மைத் தேடி வரும் என்பது வேதம் நமக்கு கற்றுத் தரும் பாடம். 

மூன்றாவதாக, ஆவிக்குரிய வாழ்க்கையில் அல்லது ஊழியத்தின் பாதையில், உற்சாகப்படுத்தவும் அனல்மூட்டிக்கொள்ளவும் ஒருவருடைய உதவி மற்றவருக்குத் தேவை; இதனை நாம் மறுக்கவோ அல்லது மறக்கவோ கூடாது. இதன் உள்ளான அர்த்தம், "ஒருவருடைய ஆவிக்குரிய வாழ்க்கை மற்றவருக்கு பயனுள்ளதாக அனல் உள்ளதாக இருக்கவேண்டும் என்பதே". இல்லையென்றால், ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு விடும் நிலைக்கும், அனலற்ற குளிர்ந்து போன நிலைக்கும் நாம் தள்ளப்பட்டு விடக்கூடும். பக்கத்தில் ஒரு கட்டை மில் நெருப்பு எரிந்து கொண்டேயிருந்தால், அனைவருக்கும் விறகிலும் அனல் பற்றிக்கொள்ளும். இந்த வாய்ப்பினை, குழு ஊழியங்கள் மாத்திரமே நமக்குக் கொடுக்க முடியும்.

நான்காவதாக, நம்மை மேற்கொள்ள வரும் சத்துருக்களோடு எதிர்த்து நிற்கவும் நமக்கு பலன் கிடைக்கும். ஊழியத்தின் பாதையில் முன்னேறிச் செல்லும்போது, தடைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் அநேக இடங்களில் உண்டாகக்கூடும். அத்தகைய நேரங்களில், பின்னிட்டுத் திரும்புவதா? முன்னேறிச் செல்வரா? அல்லது சத்துருக்களை எதிர்ப்பதா? போன்ற பல தரப்பட்ட கேள்விகள் நமது உள்ளத்தில் உண்டாகக்கூடும். எது எப்படி ஆயினும், தடைகளைக் கண்டு திரும்பிச் செல்ல அழைக்கப்பட்டவர்கள் அல்ல நாம்; முன்னேறிச் செல்லவே அழைக்கப் பட்டவர்கள். எனவே, முழங்காலில் யுத்தம் செய்து சத்துருவை எதிர்த்து நிற்க, குழுவாக இணைந்து நிற்போமென்றால், நிச்சயம் அது வெற்றியைத் தேடித் தரும். 

இறுதியாக, சக ஊழியர்களுடனோ, அல்லது குழு உடனோ உங்களை இணைக்கும் சக்தியாக, அதாவது முப்புரி நூலாக தேவனே இருக்க வேண்டும் என்பது வேதத்தின் மூலமாக தேவன் எழுதி தந்திருக்கும் தெளிவான ஆலோசனை. தேவனாகிய நூலை விட்டு விட்டு, வேறு எந்த காரணத்தை முன்னிறுத்தியும் உங்களது இணைப்பை அல்லது உறவை வலுப்படுத்த முயற்சிக்கவேண்டாம். 

அன்பாற சகோதரனே, மேற்கண்ட வசனத்தின் அடிப்படையிலான ஆலோசனை, உங்களது தற்போதைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று ஆண்டவருக்குள் நம்புகிறேன். தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக! 
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இறுதி நாளும், இரண்டு சொல்லும்

  நம்மைச் சுற்றி நடக்கும் காரியங்களைக் கண்டு நாம் சும்மா இருந்துவிடலாகாது, சத்தியத்துடன் அதைச் சம்மந்தப்படுத்திப் பார்த்தால், சமையம் நெருங்கிவிட்டது என்ற சத்தம் அவைகளில் ஒலிப்பதையும், இது கடைசிக்காலம் என்பது அந்த ஒலிக்குள் ஒளிந்திருப்பதையும் ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் அறிந்துகொள்ளவேண்டுமே.  'ஆதார்' என்றால் இன்று அறியாதோர் எவருமில்லை. 'ஆதார்' என்றால் ஓர் மனிதனைக் குறித்த ஆதாரம் என்றே நாம் சொல்லிக்கொண்டாலும், 'ஆதார்' என்ற சொல்லின் அடுத்த பக்கமும் நம் அறிவுக்கு அவசியம். ஆபீப் என்னும் மாதத்தில் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தன் ஜனத்தை விடுதலையாக்கிக் கொண்டுவந்தார் கர்த்தர். இதனை, தலைமுறை தலைமுறையாக நினைவுகூறும் வண்ணம், அதனையே வருடத்தின் முதல் மாதமாகவும் குறித்தார்; அதுவே புதுவருடம், 'ஆண்டவரின் ஆணைப்படி, எகிப்திலிருந்து (பாவத்திலிருந்து) விடுதலையாகாதவர்களுக்கு புதுவருடக் கொண்டாட்டத்தில் பங்கு இல்லை என்பது அதன் உள்ளர்த்தம்' ஆபீப் மாதத்தைத் தொடர்ந்தே பிற மாதங்கள் கணக்கிடப்பட்டன. எனினும், இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டுபோகப்பட்டபோது, அவர்களின் ...

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக...

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         பிரியமானவர்களே!  இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை'...