யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது. 'சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில் காணமுடியும். அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.
சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங்குகின்றான். ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவுசெய்தருளும் (ஆதி. 24:12) என்று தான் செல்லுகின்ற காரியம் வாய்கக, சாயங்காலமானவுடன் தேவ சமுகத்தில் வேண்டிநிற்கின்றானே. ஒரு நாளின் தொடக்கத்தை ஆண்டவரின் பாதத்திலேயே ஆரம்பிக்கவேண்டும் என்பதற்கான முன்னுதாரணங்கள்தானே இவைகள்.
இவ்வுலகத்தை விட்டு இயேசு கிறிஸ்து பிரியும் வேளை வந்தபோது, பாவிகளுக்காக பாவிகளால் சிலுவையில் அறையப்படவேண்டிய வேளை நெருங்கினபோது, தம்முடைய சீஷர்களை நோக்கி, இரண்டுநாளைக்குப் பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்று சொல்லுகின்றார் (மத். 26:2). பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டு பேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்; அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்ன படியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். சாயங்காலமானபோது (நிசான் மாதத்தின் 14-ம் நாளின் தொடக்கமான சாயங்காலத்தில்), அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்து (மாற். 14:12-17) அவர்களோடு பந்தியிருந்தார் (மத். 26:20) என்று வாசிக்கின்றோம்.
சீஷர்களோடு இயேசு கிறிஸ்து பஸ்காவை ஆசரித்ததைத் தொடர்ந்து, (மத். 26:17-29), அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போய் (மாற். 14:26), தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறத்திலுள்ள கெத்செமனே எனப்பட்ட இடத்திற்கு வந்தார்கள் (மாற். 14:32); அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான் (யோவான் 18:1,2). கெத்செமனே தோட்டத்திற்குச் செல்லும் வழியில் கிறிஸ்து தன்னுடைய சீஷர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள் (மத். 26:31) என்று சொன்னதோடு, உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் (மத். 26:33) என்று சொன்ன பேதுருவை நோக்கி, இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (மத். 26:34) என்றும் சொல்லுகின்றார்.
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்த அந்த நாள் (நிசான் மாதத்தின் 14-ம் நாள்) பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள் (யோவான் 19:31). யூதர்கள் கேட்டுக்கொண்டதின்படி, போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது (யோவான் 19:32-34). 'பெரிய ஓய்வுநாள்' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த ஓய்வு நாள், வழக்கமாக வாரந்தோறும் வருகின்ற வாரத்தின் ஏழாவது நாளான ஓய்வு நாள் அல்ல; மாறாக, பஸ்கா பலியிடப்பட்ட நாளான நிசான் மாதத்தின் 14-ம் நாளுக்கு அடுத்துவரும் 'வருடாந்திர பெரிய ஓய்வு நாள்' (great sabbath, very special sabbath, high sabbath); இதனை, நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, இந்த நாள் அந்த வாரத்தின் ஐந்தாம் நாளாக வந்தது; அதாவது நிசான் மாதத்தின் 15-ம் நாள்.
காலியான கல்லறையைப் பார்த்துவிட்டு வந்த ஸ்திரீகளின் வார்த்தைகளைக்கூட இயேசு கிறிஸ்துவோடு கூட இருந்த சீஷர்கள் நம்பவில்லையே! 'இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை (லூக். 24:11). சந்தேகப்பட்ட பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான் (லூக். 24:12) என்றுதான் வாசிக்கின்றோம்; 'விசுவாசித்தான்' 'நம்பினான்' என்று எழுதப்படவில்லையே. ஸ்திரீகள் சொன்னதை உடனே 'நம்பாததினாலேயே' பேதுரு எழுந்திருந்து 'அது உண்மையா?' என்று பார்க்க கல்லறையினிடத்திற்கு ஓடுகின்றான். தோமாவின் நிலையோ இன்னும் சற்று மோசமாயிருந்தது. மற்ற சீஷர்கள், கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னபோது, தோமா பிரதியுத்தரமாக, 'அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என்விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்' (யோவான் 20:25) என்கின்றானே!
அன்றையத்தினமே, அதாவது, காலியான கல்லறையை ஸ்திரீகள் பார்த்துவிட்டு வந்த அன்றையத் தினமே, அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள் (லூக். 24:13). அவர்களது பயணத்தின்போது, வழியிலே, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து அவர்களோடு இணைந்து, உரையாடிக்கொண்டு சென்றபோனபோதும் அவர்களது இருதயம் உணர்வடையவில்லை. 'எங்களுடனே தங்கியிரும்' (லூக். 24:29) என்ற அவர்களது வேண்டுகோளுக்கிணங்கி, இயேசு கிறிஸ்து அவர்களோடு சென்று பந்தியிருக்கையில், 'அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தபோது, அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள் (லூக். 24:31). இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது (லூக். 24:21) என்ற இந்த சீஷர்களின் வார்த்தைகள், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 'மூன்று நாட்கள் ஆகிவிட்டன' என்பதையும் கூடவே உறுதிப்படுத்துகின்றனவே. 'வாரத்தின் முதல்நாள்' என்றும் 'இன்று மூன்று நாளாகிறது' என்றும் சொல்லப்படும் வார்த்தைகள், வாரத்தின் கடைசி நாளும், ஏழாம் நாளுமாகிய ஓய்வு நாளையும் மற்றும் அதற்கு முன்னிருக்கும் இரண்டு நாட்களையும் குறிக்கின்றதல்லவா. அப்படியென்றால், வாரத்தின் 'நான்காம்' நாளின் முடிவில் அதாவது ஐந்தாம் நாளின் தொடக்கமான மாலை நேரத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று நாம் அறிந்துகொள்ள முடிகின்றதே.
இயேசு கிறிஸ்துவை சந்தித்த இந்த சீஷர்கள் எருசலேமுக்குத் திரும்பிப்போய், வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொல்லிக்கொண்டிருந்தபோது (லூக். 24:33,35), வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார் (யோவான் 20:19). என்றபோதிலும், அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என்கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்பட்டார்கள் (லூக். 24:37-41) என்றுதானே வாசிக்கின்றோம். பூட்டிய அறைக்குள் இயேசு கிறிஸ்து வந்தபோதும் விசுவாசிக்க தயங்கினவர்கள், 'கல்லறையில் கல் அகற்றப்படாதிருந்தால்' எத்தனையாய் விசுவாசிக்கத் தடுமாறியிருப்பார்கள்? கல்லறையின் கல் அகற்றப்பட்ட கர்த்தருக்காக அல்ல, சீஷர்களுக்காகவும் மற்றும் ஜனங்களுக்காகவுமே!
Comments
Post a Comment