Skip to main content

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும் 

சரித்திரம்

www.sinegithan.in



பஸ்காவா? ஈஸ்டரா?


       இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்கிறான். பண்டிகை நாட்களிலும்கூட, பரலோகத்தை நோக்கி ஜனங்களின் கண்கள் திரும்பிவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு, பூலோகத்திற்கடுத்தவைகளாலேயே அவர்களது வாழ்க்கையினைப் பொதிந்துவிட முனைந்து நிற்கிறான்.  'கர்த்தருக்குப் பண்டிகை' என்ற வாசகத்தோடு காரியங்களைச் செய்ய அனுமதித்தாலும், வசனத்தை விட்டு விலகச்செய்துவிடுகின்றான். மாம்சத்திற்கடுத்தவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆவிக்குரியவைகளை அசட்டைபண்ணும் ஜனங்கள், கர்த்தருக்கு அல்ல, சத்துருவுக்கே பண்டிகை கொண்டாடுகின்றனர் என்பதே உண்மை. 

சமாரியாவின் ராஜாவாகிய ஆகாப் யெஸ்ரயேலனாகிய நாபோத்தை நோக்கி, 'உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு' (2 இராஜா. 21:2) என்று கேட்டபோது, 'நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக' (2 இராஜா. 21:3) என்ற நாபோத்தின் வார்த்தையினால், சலிப்பும் சினமுமாய்க் காணப்பட்டதை அறிந்த  ஆகாபின் மனைவியாகிய யேசபேல், ஆகாபின் பெயரால், 'நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள்' என்று நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப்; போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினதைப் போல (1 இராஜா. 21:9,10,8), இன்றைய 'பண்டிகையின்' நாட்களிலும், கர்த்தருடைய திராட்சத்தோட்டத்தைக் கீரைக்கொல்லையாக்கிப்போடும்படிக்கும், திராட்சத்தோட்டத்தைக் காத்துக்கொண்டிருக்கும் நாபோத்துக்களை கொலைசெய்யும்படிக்கும் சத்துரு திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டுமே.  

இப்படிப்பட்ட சத்துருவின் சதியினை அறியாதோர், சத்தியத்தை விட்டுத் தூரமாகத் தாங்கள் பயணிப்பதை அறியாமலேயே தங்கள் பயணத்தை இன்னமும் தொடர்ந்துகொண்டிருப்பார்கள்; இலக்கை விட்டு விலகிச் செல்லும் அத்தகையோரின் முடிவு வேதனையே என்பதை நியாயத்தீர்ப்பு நிச்சயம் வெளிப்படுத்தும். 

'ஆபிப்' மாதத்தின் ஆரம்பம்


வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டுக் காலங்களில், சந்திரனை மையமாகக் கொண்டே காலங்களும் மற்றும் நாட்களும் கணக்கிடப்பட்டுவந்தன.  'பௌர்ணமி' முழு நிலவு (full moon) என்றும், 'அமாவாசை' புது நிலவு (new moon) என்றும் அழைக்கப்பட்டன.  ஒவ்வொரு 'அமாவாசை' அதாவது 'புது நிலவின்' (new moon) தொடக்கத்தின் போது, புதிய மாதத்தின் தொடக்கமும் கணக்கிடப்பட்டுவந்தது. 

'நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்' (1 நாளா. 23:30) என்று கர்த்தரை ஆராதிக்கும் சமயத்திற்குள்ளும் 'அமாவாசை' இடம்பெற்றிருப்பதற்குக் காரணம், அது யூதர்களது புதிய மாதத்தின் தொடக்கம் என்பதினாலேயே. புதிய மாதத்தின் தொடக்கத்திலே, ஜனங்கள் விருந்து உண்டு மகிழ்வதும் வழக்கமாயிருந்தது. இதனையே தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம்நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும் (1 சாமு. 20:5; 20:18) என்று சாமுவேலின் புஸ்தகத்தில் நாம் வாசிக்கின்றோம். மேலும், தன் மகன் மரித்துப்போனதை அறிந்த கனம் பொருந்திய ஸ்திரீயாகிய சூனேமியாள், தேவ மனிதனாகிய எலிசாவினிடத்தில் செல்ல முற்பட்டபோது, அவளது கணவன் அவளை நோக்கி, 'இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன? (2 இராஜா. 4:23) என்று கேட்பதையும் வேதத்தில் வாசிக்கின்றோமே. மாதங்கள் எப்போது முடிவடைகின்றன, புதிய மாதங்கள் எப்போது தொடங்குகின்றன என்பதை, சூரியக் கடிகாரத்திற்கு ஈடாக மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் கணிக்கக்கூடிய மனிதர்களும் அவர்களுக்குள் காணப்பட்டனர் என்பது இன்றைய விஞ்ஞானிகளும் வியக்கும் விசயமாகவே பேசப்படுகின்றது. (ஏசா. 47:13)

வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது (ஆதி. 1:14) என்றுதானே கூறுகின்றார் கர்த்தர். 

  யூதர்கள் கைக்கொண்டுவந்த 12 மாதங்களாகிய, ‘Tishri, Cheshvan, Kislev, Tevet, Shevat, Adar, Nisan, Iyar, Sivan, Tammuz, Av, and Elul’ என்ற மாதங்களுள், 'Tishri - திஸ்ரி' என்பது வருடத்தின் முதல் மாதமாகக் கருதப்பட்டுவந்தபோதிலும், எகிப்திலே நானூற்று முப்பது வருடங்கள் அடிமைகளாகத் தங்கள் வாழ்க்கையினைக் கழித்த தேவ ஜனமாகிய இஸ்ரவேல் மக்கள், 'ஆபிப்' மாதத்தின் 14-ம் தேதி எகிப்திலிருந்து விடுதலையாக்கப்பட்டபோது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக (யாத். 12:1,2). ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள் (யாத். 13:4) கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே (யாத். 12:42) என்று கூறுகின்றார். 

இஸ்ரவேல் மக்களின் வழக்கத்தின்படி, 'திஸ்ரி' மாதமே வருடத்தின் முதல் மாதமாகக் கருதப்பட்டுவந்தபோதிலும், அவர்கள் எகிப்திலிருந்து விடுதலையான, வருடத்தின் ஏழாவது மாதமாகிய 'ஆபிப்' மாதத்தையே முதல் மாதமாக மாற்றி அனுசரிக்க ஆணையிடுகின்றார் ஆண்டவர். (In civil contexts, a new year in the Jewish calendar begins on Rosh Hashana on Tishrei 1. However, for religious purposes, the year begins on Nisan 1.) பாபிலோனின் சிறையிருப்பிற்கு முன் 'ஆபிப்' என்று அழைக்கப்பட்ட இந்த மாதம், பாபிலோனின் சிறையிருப்பிற்குப் பின் 'நிசான்' என்று மாற்றப்பட்டு அழைக்கப்பட்டது. பாபிலோன் சிறையிருப்பிற்கு முன் யூதர்களது பழக்கத்திலிருந்த மாதங்களில், முதல் மாதமாகிய 'ஆபிப்' (யாத். 12:2; 13:4), இரண்டாவது மாதமாகிய 'சீப்' (1 இராஜா. 6:1), ஏழாம் மாதமாகிய 'ஏத்தானீம்' (1 இராஜா. 8:2) மற்றும் எட்டாம் மாதமாகிய 'பூல்' (1 இராஜா. 6:38) ஆகிய மாதங்களின் பெயர்களை மாத்திரமே வேதம் சுட்டிக்காட்டுகின்றது. 

எகிப்திலிருந்து அதாவது பாவத்திலிருந்து நாம் விடுதலையாகாதவரை, நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய வருடம் பிறக்கப்போவதில்லை; எகிப்திலிருந்து புறப்பட்ட மாதம், இஸ்ரவேல் மக்களுக்கு வருடத்தின் முதல் மாதமாக மாற்றப்பட்டதுபோல, பாவத்திலிருந்து விடுதலையடைந்து, ஆவிக்குரிய வருடத்தை நாமும் ஆரம்பிக்கவேண்டுமே. அப்படி ஆரம்பித்தால் மாத்திரமே, 'அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்' (லூக். 15:10) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கையினால் நிறைவேறும்.


    'பஸ்கா' விடுதலையின் அடையாளம்

எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையாக்கப்பட்ட 'ஆபிப்' மாதத்தில், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள். ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். அதை இந்த மாதம் பதினாலாம் தேதி வரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள். பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக. 

அதிலே ஒன்றையும் விடியற்காலம் மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக. அதைப் புசிக்கவேண்டடிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா (யாத். 12:3-11) என்று கூறுகின்றார். எகிப்திலிருந்து விடுதலையடைந்த நாளிலேயே பஸ்கா பலி செலுத்தப்பட்டது. பஸ்கா என்பது ஆங்கிலத்தில் 'Passover' 'கடந்து செல்லுதல்' என்றும் கிரேக்க மொழியில் 'Pascha' என்றும் அழைக்கப்படுகின்றது. 

அதுமாத்திரமல்ல, அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள். புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான். முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம். புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள். முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள். ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான். புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றும் கட்டளையிடுகின்றார் கர்த்தர். (யாத். 12:14-20)

'பஸ்கா' நாளும், பஸ்காவின்போது செலுத்தப்படுகின்ற பலியும் குறிப்பிட்டுக் கூறுவது என்ன? பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, பரிசுத்தத்திற்கு நேராக நாம் பயணிக்கவேண்டும் என்பதே. எகிப்தியரைச் சங்கரிக்கும்படியாகப் புறப்பட்டு வருகின்ற தேவனின் சங்காரம், என் வீட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்று நாம் நினைப்போமென்றால், நம்முடைய பாவங்களுக்காகப் பலியான யெகோவா தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நம்முடைய வாழ்க்கை கழுவப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு கழுவப்பட்டவர்களைக் குறித்தே, 'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் என்றும், அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்' (யோவான் 1:12,13) என்றும் வாசிக்கின்றோம். தாயின் கருவிலிருந்து, தரையிலே பிறந்த நாளை எத்தனையாய் நாம் கொண்டாடி மற்றோர்களுடன் இனிப்புகளைப் பறிமாறி மகிழ்ந்தாலும், தேவனால் பிறக்கவில்லையென்றால், பரலோகம் மகிழாது. மாம்சத்தின்படி பெற்றோருக்கு நாம் பிள்ளைகளாயிருக்கக் கூடும்; ஆனால், பரமப் பிதாவுக்குப் பிள்ளைகளாயிருக்கமாட்டோம். பெற்றோரின் வீடும் வாசலும், நமக்கு எப்போதும் திறந்திருக்கலாம்; உற்றார் உறவினர்கள் எல்லோரும் தங்கள் இல்லத்திற்குள் நம்மை உள்ளே வர அனுமதிக்கலாம்; ஆனால், பிதாவுக்குப் பிள்ளைகளாக மாறாவிடில், பரலோகத்திற்குள் நாம் உட்புக இயலாது; அது நமக்குப் பூட்டப்பட்டதாகவே காட்சியளிக்கும். நம்முடைய மாம்சீகப் பிறப்பு மனிதர்கள் மத்தியில் மகிழ்வைத் தந்தாலும், நம்முடைய மறுபிறப்பினாலேயே  பரலோகத்தில் மகிழ்ச்சி உண்டாகும், பரலோகம் களிகூரும்.  

இவ்வுலகத்தின் இன்பத்தை மாத்திரமே கணக்கில் கொண்டு, கருத்தில் கொண்டு, மறுபிறப்பையும் அத்துடன் மறுவுலக வாழ்வையும் மறந்தவர்களாக நாம் வாழ்ந்துகொண்டிருப்போமென்றால் இன்றே மனந்திரும்பி, பாவ மன்னிப்பின் நிச்சயத்தினைப் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம். 'பஸ்கா' நமக்காகப் பலியிடப்பட்டிருந்தும், பாவத்திலேயே நாம் வாழ்ந்துகொண்டிருப்போமென்றால், நம்முடைய வாழ்க்கை பரிதாபமாகிவிடுவதோடு, பரலோகத்திற்குத் தூரமாகிவிடுமே! 


ஆசரிப்பும் ஆட்டுக்குட்டியும்


  இப்படிப்பட்ட பஸ்காவின் பலிக்கும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கும் இடையிலான ஒற்றுமைகளையும் கூடவே நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். 

யோவான் இயேசு கிறிஸ்துவை தன்னிடத்தில் வரக்கண்டபோது, 'இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி' (யோவான் 1:29) என்றுதானே அவரை அறிமுகப்படுத்தினான். அதுமாத்திரமல்ல, வெளிப்படுத்தின விசேஷம் முழுவதிலும் இயேசு கிறிஸ்து 'ஆட்டுக்குட்டியானவர்' என்றுதானே அழைக்கப்படுகின்றார். 

மேலும், என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.  என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் (யோவான் 6:54-58) என்றும், நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான் (யோவா 10:11) என்றும், அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் (மத். 20:28) என்றும்தானே தன்னைக் குறித்து இயேசு கிறிஸ்துவும் அறிமுகப்படுத்துகின்றார். 

1. பஸ்கா ஆட்டுக்குட்டி பழுதற்றதாய் இருக்கவேண்டும் (யாத். 12:5); அதற்கு ஒப்பாக, 'என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?' (யோவான் 8:46)என்று இயேசு கிறிஸ்து கூறினாரே. 

2. இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் பஸ்காவை ஆசரித்தபோது, ஈசோப்பு பயன்படுத்தப்பட்டது (யாத். 12:22); அவ்வாறே, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, அவருக்கு முன்பாக ஈசோப்புத் தண்டு நீட்டப்பட்டது (யோவான் 19:29).

3. பஸ்கா ஆட்டுக்குட்டியின் ஒரு எலும்பும் முறிக்கப்படக்கூடாது (யாத். 12:46); அவ்வாறே, இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது, அவரது கால் எலும்புகள் முறிக்கப்படவில்லை. (யோவான் 19:33)

4. பஸ்கா கொண்டாடப்பட்டபோது, எகிப்திலே எகிப்தியரின் தலைப் பிள்ளைகள் சங்கரிக்கப்பட்டனர் (யாத். 12:29); ஆனால், இஸ்ரவேல் புத்திரரிடத்திலோ, இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார் தேவன் (யாத். 13:2). 'தேவன் தன்னுடைய ஒரே பேறான குமாரனை நமக்காகத் தந்தருளினதுபோல', நாமும் நம்முடைய பிள்ளைகளை அவருக்காகத் தரவேண்டும் என்ற தலைமுறையினைச் சார்ந்து நிற்கும் சட்டத்தினையும் இந்த பஸ்கா பண்டிகை நமக்கு வெளிப்படுத்துகின்றதல்லவா!   

5. அதுமாத்திரமல்ல, அன்று இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானபோது, எகிப்தியர்களின் 'தலைப் பிள்ளைகள்' கர்த்தரால் சங்கரிக்கப்பட்டதை மனதில் கொண்ட சத்துரு, இஸ்ரவேல் ஜனங்களை அழிக்கும்படியாக, பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டதைப் (யாத் 1:22) போன்ற சம்பவத்தினை, பாவத்தின் அடிமைத்தனத்திலிருக்கும் ஜனங்களை விடுவிக்க பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்து பிறந்தபோது திட்டமிட்டுச் செய்தானே. அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான் (மத். 2:16) என்று வாசிக்கின்றோமே. 

மேலும், இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது, 'அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்' (யோவான் 19:31) என்ற வசனம், 'பஸ்கா அன்றே இயேசு சிலுவையில் பலியானார் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றல்லவா; பஸ்கா பலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து வரும் முதல் ஓய்வுநாள் 'பெரிய ஓய்வு நாள்' என்று அழைக்கப்பட்டது (பஸ்கா நிசான் 14 என்றால் பெரிய ஓய்வு நாள் என்பது, அதைத் தொடர்ந்து வரும் முதல் ஓய்வுநாள் 'வாரத்தின் ஏழாவது நாள்'; இது வழக்கமான ஓய்வுநாள் அல்ல, வருடத்திற்கு ஒருமுறை அனுசரிக்கப்படும் பெரிய ஓய்வுநாள்). ஆங்கில வேதாகமத்தில், இப்பதம் great sabbath, very special sabbath, high sabbath என்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது, 'பஸ்காவின் பலி இயேசுவே' என்பதை எத்தனை உறுதியாய் நமக்கு நிரூபிக்கின்றது. 

அதுமாத்திரமல்ல, 'இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்கா பண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்' (மத். 26:2) என்று சீஷர்களைப் பார்த்து இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளும், பஸ்காவின் நாளன்று பலியாகவிருப்பது தான்தான் என்பதை அவர்களுக்கு வெளிப்படச்செய்கின்தே. புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டபோது, இயேசு கிறிஸ்து அவர்களை நோக்கி: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் (மத் 26:17,18) என்று சொல்லுகின்றாரே.

பஸ்காவாகப் பலியாகவிருப்பது தங்களோடு கூட பந்தியில் அமர்ந்திருக்கும் இயேசு கிறிஸ்துதான் என்பதை அத்தருணத்தில் சீஷர்களும் அறிந்துகொள்ளாதிருந்தார்களே! பஸ்காவாக தான் பலியாகவிருப்பதின் அர்த்தத்தை சீஷர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, 'அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.  பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.  இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்' (மத். 26:26-29) என்றாரே. பலியோடு பந்தியிருந்தும், அவர் பிடிக்கப்பட்டபோது, தாங்கள் பலியாகிவிடக்கூடாது என்று அவர்கள் ஓடிவிட்டார்களே! (மத். 26:56). பந்தியிலிருக்க மாத்திரமல்ல, அவருக்காக பலியாகவும் அழைக்கப்பட்டவர்கள் நாம் என்பதை மறந்துவிடக்கூடாது. சத்துருவின் கையிலிருந்து நாம் விடுதலையான இப்படிப்பட்ட பஸ்காவை நினைவுகூரும்படியாகவே இன்றும் நாம் கர்த்தருடைய பந்தியில் பங்குபெறுகின்றோம்.

பஸ்கா என்பது எகிப்திலிருந்து விடுதலையான இஸ்ரவேலருக்கு மட்டும்தானோ? யூதர்களுக்கு மட்டும்தானோ? அல்லவே. 'ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது' (ரோமர் 2:8,29) என்று பவுல் எத்தனையாய் உறுதிப்படுத்துகின்றார். இதைத்தானே கொலோசெயருக்கு எழுதுகின்;றபோதும், 'தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.  அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதன முள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாத வனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமா யிருக்கிறார்' (கொலோ. 3:10,11) என்று குறிப்பிடுகின்றார். மேலும், 'நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்த மா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடேஅல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்' (1கொரி 5:6-8) என்றும் கூறத் தவறவில்லையே; ஆம், பஸ்கா என்பது பிதாவின் பிள்ளைகளின் பண்டிகை.


        அரிக்கட்டும், ஆத்துமாக்களும்


பஸ்காவைத் தொடர்ந்து செய்யப்படும் மற்றும் ஒரு நிழ்வினையும் நாம் மனதில் நிறுத்தவேண்டியது அவசியம். 'நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும்' (லேவி. 23:10,11) என்று கட்டளையிட்டிருந்தார் ஆண்டவர். 

'வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்' (யோபு 41:11) என்றும், 'நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே' (சங். 50:12) என்றும், 'வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி' (ஏசா. 66:1) என்றும் 'தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்?' (யோபு 41:11) என்றும்  கூறுகின்றார் தேவன்; இதனையே, 'தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?' (ரோமர் 11:35) என்று உறுதிப்படுத்துகின்றார் பவுல். 

இப்படியிருக்க, பூமிக்கடுத்த பொருட்களைக் கொடுத்துவிடுவதினால் மாத்திரம் பரலோகத்திலிருக்கும் பிதாவின் மனம் திருப்தியடைந்துவிடாது என்பது நிச்சயம்; அவரிடத்திலிருந்து பெற்றுக் கொண்டவைகளைத்தான் அவருக்குக் கொடுக்கின்றோம். ஆனால், இந்த பண்டிகையின் நாட்களிலோ, தன்னுடைய சொந்த குமாரனையே 'விலையாகக் கொடுத்தும்' இன்னமும் தனது கரங்களில் வந்து சேராத 'அரிக்கட்டுகளாகிய ஆத்துமாக்களையே' அவர் எதிர்பார்க்கின்றார் என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டுமே. 

நம்முடைய பாவங்களுக்காக பஸ்கா ஆட்டுக்குட்டியாகிய 'இயேசு கிறிஸ்து' சிலுவையில் பலியானார் என்பதை நினைத்து நாம் மாத்திரம் ஆனந்திப்பதோடு பண்டிகையை நிறுத்திக்கொள்ளலாமோ? வயல்வெளியில் இருக்கும் 'கதிர்களாகிய ஆத்துமாக்களையும்' விரைவில் அறுத்து அசைவாட்டும் பலியாக அவரது சந்நிதிக்கு கொண்டுவரவேண்டுமே; பஸ்காவின் இந்த மறுபக்கத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது.


ஆழிந்துபோன அடையாளங்கள்


பஸ்காவின் பலி எப்படியிருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்ததோடு மாத்திரமல்ல, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா (யாத் 12:11) என்று அதனைப் புசிக்கும் விதத்தையும் கூடவே கற்றுக்கொடுத்தார் கர்த்தர். 

'அரைகளில் கச்சை' 'கால்களில் பாதரட்சை' மற்றும் 'கைகளில் தடி' என இம்மூன்றும் கற்றுத்தரும் சத்தியத்தையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டுமே. நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும் (ஏசா. 11:5) என்றே ஆண்டவரைக் குறித்து வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். 'கச்சை' என்பது நம்மை நிர்வாணிகளாகக் காணப்படாதபடிக்குக் காப்பது மாத்திரமல்ல, சத்துருவோடு போராடக்கூடிய ஆயுதங்களையும் உள்ளடக்கிக்கொள்ளக்கூடிய ஒன்று. இரட்சிப்பின் வஸ்திரம் என்று அதனை நாம் வர்ணித்தாலும், பாவத்தோடும் மற்றும் சத்துருக்களோடும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆயுதங்கள் அதில் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் கூடவே நாம் அறிந்துகொள்ளவேண்டும் அல்லவா! 

இதனையே, சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள் (எபே. 6:14-17) என்று எழுதுகின்றார் பவுல்.

மேலும், அந்த எகிப்தியன் கையில் ஓரு ஈட்டி இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான் (2 சாமு. 23:21) என்று தாவீதைக் குறித்து வாசிக்கின்றோமே, எதிரியைச் சந்திக்கச் செல்லும்போது எடுத்துச் சென்ற ஆயுதமல்லவா இது; என்றாலும், கூழாங்கல்லைக் குறித்து அதிகம் பேசிக்கொள்ளும் நாம், சில நேரங்களில் தடியையும் கூடச் கொண்டுசென்றான் என்பதை நினைவில் கொள்ள மறந்துவிடுகின்றோம். 

'கச்சை' 'பாதரட்சை' 'தடி' இம்மூன்றும் நமது பாதுகாப்பிற்காக மாத்திரல்லாமல், சத்துருவினிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும்படியாகவும் உபயோகப்படுகின்றது என்பதுதானே பஸ்காவை ஆசரிக்கும் விதம் வெளிப்படுத்தும் ஆவிக்குரிய சத்தியம். 

  அதுமாத்திரமல்ல, கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார் (யாத். 13:9) என்றும் கூறுகின்றார் கர்த்தர். 'கையிலே ஒரு அடையாளம்' என்ற வார்த்தை ஆங்கில வேதாகமத்தில் “Amulet" “Tephillin” “Phylacteries” என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனையே, 'அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது' (உபா. 6:8) என்றும், 'நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து' (உபா. 11:19) என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றார். இதனை மனதில் கொண்டே சாலொமோனும், 'கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்' (நீதி. 3:3) என்று எழுதுகின்றார். 

பஸ்காவின்போது, யெகோவா தேவன் செய்யச் சொன்ன இந்தக் காரியங்கள் இக்கடைசி நாட்களில் மறக்கப்பட்டுப்போயிற்றே! அந்திக்கிறிஸ்துவின் நாட்களில், இதன் போலியான மாற்றுருவத்தினைத்தானே அந்த மிருகம் உண்டாக்குகின்றது என்று வேதம் நமக்கு வெளிப்படுத்துகின்றது. 'அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும் படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது' (வெளி. 13:16,17) என்று வாசிக்கின்றோமே. 

அதுமாத்திரமல்ல, எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலையாக்கப்பட்ட நாளை ஆசரிக்கவிடாதபடி, 'பஸ்கா' என்ற சொல்லையே 'ஈஸ்டர்' என்று தந்திரமாக மாற்றிவிட்டான் சத்துரு. KJV 1611 ஆங்கில வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டபோது, அப்போஸ்தலர் 12:4-ல் 'பஸ்கா' என்ற வார்த்தை 'ஈஸ்டர்' என்று மொழிபெயர்க்கப்பட்டது. 



    'ஈஸ்டர்' "Eostre or Eostrae" என்பது Anglo-Saxon மக்களால் அழைக்கப்பட்ட, வசந்தகாலத்தையும், இனப்பெருக்கத்தையும் மற்றும் பாலுறவினையும் குறிக்கும் ஓர் ஜெர்மானிய தேவதையின் பெயர். 'ஈஸ்டர்' தினத்தன்று 'உயிர்த்தெழுதல்' என்ற பெயரில் முக்கியப்படுத்தப்படும் 'முயலும்' 'முட்டையும்' வெளிப்படுத்துவதும் இனப்பெருக்கத்திற்கடுத்த சிந்தையினையே. 'கர்த்தருக்குப் பண்டிகை' என்ற பெயரில் இன்று கிறிஸ்தவர்களையும் 'சத்துருவின் காற்று' சுழற்றிச் சுழற்றி அடித்துச் சென்றுவிட்டது வேதனையான நிகழ்வே. யூதர்கள் நிசான் மாதம் 14-ம் தேதி முதல் 21-ம் தேதிவரை 'பஸ்கா' பண்டிகையை ஆசரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்; ஆனால், அரசன் கான்ஸ்டன்டைன் காலத்தில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட 'ரோம கிறிஸ்தவர்கள்' 'ஈஸ்டர்' தினத்தை ஆசரிப்பதையே தங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்; இவ்விரண்டு பண்டிகைகளும் வெவ்வேறு தினங்களில் ஆசரிக்கப்பட்டுவந்தினால், இரு பிரிவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாயிற்று. இதனைத் தீர்க்கும்படியாக, துருக்கியில் கூடிய முதல் “Nicaea 325" கூடுகையில், 'ஈஸ்டர்' என்பது, மார்ச் மாதம் (மார்ச் 21) ஏற்படும் Spring Equinox -ஐ தொடர்ந்து வரும் முழு நிலவிற்கு ('full moon' 'பௌர்ணமி') அடுத்த முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படவேண்டும் என்று தீர்மாணிக்கப்பட்டது. மார்ச் 22-க்கும் ஏப்ரல் 25-க்கும் இடைப்பட்ட எந்த ஒரு ஞாயிற்றுக் கிழமையிலும் ஈஸ்டர் கொண்டாடப்படலாம் என்று வரையறுக்கப்பட்டது. ‘Equinox’  என்பது, சூரிய ஒளி பூமியின் மத்திய ரேகை வழியாகக் கடந்து செல்லும் நேரம்; அதாவது, வட மற்றும் தென் துருவங்கள் ஏறக்குறைய சமமான ஒளியினை சூரியனிடமிருந்து பெறும் நேரம். வருடத்தில் இருமுறை நடைபெறும் இந்நிகழ்வு, மார்ச் மாதத்தில் 'Spring Equinox' என்றும் செப்டம்பர் மாதத்தில் ‘Autumnal Equinox’ என்றும் அழைக்கப்படுகின்றது. இதன் விளைவாக, ஆண்டவர் கடைபிடிக்கும்படியாக் கட்டளையிட்ட 'பஸ்கா' ஆசரிப்பு அடங்கிப்போனது. 





ஜெர்மானியர்கள் (Pascha) என்ற பெயரில், 12 அடுக்குகள் கொண்ட பெரியதோர் விபச்சார விடுதியினை (brothel) 9000 சதுர அடியில் 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் நிறுவியுள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 1000 -க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இங்கு வந்து செல்லுகின்றனர். 120-க்கும் அதிகமான விபச்சாரிகள் இங்கு வசிக்கின்றனர், தங்கள் உடலை விற்று பிழைப்பு நடத்துகின்றனர்; 80-க்கும் அதிகமானோர் இந்த விடுதியில் பணி செய்கின்றனர். உலகத்திலேயே மிகப் பெரிய விபச்சார விடுதி என்று இன்று இது அழைக்கப்படுகின்றது. 'கொரோனா' தொற்று பரவின நாட்களில் 2020-ம் ஆண்டு முதல் சில காலம் செயல்படாமல் இது மூடப்பட்டிருந்தாலும், மீண்டும் 18 மார்ச் 2022 முதல் ஜெர்மனியில் செயல்படத்தொடங்கியுள்ளது. நாம் பஸ்காவை மறந்து ஈஸ்டர் என்ற அந்நிய தேவதையின் பெயரில் பண்டிகையைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்; சத்துருவோ, பஸ்கா என்ற பெயரில் அந்நிய தேவதையான ஈஸ்டரை மறைத்து விபச்சார விடுதி (brothel) நடத்திக்கொண்டிருக்கிறான்; எத்தனை கொடுமை! எத்தனை சாதுரியமாக தேவஜனம் ஏமாற்றப்பட்டுவிட்டது!! 

    புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் (எரே. 10:2) என்பது கர்த்தர் நமக்கு விதித்திருக்கும் கட்டளையல்லவா; ஆனால், நாமோ, புறஜாதிகளின் மார்க்கத்தோடு நமது மார்க்கத்தைக் (பாதையைக்) கலந்துவிட்டோமே! கிறிஸ்து பிறப்பின் தினத்தன்று, கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல், 'கிறிஸ்மஸ் தாத்தா' வுக்கும் 'கிறிஸ்மஸ் மரத்துக்கும்' முக்கியத்துவம் தரப்படுவதுபோல, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளன்று பஸ்காவின் பலியாகிய கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் தரப்படாமல், 'முயலுக்கும்' 'முட்டைக்கும்' முக்கியத்துவம் தரப்படுவது படைத்தவரை எத்தனையாய் வருத்தமடையச் செய்யும்? முன்னோர்கள் கடைபிடித்தார்கள், முற்பிதாக்கள் பழக்கப்படுத்திவிட்டார்கள் என்று சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டிராமல், நித்திரையை விட்டு எழுந்திருப்போம். 'நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?'  (மத். 15:3) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளுக்கு நாமும் எச்சரிக்கையாயிருப்போம். 

 இயேசு 'கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்' என்பதை நினைவுகூருவது தவறல்ல 'இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்' என்பதை நினைவுகூருவதும் தவறல்ல; ஆனால், அதனை அந்நிய தேவதையான 'ஈஸ்டர்' என்ற பெயரில் ஆசரிப்பது, ஆண்டவருக்கு அருவருப்பானது அல்லவா! 

Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்