'ஜல்லிக்கட்டு' உலகளாவிய நிலையில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் வார்த்தை. ஒதுங்கி நிற்கவேண்டியவர்களும் கூட கூட்டத்தோடு கூட்டமாக ஒட்டி நிற்கும் அவலமான நிலை. விசுவாசிகளும், ஊழியர்களும், ஆவிக்குரிய தலைவர்கள் பலரும் கூட சத்துருவின் யுத்தத்தை அறிந்துகொள்ள இயலாமல், இசைந்து சத்தமிடும் சூழ்நிலை. வெறுக்கவேண்டியவைகளையெல்லாம் விருப்பத்திற்குள் வைத்துக்கொண்டிருக்கும் நிலைக்கு கிறிஸ்தவர்களிலும் பலர் தங்களைத் தள்ளிக்கொண்டது ஆவிக்குரிய உலகினை அசுசிப்படுத்தவே செய்கின்றது. தமிழன் என்ற உணர்வினால், ஆவிக்குரிய உயர்வை அவித்துவிடக்கூடாது. ஏதோ ஒரு உணர்வைத் தூண்டிவிட்டு, ஆண்டவருடனான உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற சாத்தானின் எண்ணத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆண்டவரை அறியாதவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஆண்டவரை அறியாதவைகளாகவே வளர்க்கப்படுகின்றன. 'இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்' (சங். 51:5) என்று தாவீது எழுதுகிறான் தாவீது. தானியேல் பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டுசெல்லப்பட்டதைப் போலவே, நாமும் ஏதோ ஒரு நாட்டில் சிசுவாகப் பிறந்திருக்கிறோம்; 'கர்ப்பத்தின் கனியாகிய நாம் கர்த்தருடைய சுதந்திரம்' எனவே, நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தேசத்தில் உள்ள கலாச்சாரம் அனைத்தையும் நம்முடைய கலாச்சாரமாக்கிவிட முடியாது. உயிருள்ளவர்களென்று பெயர் பெற்றிருந்தும், செத்தவர்கள் கூட்டத்தோடு சேர்ந்து நிற்கக்கூடாது.
கலாச்சாரம் என்பதற்கெல்லாம் நாம் ஒத்துப்போகவேண்டுமென்றால், 'உடன்கட்டையை ஒழித்தது ஏன்?' சுவிசேஷம் அறிவிக்கப்பட்டதினால் காணாமற்போன இருளின் ஆதிக்கங்கள் அநேகம் உண்டு; பாரம்பரியங்கள் என்ற போர்வையில் அவை பாதுகாக்கப்படக்கூடாதவை. பெண்கள் மேலாடை அணிவதற்கு தடை செய்யப்பட்டிருந்தது தமிழகத்தில் இருந்த கலாச்சாரம்தானே, நரபலி கொடுப்பதும், கங்கையில் விழுந்து செத்தால் கைலாசம் போய்விடுவோம் என்று நினைப்பதும், பிறந்த குழந்தையை கங்கை நதியில் வீசிவிட்டால் பாவங்கள் தீர்ந்துவிடும் என்று நினைப்பதும், கோவில்களில் தேவதாசிகளை வைத்திருந்ததும் (விபச்சாரிகள்) இந்தியாவின் கலாச்சாரம்தான், இந்தியாவில் நாம் பிறந்துவிட்டோம் என்பதற்காக இவை அத்தனையையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியுமோ?
இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள் என்று சொன்னார் இயேசு; என்றபோதிலும், 'பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்' (எபே 6:1) என்ற கட்டளை கைவிடப்படக்கூடாதது. தமிழர்களின் கலாச்சாரம் என்று வாதிட்டால், இயேசுவையும் கைவிட்டுவிடத்தான் நேரிடும்; அறிவிக்கப்பட்டதினால்தானே அவரை ஏற்றுக்கொண்டோம். அவரை ஏற்றுக்கொண்டபின் தவறுகளைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிப்பது தவறான பாதையிலேயே நம்மையும் பயணிக்கச் செய்யும். தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே நம் மூலமாய்த் தூஷிக்கப்படாதபடி (ரோம 2:18-24) நாம் கவனமாயிருக்கவேண்டுமே.
ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது (எஸ்தர் 3:8) என்கிறானே. அந்தந்த தேசங்களில் இருக்கிறவர்கள், அந்தந்த தேசத்தின் வழக்கப்படியும், கலாச்சாரத்தின்படியும் வாழ்ந்தாலும், வசனத்திற்கு விரோதமானவைகள் களையப்படவேண்டும். முன்னோர்களால் பாரம்பரியமாய் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் நாம் மீட்கப்படவில்லை (1பேது 1:18). கர்த்தருடைய பிள்ளைகள் எதிர்த்துவரும் களைகள் எல்லாவற்றையும் அடக்கவேண்டும்.
எகிப்திலிருந்தபோது, எகிப்தின் பாரம்பரியத்தை கற்றுக்கொண்டதினாலேயே வழியில் கன்றுகுட்டியைச் செய்தார்கள் இஸ்ரவேலர்கள். எகிப்திலிருந்து கிளம்பினாலும், காளை அவர்களது இதயத்தில் களையாகவே இருந்தது. இன்று அதனை களைந்தெறியவேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். 'விளையாட்டு என்ற பெயரில், காளையை உயர்த்துவதே ஜல்லிக்கட்டு'. பாலுறவையே முக்கியப்படுத்தும் 'PETA' என்ற அமைப்பும், ஜல்லிக்கட்டை தடை செய்வதைப் போல கூறி காளைகளையே உயர்த்திப் பிடிக்கிறது. வேதத்தின் வெளிச்சத்தில் இது களையே.
Comments
Post a Comment