Skip to main content

கல்லறைத் திருநாள் அனுசரிக்கலாமா?


மனிதர்களால் உருவாக்கப்பட்ட, பாரம்பரியங்கள் என்ற போர்வையின் கீழ் பாராமுகமாகவும், சத்தியத்திற்கு விரோதமாகவும் அனுசரிக்கும் காரியங்கள் கர்த்தருக்கு துக்கத்தையே கொண்டுவரும்.  உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? என்று வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் கேட்டபோது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?  (மத். 15:1,2) என்று கேட்டாரே. பாரம்பரியம் மீறப்பட்டுவிடக்கூடாது என்பது மனிதர்களின் போதனை; ஆனால், கற்பனை மீறப்பட்டுவிடக்கூடாது என்பதே இயேசு கிறிஸ்துவின் போதனை. இன்றைய நாட்களிலும், நீதியின் பாதையில் பயணப்படுகிறோம் என்று சொல்லிக்கொள்வோரின் வாழ்க்கையிலும் நீங்காது சில பாரம்பரியங்கள் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. கடைப்பிடிக்கப்படவேண்டிய கற்பனைகள் கைகளில் எழுதிக்கொடுக்கப்பட்ட பின்னரும், கற்பனைகளுக்கு விரோதமான பாரம்பரியங்களினால் தேவனை வேதனைப்படுத்துவது வருந்தத்தக்கது; அத்தகைய பாரம்பரியங்களுள் ஒன்றே 'கல்லறைத் திருநாள்'. 

மரணம் என்பது உயிரோடிருப்பவர்களிடமிருந்து மாத்திரமல்லாமல், பூமியிலிருந்தும் மனிதனை முற்றிலுமாகப் பிரித்துவிடுகின்றது. உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? என்றும், இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்? (பிர 3:22) என்றும் சாலமோன் எழுதுகின்றானே. மேலும், உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது (பிர 9:5) என்றும் சுட்டிக்காட்டுகின்றானே.  எனவே, மரித்துப்போன மனிதர்களுக்காக நாம் செய்யும் காரியங்கள் எதுவானாலும் அவைகளை அவர்கள் அறியப்போவதில்லை என்பது முதலாவது நாம் அறிந்துகொள்ளவேண்டியது. கல்லறைக்கு மாலையிடுவதும், மெழுகுவர்த்திகளை ஏற்றுவதும், அவர்களது புகைப்படங்களை பூக்களால் அலங்கரிப்பதும் விக்கிரக ஆராதனைக்கே வழிவகுக்கும். முன்னோர்களையும், அவர்களது சாட்சியான வாழ்க்கையினையும், அவர்கள் நமக்காக விட்டுச் சென்ற மாதிரிகளையும் நமது மனதிலோ குடும்பத்திலோ கூடுகையிலோ நினைவு கூருவது தவறல்லவே; என்றாலும், அவர்கள் இல்லாத இடத்தில் போய் நின்றுகொண்டு அவர்களை நினைவுகூருகின்றோம் என்ற பெயரில், அவர்களுக்காகச் செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் வேதத்திற்கு விரோதமானதே. 

ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், அதிகாலையிலே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுகூட கல்லறையைப் பார்க்கவந்தார்கள் (மத் 28:1). கல்லறையை அடைத்திருந்த கல்புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக்கண்டு,  உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல்,  அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள்.  அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? என்றார்கள். மேலும் அந்த தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். (மத் 28:5-7, லூக். 24:1-6)

ஸ்திரீகள் கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள் (லூக் 24:9). பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான் (லூக் 24:12) என்றாலும், இதற்குப் பின்னர், சீஷர்கள் சுவிசேஷம் அறிவித்தார்களே தவிற, இயேசு கிறிஸ்துவின் கல்லறைக்குச் சென்றார்கள் என்று வேதத்தில் எங்கும் எழுதப்படவில்லையே.

தனக்கென்று வீடு கட்டுவதைப்போல, கல்லறையினையும் கட்டிவைக்கும் பழக்கம் ஆரம்ப நாட்களில் இருந்துவந்தது. ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான். தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள் (2நாளா 16:13,14). அப்படியே, யோசேப்பு இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,  தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான் (மத் 27:59,60).  அப்படியே ஆபிரகாமும், சாராள் மரித்தபோது, ஏத்தின் புத்திரரை நோக்கி, நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான் (ஆதி 23:4). சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன் தன் நிலத்தின் கடைசியில் இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்றும், அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான் (ஆதி 23:8,9). சாராளும், ஆபிரகாமும் அதிலேயே அடக்கம்பண்ணப்பட்டார்கள். சரீரத்தைப் புதைப்பதற்காக ஓர் இடத்தைத் தெரிவுசெய்துவைத்திருப்பது தவறல்ல; என்றாலும், அது நினைவுகூரக்கூடிய ஸ்தலமல்ல. அடக்கம்பண்ணப்பட்ட இடத்தை ஆராதனைக்குரிய ஸ்தலமாக்கிவிடக்கூடாது. 

தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் (ஆதி 3:14) என்றே சபித்திருந்தார். எனவே, மனிதன் இறந்தபின்பு, அவனது சரீரமாகிய மண்ணாவது தனக்குக் கிடைத்துவிடவேண்டும் என்பதில் சாத்தான் குறியாக இருக்கிறான். கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான் (உபா 34:5,6) என்றே வேதத்தில் நாம் வாசிக்கின்றோம். மோசேயின் பிரேதக்குழி எங்கே இருக்கிறது எனபதை பிசாசு அறியாததினாலேயே, பிசாசுக்கும் பிரதான தூதனாகிய மிகாவேலுக்கம் தர்க்கம் உண்டானது.  பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னதாக யூதா தனது நிருபத்தில் குறிப்பிடுகின்றார் (யூதா 1:9).  

இயேசு கிறிஸ்து படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஓரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான் (மாற் 5:2-5). அசுத்த ஆவியுள்ள மனிதன் பிரேதக் கல்லறைகளிலிருந்ததன் காரணம் என்ன? மண்ணாகிய சரீரம் புதைக்கப்பட்ட இடத்தை காவல் காத்துக்கொண்டிருப்பதுதான் எதிரியின் பணி. 

மேலும் ஒரு காரியத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டியது அவசியம், உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள் (லூக் 11:47,48). மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து:  எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள். (மத் 23:29-31) என்கிறாரே இயேசு கிறிஸ்து. கொலைசெய்யப்பட்ட தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுவது கூட தவறானதா? என்று ஒருவேளை நாம் கேட்கக்கூடும். பிதாக்களின் பாவத்திற்கு மன்னிப்பு கோருவதை விட்டுவிட்டு, புதைக்கப்பட்ட சரீரத்தின் மேலே கட்டப்பட்ட கல்லறையைச் சிங்காரித்துக்கொண்டிருப்பது தவறானது என்பதையே இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டுகின்றாரே. பிதாக்கள் தவறிய வழியிலிருந்து, சந்ததிகள் தங்களைத் திருத்திக்கொள்ளாமல், பிதாக்களின் கல்லறைகளையே திரும்பத் திரும்ப சிங்காரித்துக்கொண்டேயிருப்பது சத்தியத்திற்குப் புறம்பானதே. இரகசியமான பாவங்களில் சிக்கியிருந்தவர்களாகவோ, அந்தரங்கமான பாவங்களோடு அடக்கம்பண்ணப்பட்டிருந்தாலோ பிதாக்கள் காணப்பட்டால், அவர்களுடைய கல்லறையை சிங்காரிப்பதால் நாமும் சிக்கிக்கொள்ளுவோம்; நாமும், அவர்களுடைய பாவங்களுக்கு உடன்பட்டுவிடுவோம். கல்லறையைத் தொட்டு கெட்டுப்போவதிலும், கல்லறையை விட்டுப் போவது நல்லது. 

 

Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க