Skip to main content

தசமபாகம்

  




தசமபாகம்


தகப்பன் மரித்தால் தகப்பனுடைய சொத்து அனைத்தும் அவருடைய பிள்ளைகளுக்குத்தானே சொந்தமாகும்; அதைப்போலவே, பிள்ளை மரித்துவிட்டால்,  சொத்துக்கள் அனைத்தும் தகப்பன் வசம்தானே இருக்கும்; இதைத்தான், நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார் (கலா 1:4) என்றும், தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? (ரோம 8:32) என்ற வசனம் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது.

இதே சூத்திரம்தான், இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பிதாவின் பிள்ளைகளானோர் மேலும் பொருந்துகின்றது. மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம் (ரோம 6:4); இப்படி நாம் அடக்கம்பண்ணப்பட்டபோது, நாமும், நம்மைச் சார்ந்தவைகள் அனைத்தும் அதாவது பத்தில் ஒன்று மாத்திரமல்ல மொத்தமும் அவருடையதாகிவிட்டன, நாம் அவர் வசிக்கும் ஆலயமாகிவிட்டோம் என்பதே சத்தியம். ஆலயத்தின் வசமிருக்கும் அனைத்தும் ஆண்டவருக்கே சொந்தம் என்ற இந்த சிந்தையிலிருந்து நாம் விலகியிருப்போமென்றால், அனனியா சப்பீராளைப் போல சத்துருவினால் வஞ்சிக்கப்பட்டவர்களாகவே நாம் வாழ்ந்துகொண்டிருப்போம்.  

அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான் (அப் 5:1,2); அவன் வஞ்சித்து வைத்த ஒருபங்கை அனுபவிப்பதற்குக் கூட அவர்களுக்கு உயிரில்லாமல்போயிற்றே. 

'என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்' (உன் 2:16) என்று மணவாளன் மணவாட்டி என்ற ஒப்பந்தத்திற்குள் வந்தபின்பு, என்னுடையது உன்னுடையது என்று சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தம்? அது இன்னமும் இருவரும் பிரிந்து வாழ்வதையே சுட்டிக்காட்டுகின்றது. அது, 'அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்' (ஆதி. 2:24) என்ற சத்தியத்திற்கு விரோதமானது.  'நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப் பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது' (1 நாளா. 29:16) என்ற நிலைக்கு நாம் கடந்துவரவேண்டுமே. 

அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் (மாற் 12:44) என்பது, மணவாளனுக்காக உயிரையே கொடுத்துவிட வந்த மணவாட்டியாகவே அந்த விதவையைச் சுட்டிக்காட்டுகின்றது. 

ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் (ஆதி. 14:20), தசமபாகம் என்பது யெகோவா கர்த்தருக்குக் கொடுப்பதற்கான ஓர் தொடக்கமே; யாக்கோபு செலுத்துவேன் என்று பொருத்தனை பண்ணிக்கொண்டான் (ஆதி. 28:22). அதை மாத்திரம் கொடுத்துவிடுவதால், 'அவருக்குக் கொடுப்பது முடிந்துவிடாது.' பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே (லூக் 11:42). தசமபாகம் மாத்திரமல்ல, எல்லா பாகமும் அவருடையதே என்ற அறிவு நம்மில் பெருகியிருந்தால், புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும் அவருடைய நாமத்தின் மகிமைக்காகவே செய்ய நாம் நம்மை அர்ப்பணித்துவிடுவோம். 'ஊழியர்கள், போதகர்கள்' மாத்திரமே ஆசாரியர்கள் என்ற கண்ணோட்டத்தை விட்டுவிட்டு, கிறிஸ்துவை ஏற்றுக்கொண், இரத்தத்தினாலே பாவங்களற கழுவப்பட்ட நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக இராஜாக்களும் ஆசாரியர்களுமாயிருக்கிறோம் என்ற சிந்தை நம்மில் வளரட்டும் (வெளி 1:6). 'தசமபாகம்' என்பது கொடுத்தலுக்கான ஓர் முளையே, அது வளர்ந்து மரமாகும்போது எல்லாம் அவருடையதாகவேண்டும். 

நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து, உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள் (மத் 15:5,6) என்று சொன்னதைப்போல, கர்த்தருக்கு 'தசமபாகத்தை' மட்டும் கொடுத்துவிட்டு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கக்கூடாது; அது அவரை கனம்பண்ணாமற்போவதற்குச் சமமானதே. 

விடுதி ஒன்றில் நான் தங்கியிருந்தேன், அப்போது என்னைச் சந்தித்த வாலிபன் ஒருவன், 'அண்ணன், நீங்க தசமபாகம் கொடுக்கிறீங்களா?' என்று கேட்டான்; 'என்னையே கொடுத்துவிட்டேன், என்னுடையது எல்லாம் அவருடையது, இதில் எனக்குரியது அவருக்குரியது என்று நான் பிரித்துப் பார்ப்பதில்லை; நானும் அவரும் ஒரே சரீரம்' என்று பதில் சொன்னேன்.  


அனைத்தும் கிறிஸ்துவுக்கே 

எந்தன் அனைத்தும் அர்ப்பணமே 

என் முழு தன்மைகள் ஆவல்களும் 

அனைத்தும் கிறிஸ்துவுக்கே என்பதே பாடலாகட்டும்.


Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க