வளர்ந்துகொண்டே செல்லும் இன்றையச் சமுதாயத்தில் குறைந்துகொண்டே செல்லும் உடைகளால் கேள்விக்குறிகளோடு நின்றுகொண்டிருக்கிறது அதற்கான விடை. 'ஆள் பாதி ஆடை பாதி' என்ற வழக்குமொழி மனிதனை பாதிக்குப் பாதியாகவே அடையாளம் காட்டிக்கொடுத்தபோதிலும், பாதியான ஆடையிலும்கூட பாதியை எடுத்துவிட்டு அரைநிர்வார்ணத்தையும் அங்கீகரித்துக்கொள்வது இன்றைய நாட்களில் வேதனையானது. நவநாகரீகம் (style) என்ற போர்வையில் வாழ விரும்பி, நிர்வாணிகளாவுமளவிற்கு உடையினை உதறிவருகிறது இன்றைய உலகு. இவைகளில் சிக்கிக்கொண்டோர், ஒழுக்கத்தைக் குறித்துப் பேசும்போது ஒத்துக்கொள்ளாமல் வாக்குவாதம் செய்வதையே தங்கள் வழக்கமாக்கிவிட்டனர்; மேட்டிமையான தங்களது விவாதத்தினால், தேவன் விரும்பும் மனமாற்றத்தையோ பின்னுக்குத் தள்ளிவிடுகின்றனர். ஆலய ஆராதனை வேளையில்கூட, ஆராதனையின் ஒழுங்கு முறையினை கருத்தில் கொள்ளாமல், ஆடை, ஆபரங்களையே ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர்.
'என் இஷ்டம்' என்ற வார்த்தை மற்றோர்க்கு கஷ்டத்தை உண்டாக்குமென்றால், அது நஷ்டக் கணக்கில் சேர்க்கப்படவேண்டியதே. 'தன்னைக் பார்க்க' என்ற நிலை மாறி, 'தன்னைப் படைத்தவர் பார்க்க' என்ற நிலைக்குத் தேறி நிற்போர்களை சத்துரு குறிவைத்துத் தாக்குவதோ கடினமானது. ஆனால், 'தன்னைக் காக்க' என்ற நிலை மாறி, 'தன்னைப் பார்க்க' என்ற நிலைக்குத் தவறி நிற்போர்களை சத்துரு குறிவைத்துத் தாக்குவது எளிதானது. 'புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ' (ஆதி. 3:11) என்று ஆதாமிடம் ஆண்டவர் கேட்டதுபோல, விலக்கிவைக்கப்பட்டிருக்கும் வலைகளில் நாம் ஒருபோதும் விழுந்துவிடக்கூடாது. மெல்ல மெல்ல சத்துரு உள்ளே நுழைக்கும் நூல்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாவிடில், அது போர்வையாக நெய்யப்பட்டு நம் வாழ்க்கையையே முழுவதும் மூடிவிடும். விலகியிருக்கவேண்டிய ஆபாசங்களுக்கும், கலைஞர்களுக்கும், சினிமாவுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் இடங்கொடுத்து, சாட்சியாயிருக்கவேண்டிய உங்களை காட்சிப் பொருளாக மாற்றி அவன் ஆட்சிக்குள் வைத்துக்கொள்வதுதான் பிசாசின் வேலை.
நிர்வாணத்தைக் கண்டு அறிவித்த கானானுக்குக் கிடைத்த சாபம் அத்தனை பெரிதாயிருக்குமென்றால் (ஆதி. 9:22), நிர்வாணமாயிருந்த தகப்பனுடைய பாவமும் பெரியதுதானே? விலகியிருக்கும் உங்கள் உடைகளால் வழியிலிருப்போரை சாபத்தைச் சம்பாதிக்கவைத்துவிடாதீர்கள். சேமும், யாப்பேத்தும் நிர்வாணத்தைக் காணக்கூடாது என்று பின்னிட்டு வந்ததுபோல (ஆதி.9:23), உங்களைக் காணும் மக்கள் உங்களைக் கடக்கும்போது பின்னிட்டு நடக்கச்செய்துவிடாதிருங்கள். மயிரைப் பின்னுவதைத்தான் 'அலங்காரம்' என்று அப்போஸ்தலனாகிய பேதுரு தனது நிருபத்தில் எழுதுகின்றார் (1 பேதுரு 3:2); ஆனால், இன்றைய நாட்களில் தலைவிரிக் கோலமாகவே தேவனை ஆராதிக்கும் பெண்கள் எத்தனை? எத்தனை?
தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய்? என்று கேட்டபோது 'நான் நிர்வாணியாயிருக்கிறேன்' (ஆதி. 3:9,10) என்று உத்தரவு சொன்னதுபோல, ஆடைகளைப் பற்றிய விஷயத்தில் நாம் மெத்தனத்தோடு வாழக்கூடாது. எப்படியும் அணியலாம், எதையும் அணியலாம் என்ற தாறுமாறு தவறான வழிக்குள் நம்மை திசைதிருப்பிவிடும். இன்றைய நாட்களில் கடைகளில் விற்கப்படும் பல ஆடைகள் (விசேஷமாக பெண்களின் ஆடைகள்) நடிகைகளின் பெயர்களைக் கொண்டே அழைக்கப்படுகின்றது. உடைகள் உடலின் அழகைக் கூட்டலாம்; ஆனால், கவர்ச்சி என்ற கட்டமோ களைந்தெறியப்படவேண்டியது. அழகைக் குறித்த எண்ணம் எல்லை தாண்டுமென்றால், அது கவர்ச்சியில்தான் போய் கவிழும் என்பது நிச்சயம். குழந்தைப் பருவத்திலே தங்கள் பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட ஆடைகளை அணிவித்து கண்குளிரக் காணும் பெற்றோர்களும் உண்டு. அது பெற்றோரது ஆவிக்குரிய வாழ்க்கையையே பிள்ளைகளில் பிரதிபலிக்கிறது. இத்தகைய நோக்கோடு வியாபார யுக்தியுடன் விதவிதமான ஆடைகளை சந்தையில் அறிமுகப்படுத்தி தரமாக வாழவேண்டிய நம்மை தேவனே தகுதி நீக்கம் செய்யும் அளவிற்கு சத்துரு மாற்றிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். குறைந்துகொண்டேவரும் ஆடை அளவினால் பரிசுத்தத்திற்கு குலைச்சல் உண்டாக்கிவிடாதபடி கவனமாயிருப்போம்.
ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும் பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக (யாத் 28:3) என்றார் கர்த்தர். இந்நாட்களில், இத்தகையோரை அடையாளம் கண்டுகொள்வது அரிதானாலும், உடைகளைத் தெரிந்தெடுக்கும் நாமாவது ஞானத்தின் ஆவியால் நிரம்பின விவேகமுள்ள இருதயமுள்ளவர்களாக செயல்பட்டால் மானத்தைக் காத்துக்கொள்ளலாம், அப்படி தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம் (2கொரி 5:3). 'ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான்' (யாத். 32:25) என்று இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து சொல்லப்பட்டிருப்பதைப் போல, நம்மைக் குறித்து குறிப்பு எழுதப்பட்டுவிடக்கூடாது. இப்படிப்பட்ட நிலைக்கு வடிவமைப்பாளர்கள் உங்களை வழுக்கி விழச்செய்துவிடாதபடிக்கு எச்சரிக்கையோடிருங்கள். அவமானத்திற்கு விலகி வாழுங்கள். நம்மை நிர்வாணமாக்குவதும், நமது கண்களை நிர்வாணத்தை நோக்கியே திருப்புவதுமே சத்துருவின் நோக்கம் என்பதை உணர்ந்தவர்களாக, அவனது போக்கிற்கு எதிர்த்து நிற்போம்.
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும் (மத் 18:6) என்ற வசனத்தின்படி, பிறர் இடறும் கல்லாக வழியில் நில்லாதபடி காத்துக்கொள்ளுங்கள். கன்மலையாகிய கிறிஸ்துவில் திடமாகவும், தரமாகவும் நீங்கள் வாழும்போது, ஓடிவந்து உங்கள் மீது மோதி நொறுங்கிப்போகும் மனிதர்களைக் குறித்து கவலைகொள்ளவேண்டாம்; இடறியவர்கள் நீங்கள் அல்ல அவர்களே என்பதை உங்கள் வாழ்க்கையே உலகிற்கும், உன்னதத்திற்கும் வெளிப்படுத்தும்.
Comments
Post a Comment