திருநங்கைகளைக் குறித்த பல்வேறு விமரிசனங்களும், கருத்துக்களும், எதிர்மறையான மற்றும் பரிதாபமான பேச்சுக்களும் காலங்காலமாக உலகத்தில் உலாவந்துகொண்டேயிருக்கின்றன. மனித பிறப்பில், மூன்றாம் நிலையாக அவர்கள் அங்கீகரிக்கப்பட்டு, அடையாளமிடப்படவேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் வாதங்களுக்குப் பதில் தேவையே. எனினும், திருநங்கைகளைக் கண்டாலே, தட்டுத் தெரிக்க ஓடும் நிலைகளை திருநங்கைகள்தான் உண்டாக்கிவிட்டனர் என்ற குற்றச்சாட்டும் ஒருபுறம் மறுக்க இயலாததாக மலையாய் நிற்கிறது. பல இடங்களில் மற்றவர்களிடத்தில் அவர்கள் நடந்துகொள்ளும் முறை அனுதாபத்தை அல்ல கோபத்தையே தூண்டுகின்றன என்று வாதம் செய்வோரின் வார்த்தைகளுக்கு பல திருநங்கைகளின் வாழ்க்கை இன்றும் ஒத்துப்போகத்தான் செய்கிறது. திருநங்கைகளாகப் பிறந்து, பல்வேறு கலைகளில் மிளிர்ந்து உலகை தன் வசம் திருப்பி வைத்திருப்போரும் உண்டு. மற்றொருபுறமோ, பாலியல் மோகத்துடனும், பார்வையுடனும் பார்ப்பவரையெல்லாம் அணுகுவதால், பரிதாபம் என்ற சொல்லை அவர்களில் பலர் பறக்கடித்துவிட்டனர். ரயில் பயணத்தின்போது கூட்டங் கூட்டமாக பெட்டியினுள் ஏறி வசூல் வேட்டையைத் தொடங்கும் இவர்களில் பலரது செயல்பாடுகள் பயணிகள் பலருக்கு வருத்தத்தைக் கூட்டியிருக்கின்றன. அவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள கழிப்பறைகளில் பதுங்குவோரும், தூங்குவதுபோல நடிப்போரும் உண்டு. பிச்சை கேட்போரைப் போல வந்து, பணம் பறிக்கும் கொள்ளையர்களைப் போல நடந்துகொள்ளும் வரைமுறைக்கு மிஞ்சிய செயலை வரையறுக்கவேண்டும் என்ற கூற்று சரியானதே. வாலிப வயதுள்ளோரை குறிவைத்து காசுபறிக்கும் இவர்களுள் ஒரு கூட்டத்தினர், அதையே தங்கள் வாழ்க்கையின் தொழிலாக்கிக்கொண்டது கௌரமானது அல்ல. இக்கூட்டத்தாரில் பலர் பாலுறவினைக் கொச்சைப்படுத்தும் மோகத்துடன் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளுவதால் பார்ப்பவர்கள் தூரமாகிவிடுவதற்கு அதுவே காரணமாகிவிடுகின்றது.
இவர்களைச் சீர்திருத்த சமுதாயம் சீர்திருந்தவேண்டும், அதற்கான ஆரம்ப நிலை குடும்பத்திலேயே தொடங்கவேண்டும். திருநங்கைகளாகப் பிறக்கும் தங்களது பிள்ளைகளை கூடவே வைத்து வளர்க்கும் நிலைக்கு பெற்றொர்களின் மனம் உயரவேண்டும். குடும்பம் என்ற அமைப்பில் அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்களேயானால், குடிகளின் மத்தியிலும் அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள். குடும்பங்களும், குடிகளும் அவர்களை வெளியேற்றினதினாலேயே, அவர்களின் இத்தகைய பிழைப்புக்குப் பிரதான காரணம். உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டால், ஒரு ஆண், ஒரு பெண், ஒரு திருநங்கை என்று சொல்லுமளவிற்குப் பெற்றோர்க்கு தைரியம் உண்டாகவேண்டும். உடலைப் பொருத்து அவர்கள் வெறுக்கப்படவேண்டியவர்கள் அல்ல, அவர்களும் ஓர் உயிர் என்பதால் அவர்களுடனான உறவு பாதுகாக்கப்படவேண்டும். அவர்களுடைய ஆத்துமாக்களுக்கும் பரலோகத்தில் இடம் காத்திருக்கிறது என்பதால் அவர்களை ஆதாயம் பண்ணும் பணியும் நமது கரத்திலேயே விடப்பட்டிருக்கின்றது. ஜெபக்குழுக்கள், ஆலயங்கள், ஊழியங்கள் மற்றும் பிற கூடுகைகள் இவர்களையும் இயேசுவண்டை கொண்டுவந்து சேர்க்க சேவை செய்யவேண்டும்.
ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள் (கலா 3:28) என்கிறார் பவுல். இதன் அர்த்தமென்ன? ஆண், பெண் என்று நம்மை அடையாளப்படுத்தி, பெருமைபட்டுக்கொள்ளும் நிலையிலிருந்தும் உயர்ந்து வாழ்ந்து மனிதர்கள் என்ற ஒரே குடையின் கீழ் கிறிஸ்துவின் ராஜ்யத்தின் குடிமக்களாகவேண்டும் என்பதுதானே.
போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம் பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று சதுசேயர் கேட்டபோது, இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள் (மத். 22:24-30) என்று பதில் சொன்னார். பூமியில் கொடுக்கப்பட்டிருக்கும் குடும்ப வாழ்க்கையும் அமைப்புமே பரலோகத்தில் தொடரும் என்ற அவர்களது அறியாமைக்கு ஆண்டவர் கொடுத்த சரியான பதிலல்லவா இது. ஆண், பெண், திருநங்கைகள் என அனைவருமே ஆண்டவருக்கு மணவாட்டியாக மாறி நிற்கும் அந்த மகிமையான வேளையில், மனித பாரம்பரியங்கள் நம்மிடமிருந்து அற்றுப்போயிருக்கும். ஆணாயிருந்தாலும், உயிர்த்தெழுதலுக்குப் பின்னோ ஆண்டவருக்கு அவன் மணவாட்டியே, அப்படியிருக்க பரலோகத்தில் அவன் மனைவியைத் தேடியலைவது எப்படி? மணவாளனான இயேசுவை தரிசிக்கும்போது, சரீரம் மாத்திரமல்ல, மனமே மறுரூபமாக மாறிப்போயிருக்கும். (உலகத்தில் வாழும்போது) மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; (உயிர்த்தெழும்போது) வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும் (உலகத்தில் வாழும்போது) மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, (உயிர்த்தெழும்போது) வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம் (1கொரி 15:49). இந்த சத்தியம் நம்மில் இருக்குமென்றால், ஒரே குடையின் கீழ் திருநங்கைகளை வைத்துப் பார்க்கவேண்டும் என்ற விடை கிடைப்பது எளிது.
ஆண், பெண் என்ற இவ்விருவரும் மட்டும் மனிதர்களல்ல, திருநங்கைகளும் 'மனிதர்கள்' என்ற சொல்லுக்குள் அடங்குபவர்களே. மூன்றாம் பாலராகவும் அங்கீகரிக்கப்படவேண்டியவர்களே. என்றாலும், ஆணுடலையும், பெண்னுடலையும், ஆண் உணர்வையும், பெண் உணர்வையும் ஒருமிக்கக் கொண்டு வாழும் இவர்கள் ஓர் ஆணையோ அல்லது பெண்ணையோ மணமுடித்தால் அது ஓரினச் சேர்க்கையாகவே கருதப்படும் என்பதால், இவர்களது திருமணத்திற்கும், உடலுறவுக்கும் வேதத்தில் இடமில்லை. இவ்விரண்டையும் தவிர்த்து நண்பாகளாக இவர்கள் இணைந்து வாழ்வதில் தவறில்லை. ஆனால், ஆணோடு ஆண் என்றும், பெண்ணோடு பெண் என்றும் இந்நாட்களில் ஆணாகவும் பெண்ணாகவும் பிறந்தவர்கள் திருமணம் முடித்துக்கொள்வது வேதனையானது. நவீன யுகத்தில், பலர் அறுவை சிகிச்சை செய்து தங்களது உடலை மட்டும் பெண்ணாக மாற்றிக்கொண்டாலும், அவர்களது மனதின் மறுபக்கம் ஆண்மையையே சுமந்து நிற்கும். மிருகங்களைக் கூட செல்லப்பிராணிகள் எனக் கொஞ்சிக் குழாவும் இந்த யுக மக்கள் மனது, மனிதர்கள் என்று அவர்களை அடையாளம் காட்டத் தயங்குவது தவிர்க்கப்படவேண்டியதே. இருதுருவங்களும் இதனைச் சரியாகப் புரிந்துகொண்டால், உறவு பாதுகாக்கப்படும், இறைவனுடனான உறவும் உருவாக்கப்படும்.
Comments
Post a Comment