கிறிஸ்மஸ் தாத்தா என்பது யார்? கிறிஸ்துவின் பிறப்பிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு? கிறிஸ்து இல்லாமல் கொண்டாடிவிடுவார்கள், ஆனால் கிறிஸ்மஸ் தாத்தா இல்லாவிட்டால் திண்டாடிவிடுவார்கள் என்ற நிலை. உலக வழிகளின் மாயையான தோற்றங்களை மனதில் புகுத்தி, ஆவிக்குரிய வாழ்க்கையிலோ இறந்துபோனவர்களாகவே இயேசுவின் பிறந்தநாளை சரீரத்தில் கொண்டாடும் மக்கள் அநேகர். பிசாசின் தந்திரத்தை நாம் அறிந்துகொள்ளவேண்டுமே. நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் கிறிஸ்மஸ் தாத்தாவே ஈர்த்துக்கொள்ளும்போது, இயேசுவுக்கு இடம் எங்கே? இயேசுவோ, அப்போஸ்தலர்களோ அவரது பிறந்தநாளைக் கொண்டாடியதாக வேதம் போதிக்கவில்லையே; அப்படியே கிறிஸ்மஸ் தாத்தா வேடமும் வேதத்தில் இல்லையே. சந்ததி சந்ததியாய் தொடர்வதுதானே என்பதற்காக, சத்துருவுக்குச் சாதகமாகிவிடலாமோ. உங்கள் பாரம்பரியங்களினாலே, கிறிஸ்துவின் கட்டளைகளை அவமாக்குகிறீர்கள் என்றாரே இயேசு. சில கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளில், 'தாத்தா எப்போ வந்தீங்க, பாட்டி எப்படி இருக்காங்க' போன்ற கிண்டலான கேள்விகள் கேட்கப்பட்டு, கூட்டங்களைக் கூத்தாடச் செய்வதும் பொருத்தமானதோ? ஜனங்களின் முகத்தை மறைமுகமாக தன்னை நோக்கித் திருப்புவதே சத்துருவின் நோக்கம். சாதகமாக ஒன்றைக் காட்டிவிட்டு, சத்தியத்தைக் காணாதபடி கண்களைக் கட்டிப்போடுவது பிசாசின் தந்திரம்; மேலும், உலகத்திற்கு ஒத்த வேஷத்தையும், 'உன்னுடைய வேஷந்தான்' என்று ஒத்துக்கொள்ளச் செய்துவிடுவான்; இதனையே இன்றைய நாட்களின் 'கிறிஸ்மஸ் தாத்தா' வேடங்கள் வெளிப்படுத்துகின்றன.
4-ம் நூற்றாண்டில், துருக்கியின் சிமிர்னாவில் பேராயராக இருந்தவர் Saint Nicholas பெரும் செல்வந்தராகவும் அத்துடன் குழந்தைகளுக்கும், ஏழைகளுக்கும் உதவிசெய்தவராகவும் இருந்ததால், ரோமன் கத்தோலிக்க அமைப்பினர் அவரை நினைவுகூருவதை வழக்கப்படுத்தினர். இங்கிலாந்து தேசத்தினர் அவரை ‘Father of Christmas” என்று அழைத்தனர். விளைவு, உலகத்தின் இரட்சகராக ஈவாகவும் பரிசாகவும் கொடுக்கப்பட்ட இயேசுவின் மீது இருந்த கவனத்தை, பரிசுகொடுக்கும் 'கிறிஸ்மஸ் தாத்தாவின்' மீது திருப்பிவிட்டனர். ஜனங்களின் விருப்பமும் புத்தாடை, பரிசு, பலகாரம் என்று மாறிப்போனது. ஆத்துமாவுக்கான பரிசை விட, சரீரத்துக்கான பரிசுகளே சிறப்பாகத் தெரிந்தது ஜனங்களுக்கு. இவரது இரக்க குணத்தை ஆண்டுதோறும் நினைவுறத் தொடங்கி, எதிரியும் கலந்துவிட்ட கிடங்கிற்குள் விழுந்துகிடப்பது பரிதாபமானது. 'புனிதர்' என்ற பட்டத்துடன், அவரையே புகழ்பாடத் தொடங்கினதினாலும், ஆராதனைக்குரியவராக அவரை மாற்றினதினாலும் அவரது உருவம் விக்கிரகமானது, தியானாளின் கோவில் மாதிரிகள் விற்கப்பட்டதுபோல (அப். 19:24) அவரைப் போன்ற தோற்றமுடைய வேடம் வியாபரமாக மாறிப்போனது. ஜனங்களின் பார்வை வேறுபக்கமாகத் திரும்பியபோது உள்ளே நுழைவதும், வேறு வழியில் மக்களைக் கூட்டிச் செல்வதும் எளிதாகிப்போனது பிசாசுக்கு. கிறிஸ்து பிறப்பினை மறந்து 'St. Nicholas day" என்றே ஜனங்கள் கொண்டாடவும் தொடங்கினர். இது ஒருபுறம் இருக்க,
'தோர்' (THOR) என்ற ஜெர்மானிய கடவுளை, கொம்புகளுள்ள இரண்டு மான்கள் ஆகாயத்தில் தேரில் இழுத்துச் செல்வதைப் போன்று உருவகப்படுத்தப்பட்ட ஜெர்மானிய புராணங்கள் கூறும் கதையே, 'கிறிஸ்மஸ் தாத்தா' என்ற வடிவிலும், 'யூல்' (YULE) என்ற ஜெர்மானியர்களின் பண்டிகை கிறிஸ்மஸ் என்ற வடிவிலும் கிறிஸ்தவத்துடன் கலந்துவிட்டது கவலைக்குரியது. மான் கொம்புகளை வீட்டுச் சுவர்களில் அலங்காரமாக மாட்டிவைக்கும் வழக்கம் 'தோர்' என்ற தெய்வத்தை வணங்கியவர்களால் தொடங்கப்பட்டதே. நீண்ட தாடி, தொப்பி, அங்கி போன்றவைகளும், நிலவை நோக்கி ஆகாயத்தில் மான்கள் பாய்ந்து செல்லும் காட்சியும் பாபிலோனியர்கள் வணங்கிவந்த நிம்ரோத்தையும், நிலவு தெய்வத்தையும், தோர் என்ற தெய்வத்தையும் மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டவைகளே. அத்துடன், பாபிலோனியர்களின் சூரியக் கடவுளின் பிறந்தநாளாகக் கருதப்படும் டிசம்பர் 25 ம் தேதியினையே கிறிஸ்து பிறப்பின் தினமாகவும் கொண்டாடும்படி கிறிஸ்தவம் பணிக்கப்பட்டது எத்தனை பெரிதான கலப்படம்.
பிரியமானவர்களே! லாபானுடைய வீட்டை விட்டு யாக்கோபு ஓடிப்போகிறபோது, லாபான் யாக்கோபை நோக்கி: என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய்? என்று கேட்டதைப் போல, 'கிறிஸ்மஸ் தாத்தாவின் வௌ;வேறு உருவங்களையும் படங்களையும்' வைத்து கிறிஸ்து பிறப்பினைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களிடமும் அந்நிய ஜனங்கள் இக்கேள்வியைக கேட்கும் காலம் தூரத்திலில்லை. புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் (எரே 10:2). ஆராதனைக்குரியவைகளில் அறியாமல் ஆராதிக்கிறவைகளை அகற்றிவிடுவோம் (அப். 17:23). தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? (2கொரி. 6:16). வீணானவைகளைப் பின்பற்றினால், நம்மையும் அது வீணராகவே மாற்றிவிடும் (2இராஜா. 17:15).
Comments
Post a Comment