Skip to main content

வாடகைத் தாய்




 வாடகைத் தாய்

SURROGACY


விஞ்ஞான உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் நமது சிந்தனைகளை, விண்ணகத்திற்கு விரோதமாக மாற்றிவிடாதவாறு கவனமாயிருக்கவேண்டும். 'விஞ்ஞானம்' என்ற பெயரில், உருவாகும் அனைத்தும் நமது வாழ்க்கு சாதகமானதா? என்பதை சத்தியத்தின்படி அறிந்துகொள்வதினாலேயே அது சாத்தியமாகும். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் (1தெச. 5:21) என்ற பவுலின் வார்த்தைகள் நமது சிந்தைகளில் தினமும் நின்று தொனித்துக்கொண்டிருந்தால், 'வசனத்தினால் பூட்டப்பட்டிருக்கும் வாசல்ககளை' நாம் ஒருபோதும் திறக்க முற்படமாட்டோம்; கர்த்தருடைய காலத்திற்காகவே காத்திருக்க நம்மை அர்ப்பணிக்கும் நிலைக்கு உயர்ந்துநிற்போம். ராகேலின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு, இன்றைய நாட்களில் வாழும் சந்ததிக்கான ஓர் வரைபடமாகவே சத்தியமாக நம்முடைய கரங்களில் எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கின்றது. ராகேலின் வாழ்க்கையைப் புரிந்துகொண்டவாறு, இக்கேள்விக்கு விடை காண்பது, வேதத்தின் பார்வையில் எளிதாயிருக்கும் என எண்ணுகின்றேன்.  

ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக் கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள். (ஆதி. 30:1)

கர்த்தரால் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும்போது, மனிதர்களிடத்தில் கடினமாய் நடந்துகொள்வது நியாயமாகுமோ? ராகேலின் கர்ப்பம் கர்த்தரால் அடைக்கப்பட்டிருந்தது; என்றாலும், தான் பிள்ளையற்றிருப்பதைக் குறித்து கவலைகொண்ட ராகேலின் வாழ்க்கையோ விக்கிரகத்தோடு ஒட்டிக்கொண்டிருந்ததால், விரக்தியின் வார்த்தைகளை புருஷனிடத்தில் சென்று கொட்டுகிறாள். தேவனை அறியாதவர்களின் அவலநிலை இதுவே. கவலைகளின் மத்தியில் தான் கண்ணீர் வடிப்பதோடு மாத்திரமல்லாமல், தனதருகில் இருக்கும் தன்னைச் சார்ந்தோரையும் கண்கலங்கச் செய்துவிடுகிறார்கள்; 'கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்' (1 பேதுரு 5:7) என்ற சத்தியத்தை அறியாததே அவர்கள் சரிந்து விழுவதற்கான காரணம். கவலைகளை கர்த்தர் மேல் வைக்காமல், நமது கைகளிலேயே வைத்துக்கொண்டு வாழ முற்பட்டால், நாம் வைத்திருக்கும் கவலையினைக் கொண்டே நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட்டுவிட சத்துரு திட்டம் தீட்டுவான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 

யாக்கோபு ராகேலை அதிகமாய் நேசித்தது உண்மையே; அவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக, எத்தனையாய் கஷ்டங்களை தனது வாழ்க்கையில் சகித்துக்கொண்டவன் அவன். ஆனால், ராகேலோ, 'பிள்ளை இல்லை' என்ற ஒரு கவலையினை மாத்திரம் தனது கைகளில் பிடித்துக்கொண்டு, தன் மேல் பிரியமாயிருக்கும் கணவனோடு சண்டையிடவும் தொடங்கிவிட்டாள். தேவனை அவள் அறியாதிருந்ததினால், அவளை கணவனை விட்டும் பிரித்த்து ஆட்சி செய்ய சத்துரு செய்த சூட்சியே அது. 'எனக்குப் பிள்ளைகொடும், 'இல்லாவிட்டால் நான் சாகிறேன்' என்ற அவளது வார்த்தைகள் மனைவியே மகிழ்ச்சி என்று வாழ்ந்துகொண்டிருக்கும் யாக்கோபுக்கு எத்தனை துக்கத்தைக் வருவித்திருக்கும். இன்றும் கவலைகளை நாம் கைகளிலேயே வைத்துக்கொண்டிருப்போமென்றால், அது உடனிருப்போரிடமிருந்தும் போரிட்டு நம்மைப் பிரித்துவிடும்; எனவே, 'கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டு' சீக்கிரமாய் அதனைக் கடந்து சென்றுவிடுவது நல்லது. 

தங்கள் வாழ்க்கையில் அடைபட்டிருக்கும் வாசலினால், இன்றைய நாட்களில் பலர் விரக்தியின் விளிம்பிற்குச் சென்றுவிடுகின்றனர், தற்கொலைக்கு நேராகத் தூண்டப்படுகின்றனர், எதிர்ப்படும் எவரோடும் சினங்கொண்டவாறே பேசிக்கொண்டிருக்கின்றனர், வாழ்க்கையையே வெறுப்போடு தினம் தினம் கழித்துக்கொண்டிருக்கின்றனர். விரும்பினது வாய்க்காதுபோய்விட்டதின் விளைவினையும், விரோதத்தையும் வீட்டிலே பெற்றோரிடத்தில் காட்டிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் உண்டு; வாழ்க்கையின் தடைகளுக்கு விடைகாணும் பெலனின்றி, தான் பெற்ற பிள்ளைகளே துக்கப்படும்படி நடந்துகொள்ளும் பெற்றோரும் உண்டு. வாழ்க்கையில் எங்கோ ஏற்படும் முட்டுக்கட்டையினை மனதில் வைத்துக்கொண்டு, கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டேயிருக்கும் குடும்பங்களும் உண்டு. 

பிள்ளையில்லாத நிலையில், 'சாகிறேன்' என்றாள் ராகேல். தடைகள் காணப்படும்போது, ஜீவனை அழிவுக்குள் தள்ளிவிடவே சத்துரு முயற்சிக்கிறான். ஆனால், ஆண்டவரோ, தன்னை நம்பியிருப்பவர்களுக்கு, தடைகளை நீக்கிப்போடுகிறவராக முன்னணியில் நடந்துபோகிறார் (மீகா. 2:13). நம்முடைய அடைபட்ட வாசலுக்கு விடை ஆண்டரிடத்திலேயே உண்டு.

அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான். (ஆதி 30:2) 

கோபங்கொண்டு மனைவியாகிய ராகேல் பேசின வார்த்தைகள் கணவனாகிய யாக்கோபையும் கோபக்காரனாக்கிற்று. எதிர்முனையில் உருவாகும் எதிர்ப்புக்கு, நம்முடைய துருவத்திலேயே தொடக்கம் உருவாகின்றது என்பதை பலவேளைகளில் பலரால் உணர்ந்துகொள்ள இயலுவதில்லை. நம்முடைய கோபத்தின் வார்த்தைகள் மற்றவர்களின் குணத்தையும் மாற்றிவிடப்போதுமானது. இதை அறியாதபடியினாலேயே, அநேக மனிதர்கள் தாங்கள் பிறரிடத்தில் பேசிவிட்ட வார்த்தைகளின் விளைவை பின் நாட்களில் தங்களது வாழ்க்கையில் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். 'எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்' என்று ராகேல் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட யாக்கோபு, 'கொடுப்பது நானல்ல, தேவனே' எனவே, என்மீது கோபப்பட்டு பிரயோஜனம் ஒன்றுமில்லை என்பதை அவளுக்கு தெளிவாக உணர்த்துகின்றான். யாக்கோபு ராகேலை அதிகமாக நேசித்தான் என்று வாசிக்கிறோம்; என்றாலும், ராகேல் யாக்கோபை அதற்கு ஈடாக அத்தனையாக நேசித்திருப்பாளா? என்பது கேள்விக்குரியே. அக்காளாக இருந்தாலும், அடுத்தவளுக்குக் கிடைத்துவிட்டது, தனக்குக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் ராகேலை நிறைத்திருந்தது ஒருபுறம் இருந்தாலும், கோபத்தை கணவனிடத்தில் காட்டும் மனைவி என்ற நிலையில்தான் இருந்தது அவளது வாழ்க்கை. பிள்ளைக்காக மாத்திரம் இப்படிப் பேசியவள், பிற காரியங்களுக்காகவும் யாக்கோபினிடத்தில் இப்படி பேசியிருக்கமாட்டாளோ? குறைவுள்ளவள் என்று யாக்கோபினால் அளக்கப்பட்ட லேயாள் ஒருவேளை யாக்கோபை அதிகமாக நேசித்திருக்கக் கூடும்; ஆனால், யாக்கோபினால் லேயாளை நேசிக்க இயலவில்லை; அழகானவள் என்று யாக்கோபினால் அளக்கப்பட்ட ராகேல் யாக்கோபை குறைவாகவே நேசித்திருப்பாள்; எனவே, இத்தகைய கோபமான வார்த்தைகள் அவளது வாயிலிருந்து புறப்பட்டுவருகின்றன.

இன்றும், அன்பு எங்கிருக்கின்றது என்பதை அடையாளங்கண்டுகொள்ள இயலாமல், அழகிலே மயங்கி அன்பிற்கோ வாழ்க்கையில் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ள மனிதர்கள் உண்டே. 

தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? (ஆதி 30:2) என்று யாக்கோபு அவளுக்கு உணர்த்துவிக்கின்றான்; எனினும், தகப்பன் வீட்டிலிருந்து திருடின விக்கிரகத்தைக் மறைத்து வைத்திருந்த ராகேல், தேவனைத் தேடியிருக்கவும், யாக்கோபின் வார்த்தைகள் அவளது உள்ளத்தில் உரைத்திருக்கவும் வாய்ப்பில்லை; எனினும் யாக்கோபின் இந்த வார்த்தைகளோ அவள் உண்மை தேவனை அறிந்துகொள்வதற்கான முதற்படியான அறிவிப்பாயிருந்தது. 

குஷ்டரோகியாயிருந்த சீரிய படைத்தலைவனாகிய நாகமான், சீரிய ராஜாவினிடமிருந்து தான் பெற்ற நிருபத்தை இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது. இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கிவிடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்கச் சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றானே (2 இராஜா. 5:6,7). தேவனிடத்தில் கொண்டுசேர்க்கவேண்டியவைகளை மனிதர்களிடத்தில் கொண்டு கொட்டினால், அல்லது காட்டினால் இப்படிப்பட்ட கோபத்தின் விளைவுகளையே அது வருவிக்கும். எசேக்கியாவைப் போல கர்த்தருக்கு முன் விரித்துவைத்தால் (2 இராஜா. 19:14), இருதயத்தின் கனம் தீரும். 

தனது கஷ்டத்தையும், கவலையையும் போக்கிக்கொள்ள, தானே முடிவெடுக்க முற்பட்டாள் ராகேல். கர்த்தர் அடைத்திருப்பதைக் கருத்தில் கொள்ளாமல், கர்த்தரால் கதவு திறக்கப்பட காத்திராமல், இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று (ஆதி 30:3) சொன்னாள் ராகேல். ஆபிரகாமின் மனைவியாகிய சாராய் தன் கர்ப்பத்தை கர்த்தரே அடைத்திருக்கிறார் என்பதை அறிந்திருந்தாள்; எனவே, அவள் ஆபிரகாமை நோக்கி, 'நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்' (ஆதி 16:2) என்றாள்; என்றாலும், வீடு கட்டப்படவேண்டும் என்ற விருப்பத்தில் விழுந்துபோனாள்; ராகேலுக்கோ, 'தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்' என்று யாக்கோபு சொல்லவேண்டியதாயிருந்தது; அவளும் வீடு கட்டப்படவேண்டும் என்ற விருப்பத்தில் விழுந்துபோனாள். தேவனை அறிந்தவர்களாயிருந்தாலும், தேவனை அறியாதவர்களாயிருந்தாலும், விருப்பங்கள் மனிதர்களை வீழ்த்திவிடக்கூடும். தேவனை அறிந்திருந்தபோதிலும், விருப்பத்தினால் இயக்கப்பட்டு, தேவனை அறியாதவர்களுக்கு இணையாக நடந்துகொள்ளும் மக்கள் உண்டு.  

யாக்கோபு பில்காளைச் சேர்ந்து ஒரு குமாரனைப் பெற்றெடுத்தபோதோ, 'தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார்' என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள் (ஆதி 30:6); தேவன் அல்ல ராகேல் அல்லவோ தவறான பாதையில் தன் வழக்கைத் தீர்வுகாண முற்பட்டாள். எனவே, வெளிப்படுத்தல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள வரிசையில்கூட தாண் கோத்திரம் சேர்க்கப்படவில்லையே (வெளி. 7:4-8). அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும் (பிர 10:8) என்று எழுதப்பட்டிருப்பதைப்போல, 'தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்' (ஆதி 49:17) என்றல்லவோ தாணைக் குறித்து வேதம் சுட்டிக்காட்டுகின்றது. தன் மீதிருந்த ஆண்டவரது அடைப்பை தன் வேலைக்காரியாகிய பில்காளைக் கொண்டு ராகேல் பிடுங்க முயற்சித்ததால் வந்த விளைவே இது. வேலைக்காரியாகிய ஆகாரைக் கொண்டு சாராள் தனது அடைப்பைப் பிடுங்க நினைத்து, 'துஷ்டமனுஷனாகிய இஸ்மவேலைப்' (ஆதி. 16:12) பெற்றெடுத்தாள்; அவனுடைய எதிர்காலமும், எதிராகக் குடியிருப்பான் என்றே எழுதப்பட்டிருக்கின்றது. அடைப்பை பிடுங்கி ஆண்டவருக்கு விரோதமான சந்ததியை நாம் உருவாக்கிவிடக்கூடாது. 

இந்த நாட்களிலும், 'ஆகார், பில்காள்' போன்ற வேதம் உரைக்கும் வேலைக்காரிகள், 'வாடகைத் தாய்' (SURROGACY) என்ற பெயரில் மருத்துவ உலகில் வலம் வருகின்றன. பல்வேறு தேசங்களின் சட்டங்களும் அதற்கு இந்நாட்களில் சம்மதம் தெரிவித்துவருகின்றன. மனவியின் சரீரமாகிய கதவு கர்த்தரால் அடைக்கப்பட்டிருக்கும்போது, மனைவியின் கருவில் வளரவேண்டிய கணவனின் வித்தை, மருத்துவத்தின் மூலமாக மற்றொரு பெண்ணின் கருவில் செலுத்தி, வளரச்செய்து, சிசுவாக்கி, குழந்தையாக அவர்களைப் பெற்றெடுக்கச் செய்வது (வாடகைத்தாய்) சத்தியத்திற்கு எதிரானதே. அவ்வாறே, கணவனின் சரீரமாகிய கதவு அடைக்கப்பட்டிருக்கும்போது, மற்றொரு ஆணின் வித்தை மருத்துவத்தின் மூலமாக மனைவியின் கருவில் செலுத்தி, வளரச் செய்து, சிசுவாக்கி, குழந்தையாக அவர்களைப் பெற்றெடுக்கச் செய்வதும் (வாடகைத் தகப்பன்) சத்தியத்திற்கு எதிரானதே. கருவில் வளரும் பிள்ளைக்கு பெற்றெடுத்தவள் 'வாடகைத் தாய்' என்றால், கணவனுக்கு 'வாடகை மனைவிதானே'. அவ்வாறே, கருவில் வளரும் குழந்தைக்கு வித்து கொடுத்தவன் 'வாடகைத் தகப்பன்' என்றால், அந்த கருவைச் சுமந்துகொண்டிருக்கும் பெண்ணுக்கும் அவன் 'வாடகை கணவன்தானே'. சரீரத்திற்கும், சரீரத்திற்கும் எவ்வித தொடுதலுமில்லை, சம்மந்தமுமில்லை என்றாலும், கணவனால் அடைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் வேலிக்கு உள்ளே வேறொருவனுடைய வித்து வந்து விழுந்துவிட்டாலே அது வேதத்திற்கு விரோதமானதுதானே. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று (மத். 5:28) என்பதே இயேசு கிறிஸ்துவின் போதனையாயிருக்குமென்றால், வித்தே வந்து விழுந்துவிட்டால் அது பரத்திற்கு முன் எத்தனை பெரிய குற்றமாயிருக்கும். மருத்துவம் என்னும் ஏணியில் ஏறி நின்றுகொண்டு, இடைத்தரகர்களைப்போல செயல்பட்டு, இறைவனுக்கு எதிராக ஜனங்களை ஈர்க்கும் மருத்துவர்களுக்கு நாம் எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம். குழந்தையினைத் தத்தெடுத்துக்கொள்வது தவறல்ல; ஆனால், அதைப் பெற்றெடுக்கத்தான் வேண்டும் என்ற விருப்பத்தின் பெருக்கத்தினால், நாம் ஆபத்தில் விழுந்துவிடக்கூடாது. 

கணவன் என்ற ஆணின் அனுமதி ஒருவேளை அதற்குக் கிடைத்திருந்தாலும், ஆண்டவரின் அனுமதியோ அதற்கு இல்லையே. என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய் (உன் 4:12) என்பதல்லவோ வேதம் கூறும் சத்தியம். நம்முடைய வீடு கட்டப்படவேண்டும் என்பதற்காக, தேவனுக்கு விரோதமான செயல்களில் ஈடுபது நியாயமாகிவிடாது. மனைவியோடு நின்றால் அது மருத்துவம்; மற்றவளை மனைவியாக்கிவிடாமல் நிறுத்தவும் என்பதே வேதம் போதிக்கும் முறை. சரீரம் செத்துப்போயிருந்தாலும், ஆபிரகாமுக்கும் சாராளுக்குமே ஈசாக்கை கொடுக்க விரும்புபவர் அவர். அந்த குமாரனிடத்திலேயே தனது வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற விரும்புபவர் அவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 

இத்தகைய விஞ்ஞான முறையினால், இன்றைய நாட்களில், திருமணம் முடிக்காமலேயே தனியொரு மனிதனாக வித்தை மாத்திரம் மருத்துவமனையில் கொடுத்துவிட்டு, வாடகைத் தாயின் மூலமாக குழந்தையினைப் பெற்றெடுத்துக்கொள்ளும் மனிதர்களும் பெருகிவருகின்றனரே. பிறந்த குழந்தையை மருத்துவமனை அந்த ஆணினிடத்தில் ஒப்படைக்கும்போது, 'அம்மா' என்று அந்த குழந்தை யாரை அழைக்கும்? எத்தனை கொடூரமான செயலிது? சில நாடுகளில் இத்தகைய மருத்துவ முறை தடைசெய்யப்பட்டிருப்பதினால், அத்தகைய மருத்துவத்திற்கு தடையில்லாத நாடுகளுக்குச் சென்று குழந்தையைப் பெற்றுக்கொண்டு தாய்நாடு திரும்புவதை 'FERTILITY TOURISM' என்றும் அழகாக அழைக்கத்தொடங்கிவிட்டது உலகம்.  




Comments

Popular posts from this blog

'பஸ்காவின் பலி'

  www.sinegithan.in யூதர்களது சந்திர நாட்காட்டியின்படி, ஒரு நாள், சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் தொடங்கி, மறுநாள் சூரியன் அஸ்தமிக்கும் சாயங்காலத்தில் முடிவடைகின்றது.  ' சாயங்காலமும் விடியற்காலமுமாகி , முதலாம் நாள் ஆயிற்று' (ஆதி 1:5,8,13,19,23,31) என்று ஆதியாகமத்திலும் இதனை நாம் வாசிக்கின்றோமே. 'சாயங்கால வேளை' என்பது ஒரு நாளின் தொடக்கம் என்பதினாலேயே, ஆண்டவருடைய பிரசன்னத்தில் அந்த நாளை தொடங்க, ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்தான் (ஆதி. 24:63) என்றும் வேதத்தில் வாசிக்கின்றோமே. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையிலும் இந்த பழக்கம் இருந்ததனை நாம் வேதத்தில்  காணமுடியும்.  அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத். 14:23) என்று கூறுகின்றது வேதம்.      சாயங்காலத்தில் வேண்டுதல் செய்யும் வழக்கம் ஆபிரகாமின் ஊழியக்காரனது வாழ்க்கையில் இருந்ததினாலேயே, ஈசாக்கிற்கு பெண் பார்க்கச் சென்றுகொண்டிருந்த நேரத்திலும், 'சாயங்காலமாகிவிட்டது' என்பதை உணர்ந்த அவன், வேண்டுதல் செய்யத் தொடங

விவாகம், விவாகரத்து வேதம் சொல்லுவது என்ன?

விவாகம், விவாகரத்து  வேதம் சொல்லுவது என்ன? www.sinegithan.in விவாகரத்து செய்யலாமா?  யாரை தள்ளிவிட வேதம் அனுமதிக்கின்றது? தள்ளிவிடப்பட்டவரை விவாகம்  செய்யலாமா?  மறுமணம், வேதம் போதிப்பது என்ன?  இன்றைய உலகத்தை ஆனந்தத்திற்குள்ளும், அழுகைக்குள்ளும் இழுத்துச்செல்லும் இரண்டு சொற்கள் இவைகள். உருவாகும்போது 'விவாகம்' என்றும் உருக்குலையும்போது 'விவாகரத்து' என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் உலகம் இவைகளை பிரித்துச் சொல்லி விவரித்தாலும்; வேதத்தின் வெளிச்சத்தில், சத்தியம் என்னும் சட்டத்தின் கீழ் இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள விளக்கத்தை நாம் அறிந்துகொண்டால், தந்திரமாக இவ்வுலகத்தில் கிரியைசெய்துகொண்டிருக்கும் சத்துருவின் அந்தகாரத்திற்குள் நம்முடைய வாழ்க்கையும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.  தேவனும் மனிதனும் அவ்வாறே, மனிதனும் மனிதனும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வதையும், சந்தோஷமாக நடைபோடுவதையும் சற்றாகிலும் விரும்பாதவன் சாத்தான்; தேவனை விட்டு மனிதன் பிரிந்து வாழ்வதை மாத்திரமல்ல, மனிதனை விட்டும் மனிதன் பிரிந்துவாழவேண்டும் என்று பிரிவினையின் சுவராக விரும்புகின்றவன்

பஸ்காவா? ஈஸ்டரா?

சத்தியம் சொல்லும்  சரித்திரம் www.sinegithan.in பஸ்காவா? ஈஸ்டரா?         இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுள் 'யூதாஸ்' என்ற ஒருவனை எப்படியாகிலும் சாத்தான் தன்னகப்படுத்திக்கொண்டு, தான் விரும்பும்  காரியத்தைச் சாதிக்க விழைந்தது போல, இன்றும் சிலரையோ அல்லது சிலவற்றையோ தன்னகப்படுத்தி, தேவ ஜனங்களை திசைமாற்ற நினைக்கின்றான் சத்துரு. சத்தியத்திலிருந்து தேவ ஜனம் சறுக்கி விழுவதுதானே சத்துருவுக்கு சந்தோஷமான செய்தி; அத்தகைய செய்தியையே தினமும் கேட்டு காதுகுளிரவேண்டும் எனக் காத்திருக்கின்றான். இந்த கடைசி காலங்களில், வேகமாகச் செயல்படும் சத்துருவின் விவேகத்தை உணர்ந்துகொள்ளாமல், அவனது வலைக்குள் விழுந்தவர்களாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் மக்களுள் தேவ ஜனங்களில் சிலரும் அடக்கம் என்பது வேதனையான செய்திதான். உண்மையும் உத்தமமுமாய் ஓடிக்கொண்டிருக்கும் கர்த்தருடைய ஊழியர்களின் மத்தியில், கள்ளத் தீர்க்கதரிசிகளையும் மற்றும் கள்ளப் போதகர்களையும் நுழைத்துவிடுகின்றான். 'ஆண்டவருக்கே ஆராதனை' என்ற அடிப்படைச் சத்தியத்தை மறக்கச்செய்து, 'ஜனங்கள் ஆனந்தமாயிருக்கவே ஆராதனை' என்ற நினைவை நோக்கி நடக்கச்செய்க