கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின்போது விருந்தினராகவும், அலங்காரமாகவும் நுழையும் கிறிஸ்மஸ் மரம் குறித்த கேள்வி இன்றும் கிறிஸ்தவர்களிடையே தொற்றிக்கொண்டே நிற்கிறது. இயேசுவின் காலத்திலும், அப்போஸ்தலரின் காலத்திலும், தொடர்ந்து சுவிசேஷத்தை அறிவித்து வந்த சீஷர்களின் காலத்திலும் இல்லாத மரம் திடீரென திசையெங்கும் பரவியது எப்படி?
பசுமை, பரிசு, பகட்டு, பிரகாசம் இவைகளையே பிரதானப்படுத்தி, ஒளியின் வேஷம் தரித்து ஊடுருவி நிற்கும் இதனை அடையாளம் கண்டுகொண்டு அகற்றுவது நம் பொறுப்பே. கிறிஸ்மஸ் மரம் இல்லையேல் கிறிஸ்மஸ் இல்லை எனுமளவிற்கு கிறிஸ்துவின் பிறப்பைக் காட்டிலும் சிறப்பு பெற்றுவரும் இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களாக மாறவேண்டியதும், வியாபாரத்திலும் களைகட்டிவரும் இக்களையினை களைந்து எறிவதும் இன்றைய அவசியம். தெமேத்திரியும் என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப் போல் வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொளிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்ததைப் போல (அப். 19:24), கிறிஸ்மஸ் மரத்தினால் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மற்றொரு கூட்டம் குழந்தை, மரியாள், தேவ தூதர்கள், மாட்டுத் தொழுவம், சாஸ்திரிகள், மேய்ப்பர்கள் போன்ற சிற்பங்களைச் செய்து அவைகளை ஜோடித்து, அலங்காரமான வண்ணமயமான விளக்குகளின் வெளிச்சத்தில் வைத்து இருளின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்தத் தொழிலினால் 'நல்ல பிழைப்பு' உண்டாயிருக்கிறது என்பதினாலேயே (அப். 19:25) 'தியானாளே பெரியவள்' என்று அவர்கள் சத்தமிடுவதற்கான (அப். 19:28) காரணம். பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் (யோவா 2:16) என்பது இயேசுவின் போதனை, கோவில்களையே செய்து வியாபாரமாக்கிவிடுவது பிசாசின் போதனை. இத்தகைய வழக்கத்தினை இன்றும் பிற மதத்தினரிடம் வாகனங்களிலும், வீடுகளிலும் நாம் காணமுடிகிறதல்லவா. எத்தனையோ பேருடைய தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதற்காக சத்தியத்திற்கு எதிராகச் சத்தமிடுவோர் சத்துருவின் கூட்டத்தில் உள்ளவர்களே. சத்தியம் முடக்கப்படவேண்டும் என்பதற்காக சத்துரு அநேகரை அத்தொழிலில் முதலீடு செய்யப்பண்ணுகிறான்; என்றாலும், அவைகளின் ஒன்றும் இயேசுவுக்கு ஈடாகிவிடாது. இயேசுவின் பிறப்பு சுவிசேஷமாகச் சொல்லப்படவேண்டும்; அதைத் தடுக்கும் சத்துருவின் திட்டங்கள் வெல்லப்படவேண்டும், வேஷமானவைகளினின்று நாம் வெளியேறவேண்டும். புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் (எரே 10:2) என்பதே கர்த்தரால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரதான சட்டம்; இச்சட்டம் நியாயத்தீர்ப்பில் நம்மை கைதியாக்கிவிடக்கூடும்.
பலத்த வேட்டைக்காரனாயிருந்த நிம்ரோத் (ஆதி. 10:9) காட்டில் மரித்தபோது, அவனது தாயும் மற்றும் மனைவியுமான சிமிராமிஸ், அவனை சூரியக் கடவுளாக வழிபடத் தொடங்கினாள்; பின்பு, தவறான உறவினால் தம்மூசு என்ற மகனைப் பெற்றெடுத்தபோது, நிம்ரோத் மீண்டும் தனது வயிற்றில் பிறந்திருக்கிறான் என அறிவித்தாள். மேலும், காட்டில் வெட்டப்பட்டிருந்த ஓர் அடிமரம் திடீரென துளிர்விட்டு வளர்ந்தது என்றும், நிம்ரோத் மீண்டும் பிறந்த நாளில் அந்த மரத்தில் பரிசுப் பொருட்களை வைத்துச் செல்கிறான் என்றும் பாபிலோன் எங்கும் கூறி அறிவித்தாள்; காட்டிலுள்ள பச்சையான மரக்கிளைகளை வெட்டி, பொன்னினாலும், வெள்ளியினாலும், அலங்காரப் பொருட்களினாலும் அதனை அலங்கரித்து ஜனங்களை வணங்கும்படிச் செய்தாள். மரத்தில் பரிசுப் பொருட்களை வைத்து, பின்னர் அதிலிருந்து எடுத்து மக்களுக்குக் கொடுப்பதை, நிம்ரோத் ஜனங்களுக்குப் பரிசு கொடுப்பதாக நினைக்கும் வழக்கம் பாபிலோனில் உருவானது. சூரியக் கடவுளாகக் கருதப்பட்ட நிம்ரோத், தம்மூசாக பிறந்திருக்கிறான் என்று கருதப்பட்ட தினத்தை நினைவுபடுத்துவதற்காவே பாபிலோனியர் மரக்கிளையினை அலங்கரித்து அதனை வணங்கிவந்தனர்.
இந்த பாபிலோனிய வழக்கத்தினைத் தொடர்ந்து, கிரேக்கர்கள் ஓக் (ழயம) மரத்தை புனிதமாகவும், டிரூயிட்ஸ் (Druids) மக்கள் அதனை தெய்வமாகவும், ரோமர்கள் தேவதாரு மரத்தை (fir) தங்களது பிரதான கடவுளான 'ஜுபிடருடையதாகவும்' வணங்கிவந்தனர். இதனாலேயே, பர்னபாவை 'யூப்பித்தராக' (in latin - Iuppiter) வணங்க முற்படுகின்றனர் (அப். 14:12). எகிப்தியருக்கு ஈச்சமரமும், பெர்சியர்களுக்கு யல்டா மரமும் வணக்கத்துக்குரியதாயிற்று. மரங்களை வணங்கும் வழக்கம் புறஜாதிகளுடையது. போதிமரம், ஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம் என பல்வேறு மரங்களை இன்றும் ஜனங்கள் வணங்கிவருவதும், மரங்களின் அருகிலேயே கோவில்களைக் கட்டிவருவதும், மரக்கிளைகளில் தொட்டில்களைக் கட்டிவிடுவதும் பாபிலோனிய வணக்கத்தின் தொடர்ச்சியே.
இதனையே 'காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரிக்கிறார்கள்' (எரே 10:2-5) என்று எரேமியாவும், பச்சையான சகல விருட்சங்களின்கீழும் (எசே 6:13) என்று எசேக்கியேலும், 'பச்சையான மரத்தின் கீழே' (ஏசா. 57:5) என்று ஏசாயாவும் மற்றும், உபா 12:2, 1இரா 14:23, 2இரா 16:4, 2இரா 17:10, 2நாளா 28:4, எரே 2:20, எசே 20:47 போன்ற வசனங்களும் தெளிவாக நமக்கு எடுத்துச் சொல்லுகின்றன.
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும் (ஏசா 11:1) என்ற தீர்க்கதரிசனம், 'கிளையினக் குறித்ததல்ல' மாறாக 'கிறிஸ்துவைக் குறித்தது.' நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள் (யோவான் 15:5) என்றும், கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன் (சக 3:8) என்றும், அவருடைய நாமம் கிளை என்னப்படும் (சக. 6:12) என்றும் இயேசுவைக் குறித்து வாசிக்கிறோமே. கிளையாகிய இயேசுவை விட்டுவிட்டு களையாகிய தன் பக்கம் ஜனங்களைத் திருப்பிக்கொள்ள சத்துரு செய்யும் முயற்சியே கிறிஸ்மஸ் மரம். இயேசுவின் மரணத்தின்போது, அவரை விட்டுவிட்டு ரோமர்களுடைய சிலுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும், இயேசு பிறப்பினை நினைவுகூரும்போது, 'கிறிஸ்துவுக்கு' முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு 'கிளைக்கு' முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கும் ஜனங்களை சாத்தான் வஞ்சித்துவிட்டான் என்பதே உண்மை. ‘O Christmas Tree, O Christmas tree, How lovely are your branches! You are the tree most loved! Your beauty green will teach me’ என்ற பாடல் வரிகள் கிறிஸ்மஸ் மரத்திற்குத்தானே வணக்கத்தைக் கொண்டு சேர்க்கிறது. பண்டிகையின்போது நாம் திறந்துவிடும் வாசலின் வழியாக பிசாசு நுழைந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடனிருப்போம்.
கொண்டாட்டம் என்ற பெயரில் கண்டதையும் செய்துவிட வேதம் அனுமதிப்பதில்லை. மனதின் ஆசைகளை பூர்த்திசெய்ய திகட ;டும் அளவிற்குக் கொண்டாடிவிடவேண்டும் என்று நினைப்பவர்களிடம் திருட்டுத்தனமாக சத்துரு நுழைந்துவிடுகிறான். சந்தோஷமே முதலிடம் பெறுவதினால், சத்தியமோ பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகின்றது. கன்றுக்குட்டியை வைத்துக்கொண்டு, கர்த்தருக்குப் பண்டிகை (யாத். 32:5) என்று நாம் சொல்லிவிடக்கூடாது. 'கர்த்தருக்குப் பண்டிகை' என்ற பெயர் இருந்தால் மாத்திரம் போதாது, 'கன்றுகுட்டி' அப்புறப்படுத்தப்படவேண்டுமே. 'கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன்' (1சாமு. 15:13) என்று சவுல் சொன்னபோதிலும், 'என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன?' (1சாமு. 15:14) என்ற கேள்வி சவுலினிடத்தில் கேட்கப்பட்டதே. ஏன்? என்ற அறிவில்லாமல் நாம் செய்யும் காரியங்கள் வீண் என்று கர்த்தரால் அளக்கப்படும்.
நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன் (வெளி 2:15,16) என்று சத்தியத்துடன் சந்திக்கவிருக்கும் போரையும் நினைவுபடுத்துகிறாரே. ரோமர்களுடைய வழிபாட்டு முறைகளை கிறிஸ்தவர்களுடய ஆராதனையுடன் கலந்துவிட்டதே நிக்கொலாய் மதத்தினருடைய போதனை. இப்படிப்பட்டவைகளை அடையாளம் கண்டுகொண்டு அகற்றாதவர்கள், கர்த்தருக்கு எதிரிகளே. பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள் (சக 2:7) என்று விடுக்கப்படும் எச்சரிப்புக்கு செவிகொடுக்கவேண்டியது நம் கடமை. நிம்ரோத்தையும், சூரிய வணக்கத்தையும் நினைவுகூருவதற்காக பாபிலோனியர்கள் உருவாக்கிய மரக்கிளை கலாச்சாரத்தின் வழியில் வந்த கிறிஸ்மஸ் மரம் ஓர் விக்கிரகமே.
Comments
Post a Comment