விஞ்ஞானத்தின் வளர்ச்சியினை அழிவிற்கான ஆயுதங்களாக உபயோகப்படுத்தி தங்களைத் தாங்களே அழித்துக்கொள்வது தற்கால மனிதர்களிடத்தில் காணப்படும் தவிர்க்கமுடியாத குணம். ஆக்கத்திற்காக உபயோகப்படுத்தப்படவேண்டிய அணுசக்தியை அழிவிற்காக கையில் வைத்திருக்கின்றன பல நாடுகள். ஏன் கண்டுபிடிக்கப்பட்டது? எப்படி உபயோகப்படுத்தவேண்டும்? எதற்காக உபயோகப்படுத்தப்படவேண்டும்? என்ற பிரதான கேள்விகளை பின்னுக்குத் தள்ளிவிட்டதே அதற்குக் காரணம். அவ்வாறே, மனிதர்களின் மனத்திரையினைக் கறையாக்க சத்துரு பல திரைகளை உபயோகப்படுத்துகின்றான். திரையரங்குகளோ, தொலைக்காட்சிகளோ, இன்டெர்நெட்டோ, செல்போன்களோ அனைத்தும் மனிதர்களுக்கு பயன்தரக்கூடியவைகளே. எனினும், அதன் பயன்பாட்டிலிருந்து பாதை மாறும்போதோ பயனற்றவைகளாக மாறிவிடுகின்றன. சினிமா என்ற அரங்கத்திலிருந்த மனிதர்களை, தொலைக்காட்சி என்ற வீட்டிற்குள்ளும் இன்டெர்நெட் என்ற குட்டி அறைக்குள்ளும் சுருக்கி, செல்போன் என்ற கையடக்கக் கருவிக்குள் அடக்கிவிட்டது இன்றைய விஞ்ஞான உலகு.
வர்த்தக ரீதியாகத் தயாரிக்கப்படும் இன்றைய சினிமாக்கள், ஜனங்களைக் கவர்ந்திழுக்கும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. விரசங்களை விலக்கிவிட்டால் தங்கள் தயாரிப்புகள் விலைபோகாது என்பதை அறிந்த வர்த்தகர்களே இன்றைய தயாரிப்பாளர்கள். ஆபாசக் காட்சிகளைக் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று தொலைக்காட்சி நேர்முகப் பேட்டியில் இயக்குநர் ஒருவரிடம் கேட்கப்பட்டபோது, 'அது, சோற்றுடன் நாய்க்குக் கொடுக்கப்படும் குட்டி எலும்பைப் போன்றதே' என்று சாதுரியமாகப் பதிலளித்தார். 'செத்த ஈக்கள் தைலைக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக்கெட்டுப்போகப்பண்ணும்' (பிர. 10:1) என்கிறதே வேதம்; அப்படியிருக்க, எலும்பைக் குறித்து மட்டும் ஏன் பேசிக்கொண்டேயிருக்கிறீர்கள், சோற்றைக் குறித்துப் பேசுங்கள்; என்று சொல்லுவது அறிவில்லாத அறிவுரையே. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று (மத் 5:28) என்று போதித்தார் இயேசு. காதலையே மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் உன் நெஞ்சில் காமத்தையே தூண்டிவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? (யோபு 31:1) என்ற கேள்வியுடன் தன்னைக் காத்துக்கொண்டான் யோபு. ஒருபுறம் விபச்சாரத்தை விரும்பும் கூட்டம், மற்றொருபுறம் வன்முறையை (சண்டைக் காட்சிகளை) விரும்பும் கூட்டம்; இந்த இரு பெருங் கூட்டத்தினரை தன்பக்கம் இழுத்து பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறது இன்றைய சினிமாத் துறை.
மற்றொருபுறம், 'சினிமா பார்க்கிறது தவறு' என்று அடித்துப்பேசுபவர்களும், திரையரங்குகளுக்குப் போகாததவர்களுமான கிறிஸ்தவர்களின் கூட்டத்தில் ஒருபகுதியினர், அறைவீட்டில் அமர்ந்து தொலைக்காட்சித் திரையில் தொடர்களைப் பார்த்துக்கொண்டிருப்பது தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நேரம், கவனம், உணர்வு என உங்களுடைய அத்தனையையும் உங்களிடமிருந்து திருடிக்கொள்ள சத்துரு செய்யும் சதி இது. இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது (மத் 6:24). இந்த நிலைதான் சினிமாவுக்கும், தொலைக்காட்சித் தொடர்களுக்கும் அடிமையானோர் வாழ்க்கையில் உண்டாகும். உன் சரீரத்தின் பெலவீனத்தை நோக்கி வீசப்படும் அம்புகளாகவே சினிமாவின் காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. உன் பெலவினங்களை அவை மேலும் பெரிதாக்கும். ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்ததுண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும் (மத் 9:16). ஒருபுறம் கோடி வஸ்திரத்தையும் (இரட்சிக்கப்பட்ட வஸ்திரத்தையும்) மறுபுறம் பழந்துணியையும் (பழைய வாழ்க்கையையும்) வைத்துக்கொண்டிருந்தால், வாழ்க்கை கிழிந்துபோகும்; அதற்கான காரணத்தை நீங்களே ஏற்கவேண்டியதாகிவிடும். சினிமா உன்னை கறையாக்கும், இயேசுவின் இரத்தம் கறை நீக்கும். ஒவ்வொரு சினிமாக்களும் 'விக்கிரக பூஜைகளுக்குப் பின்பே' ஒவ்வொரு சினிமாக்களும் எடுக்கப்படுகின்றன; என்ற இந்த ஒரு அறிவே திரையரங்கு வாசலுக்குள் செல்லாமல் உன்னைத் தடுத்து நிறுத்தப் போதுமானது.
Comments
Post a Comment