சர்ச்சைக்குள்ளானதைப் போலவே சபைகளுக்குள் தொக்கி நிற்கும் இக்கேள்விக்கு சத்தியத்தின்படி சரியான விடை காணவேண்டியது இச்சந்ததியாரின் கடமை. பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது (சங். 24:1), அவரால் உருவாக்கப்பட்டது என்பது முதலில் நாம் அறிந்துகொள்ளவேண்டியது. உலகத்தை உருவாக்கியதில் சாத்தானின் பங்கு எதுவுமில்லை. என்றாலும், ஆண்டவருடைய சிங்காசனத்திற்கு மேலாக தன்னை உயர்த்தவும், அவருடையவைகளை தன்னுடையவைகளாக்கிக் கொள்ளவும் திட்டமிட்டவன் அவன். கர்த்தர் படைத்த கல், பொன், வெள்ளி போன்றவைகளுக்குள் விதவிதமான உருவங்களைப் புகுத்தி வணங்கும்படிச் செய்தான் அவன். மனிதனுடைய தேவைகளுக்காகப் படைக்கப்பட்டவைகளை தெய்வங்களாக்கினான். கல்லும், மண்ணும், பொன்னும், வெள்ளியும் வணக்கத்தினாலேயே விக்கிரகங்களாகின்றன. படைப்பைப் பாழ்படுத்த பிசாசு கையிலெடுத்த ஓர் ஆயுதம் விக்கிரக வணக்கம். தேவன் நல்லதென்று கண்டவைகளுக்குள் நாக்கை நுழைத்து ருசிக்க விரும்பியவன் சாத்தான்.
எகிப்திலிருந்து தன் ஜனத்தை புறப்படப்பண்ணினபோது, 'ஒவ்வொரு ஸ்திரீயும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள்' என்றார் கர்த்தர் (யாத் 3:22). எகிப்தில் அவர்கள் ஒடுக்கப்பட்டார்களே, கொடுமையாய் வேலைவாங்கப்பட்டார்களே, கொடுமையாய் நடத்தப்பட்டார்களே (யாத். 1:11,13,14); உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை (யாத் 5:10) என்று சொன்ன எகிப்தியர்கள், அவர்களுக்குப் போதிய உணவையும், ஊதியத்தையும் கொடுத்திருப்பார்களோ? எகிப்தில் அவர்கள் பட்ட பாடுகளுக்கும், அடிமைத்தனத்திற்கும் ஏற்ற பலனாகவே அவைகளை கர்த்தர் அள்ளிக் கொடுத்தாரோ! இதைத்தான், காதுகளில் காதணியுடனும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்துடனும், பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய் என்றும் ஆண்டவர் நினைத்துப் பார்க்கின்றாரோ. (எசே. 16:13,14)
எகிப்திலிருந்து தேவன் எடுத்துக்கொடுத்தவைகளை, எப்படியாகிலும் திரும்ப எடுத்துக் கெடுத்துவிடவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தான் சாத்தான். இளைப்படைந்திருந்த நேரத்தில் ஜனங்களை ஏவிவிட்டான், 'நீர் எழுந்து எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை உண்டுபண்ணும்' (யாத். 32:1) என்று ஜனங்கள் சொன்னபோது, ஆரோன் அவர்களை நோக்கி, 'உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள்' என்றான் (யாத் 32:2). அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான்; காதுகளிலிருந்ததை கன்றுக்குட்டியாக்கினான். இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று (யாத் 32:4), எகிப்தியருடைய தங்கத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டான் சாத்தான்.
அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு; அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான் (யாத் 32:19,20). எகிப்திலிருந்து வாங்கப்பட்டவைகள் எரிக்கப்பட்டுப்போயிற்று; இது சத்துருவின் சதியல்லவா. எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளிவிட்டான். ஆண்டவர் அணிவித்தார்; சாத்தான் அழித்துவிட்டான். இஸ்ரவேலரிடமிருந்து ஆபரணங்களை சாத்தான் அழித்ததின் ரகசியம் இதுவே. ஆபரணங்களை அணிந்துகொண்டதின் நிமித்தம் அல்ல, அவைகளை கன்றுக்குட்டியாக்கினதின் நிமித்தமே கர்த்தர் அவர்களை உபாதித்தார் (யாத். 32:35).
ஆபரணங்களுடன் சென்றுகொண்டிருந்த இஸ்ரவேல் மக்களைப் பார்வோன் பின்தொடர்ந்தபோது, சமுத்திரத்தின் ஜலத்தினைப் பிளந்து பிரிந்துபோகச் செய்து, வெட்டாந்தரையிலே அவர்களை நடந்துபோகச் செய்தார் (யாத். 14:21,22). இதனையே பவுல், இப்படியிருக்க சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் (1கொரி 10:1,2) என்று குறிப்பிடுகின்றார்; அப்படியென்றால், இஸ்ரவேல் மக்கள் தாங்கள் அணிந்துகொண்டிருந்த ஆபரணங்களோடும், அணிகலன்களோடும்தான் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லையே. கல்லை, இரும்பை, பொன்னை, வெள்ளியை உபயோகிக்கலாம்; ஆனால், வணங்கக்கூடாது. வணக்கத்தை மாற்றினால் அது வீசியெறியப்பட வேண்டியது.
மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக் கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார் (ஏசா 61:10) என்றும், ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள் (எரே 2:32) என்றும் சொல்லப்படுகிறதே. 'ஒப்பாக' என்பது 'தப்பாக' அர்த்தப்படுத்தப்படவில்லை. ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான் (ஆதி 13:2) என்று வாசிக்கிறோமே. நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம் (யாத் 20:23) என்பதே அவர் ஆணை.
ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, சத்துருவின் நகரம் அழுது துக்கிக்கும்போது (வெளி 18:16), தெளிவுள்ள பளிங்கு போல சுத்தப் பொன்னாயிருக்கிற வீதியிலே (வெளி. 21:21) நாம் உலாவிக்கொண்டிருப்போம் என்பதே பரலோகமாகிய கானானுக்குள் நாம் நுழையும்போது காத்திருக்கும் செய்தி. அவருடைய பிள்ளைகள் பரலோகத்தில் இந்த உன்னத நிலையினை அடையும்போது, பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களை விட்டு அநேகர் மனந்திரும்பவுமில்லையே (வெளி 9:20) என்பதையும் வேதம் கூறத் தவறவில்லை.
தங்கம் ஓர் விக்கிரகம் என்றும், அதை அணிவது தவறு என்றும் நினைப்பவர்கள் தங்களிடமிருப்பவைகளை விற்கத்தானே செய்கிறார்கள், வீதியில் வீசிவிடுவதில்லையே. மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன்விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான் (ஏசா 2:21) என்றல்லவோ வாசிக்கிறோம். தங்கத்தையே விக்கிரகம் என்ற வார்த்தைக்குள் அடக்கி வாசிக்கும் மக்கள், தங்கத் தரை பதித்த பரலோகத்திலும் கால் பதிக்கத் தயங்கிவிடக்கூடாது. 'தங்கக் கிரீடம் தலையில் அணியலாம், சிங்காசனத்தின் முன்னே ஜெயகீதம் பாடலாம்' என்பதற்கான முன்னோட்டமாக எச்சரிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்ளுவோம்.
தேவனுடைய பிள்ளைகள் தங்கத்தை ஆபரணமாக அணிவது தவறல்ல, அதை விக்கிரகமாக்கிக்கொள்ளாமலும், தேவைக்கு மேல் அணிந்து தேவதை போல காட்சி தராமலும் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய் (நீதி 25:16) என்று சாலமோன் சொன்னதைப் போல, மிதமிஞ்சிய ஆசைகொண்டால் அவருடைய வாயிலிருந்து வாந்திபண்ணப்படுவோம். சீயோன் குமாரத்திகளைப் போல அகந்தையாயிருந்து, ஆபரணங்களைத் தரித்தால் ஆபத்துதான் என்பது வேதம் சொல்லும் ஓர் எச்சரிப்பின் செய்தி (ஏசாயா 3:16-23). சரீரத்தில் அணிந்துகொண்டுவந்தவர்கள், சமுத்திரத்தைத் தாண்டிவிட்டாலும், ஆண்டவரை அறிந்துகொள்ளாத தினால், தங்கள் ஆத்துமாக்களைக் குறித்து கவனம் கொள்ளாததி னால் கானானுக்கு முன் சடலங்களாகிப்போனார்களே. ஆத்துமாவை விட்டுவிட்டு, அவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு விடக்கூடாது என்பதே பவுல் தீமோத்தேயுவுக்கு கூறும் ஆலோசனை (1தீமோ. 2:9,10), பேதுரு எழுதுவதும் அதுவே (1பேதுரு 3:3). நகைகளை அள்ளிப் போட்டுக்கொண்டு, கர்த்தருக்கு வாழ்க்கையில் இடம் கொடுக்காமல், பாவமன்னிப்பையும் இரட்சிப்பையும் குறித்து கசரிசனைகொள்ளாமல் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாய் வலம் வருபவர்களை தங்கக் கன்றுக்குட்டிகளாகவே சாத்தான் மாற்றிவைத்திருக் கிறான் என்பதில் சந்தேகமில்லை.
Comments
Post a Comment