கிறிஸ்துவும் சிலுவையும் இன்றைய கிறிஸ்தவத்தில் ஒரே காகிதத்தின் இரண்டு பக்கங்கங்கள். சிலுவை இல்லாமல் கிறிஸ்து இல்லை, கிறிஸ்து இல்லாமல் சிலுவை இல்லை என்னுமளவிற்கு சிலுவையையும் கிறிஸ்துவையும் ஒன்றித்து வைத்திருக்கிறது கிறிஸ்தவ உலகம். என்றாலும், சிலுவைக்கு இத்தனை மதிப்பு கொடுக்கப்படவேண்டியது அவசியமா? அதை அணியலாமா? வணங்கலாமா? சின்னமாகப் பயன்படுத்தலாமா? என்ற கேள்விகளை முன்வைத்தால், அது கிறிஸ்தவத்தையே புரட்டிப்போட்டுவிடுவதைப் போல பலருக்குப் பயமூட்டலாம்; என்றாலும், சத்தியத்தை அறிந்துகொள்வது நம்மை சரியான வழியில் நடத்தும். நாம் வலதுபுறமும் இடதுபுறமும் சாய அழைக்கப்பட்டவர்களல்ல. பாரம்பரியங்களாக கிறிஸ்தவர்களிடையே நுழைந்துவிட்ட பல காரியங்கள், இன்றோ கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவர்களையும் பலமாக ஆண்டுகொண்டிருக்கின்றன.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்ட பின்பு, அவர் உயிரோடு எழுந்ததை அறியாதவர்களாய், கல்லறையில் இயேசுவின் சரீரத்தைப் பார்க்கவந்த ஸ்திரீகள் அதைக் காணாமல் கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று, அவர்களை நோக்கி: 'உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்' (லூக். 24:5,6) என்று சொன்னபோது, அந்த ஸ்திரீகள் கல்லறையை விட்டுத் திரும்பிப் போனார்கள் (லூக். 24:9).
இயேசு உயிரோடெழுந்து பரத்திற்கு எழுத்துக்கொள்ளப்பட்டபோது, அந்த சம்பவத்தை நேரில் பார்த்த சீஷர்கள் அந்த இடத்திலேயே அப்படியே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்;கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வு நாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள் (அப். 1:11,12).
இயேசு மறுரூபமானபோது, அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள் (மத் 17:3) இந்த நிகழ்வினைக் கண்டதும் பூ10ரித்துப்போன பேதுரு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும்,மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான் (மத் 17:4). பேதுரு இப்படிப் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள் (மத் 17:5,6). அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை (மத் 17:8). மோசே மற்றும் எலியாவோடு கூட இருந்துவிடவேண்டும் என்று நினைத்த பேதுருவை, தேவன் பிரித்துவிட்டார்; அங்கிருந்து அவர்கள் திரும்பிப் போனார்கள்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் (மத் 27:57,58). இயேசுவின் சரீரத்தை மட்டும் எடுத்துக்கொண்டுவந்தான் யோசேப்பு; சிலுவையோ கல்வாரியிலேயே காலியாக விடப்பட்டிருந்தது. கல்லறை காலியாக இருந்தபோது, திரும்பி வந்தவர்கள், இயேசு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது திரும்பி வந்தவர்கள், கல்வாரியில் காலியான சிலுவையிலிருந்து திரும்பாமலிருப்பது ஏனோ? காலியான சிலுவையிலேயே காத்துக்கிடக்கும் மனிதர்களை சத்தியத்தின் வெளிச்சம் திசை திருப்பட்டும்.
'சிலுவை' என்பது அந்நிய தேவர்களின் சின்னம். 'Christian symbol was taken directly from the pagans' என்றே ஆராய்ச்சியாளர்கள் சிலுவையைக் குறித்து எழுதுகின்றனர். அது பாபிலோனியர்கள் வணங்கிய அந்நிய தெய்வத்தின் அடையாளம். அவர்களது தெய்வமான தம்மூசின் சின்னத்திற்கு ஒப்பானது. பாபிலோனிலிருந்தே இச்சின்னம் உலகமெங்கும் பரவியது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாகவே அந்நிய தேவர்களை வணங்கியவர்கள் இச்சிலுவைச் சின்னத்தைப் பயன்படுத்திவந்தனர். கிரேக்கர்களின் கடவுளான தியானாளின் உருவப் படத்தின் தலைப் பகுதியில் சிலுவை அடையாளக் குறி வரையப்பட்டிருந்தது. இயற்கையை வணங்கியவர்களும், எகிப்து மக்களும், அந்நிய தேவர்களை வணங்கியவர்ளுமே சிலுவையினை அடையாளமாகப் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில், குற்றம் புரிந்தோர்க்குத் தண்டனை கொடுப்பதற்காக சிலுவை பயன்படுத்தப்பட்டது. இந்தச் சிலுவையிலேயே குற்றமில்லாத இயேசு ஆணிகளால் அடிக்கப்பட்டார். அந்நிய தேவர்களின் அடையாளச் சின்னமான சிலுவையின் மேல் ஆண்டவரை அறைந்து அவமானப்படுத்தினார்கள் ஜனங்கள்.
இயேசுவின் சிலுவை மரணமும், உயிர்த்தெழுதலும் சுவிசேஷமாக உலகமெங்கும் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது அநேகர் இயேசுவை விசுவாசித்தனர். கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின் சுமார் 400 ஆண்டுகள் வரை கிறிஸ்தவர்கள் தங்கள் ஆராதனைகளில் சிலுவைச் சின்னத்தைப் பயன்படுத்தியதாகச் சரித்திரக் குறிப்புகள் இல்லை. எனினும், இயற்கையையும் மற்றும் அந்நிய கடவுள்களையும் வணங்கிக்கொண்டிருந்த கான்ஸ்டன்டைன் என்ற அரசன் தான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக அறிவித்தபோது, சிலுவையை தன் தரிசனத்தில் கண்டதாகவும் சொல்லி, சிலுவைச் சின்னத்தைப் பிரபலமாக்கினான். அன்று முதல் அது கிறிஸ்தவர்களிடையே பிரபலமானது. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் (2கொரி 6:14-17) என்பதல்லவோ வேதம் கற்றுத்தரும் முறை.
இயேசு பிரதானமாக இருக்கவேண்டிய இடத்தில், சிலுவை பிரதான இடத்தைப் பிடித்துவிட்டது. வீட்டின் மேல் சிலுவை, ஆபரணங்களில் சிலுவை, அறையினுள்ளே சிலுவை, ஆசீர்வதிப்பதில் சிலுவை என சிலுவைக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுவிட்டது. இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் கொலை செய்வதற்கு கொலையாளிகள் பயன்படுத்திய சிலுவை அது. கொலைக்கான ஆயுதங்கள் கொலையாளிகளின் வீட்டில் அல்லவோ இருக்கவேண்டும்; ஆனால், நாம் எப்படி அதனை நம்முடைய வீட்டிற்குக் கொண்டுவந்து பிரதானமாக்கிவிட்டோம்? இன்றோ அந்த வெற்றுச் சிலுவையைச் சுற்றிலும் 'ஒளிவட்டத்தினையும்' உருவாக்கி, மரியாதையையும் பறிகொடுத்துவிட்டோம். ஆலயத்தில் அவர் இருக்கவேண்டிய இடத்தில் அதைக் கொண்டு வந்து வைத்துவிட்டோம். சிலுவை இயேசுவை அறைவதற்கு மாத்திரம் பயன்படுத்தப்படவில்லை, சமுதாய குற்றங்களைச் செய்த பலருக்கு தண்டனை கொடுக்க அது பயன்படுத்தப்பட்டது. இன்றோ, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட நாம் சிலுவையை நோக்கிப் பார்க்கவேண்டிய அவசியமில்லை, அதில் அறையப்படவேண்டிய அவசியமும் இல்லை; மாறாக, இயேசுவை மட்டும் நோக்கிப் பார்த்தால் போதுமானது. மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? (மத் 23:17,19) என்பதல்லவோ இயேசுவின் போதனை. 'தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார்' (மத். 12.6); 'யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்' (மத். 12:41). ஆனால், அவர் இப்போது சிலுவையில் இல்லை. பல ஆலயங்களில் சிலுவைக்கு மாலையிடுவதையும் நான் கண்டிருக்கிறேன். அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்
(லூக் 24:6). இயேசுவைக் கொன்ற இடத்திலேயே நாம் நின்றுகொண்டிருக்கவேண்டாம், அவர் சென்ற இடத்திற்கு முன்னேறிச் செல்லுவோம். இயேசு யோவானைக் குறித்து, 'எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்?' என்று கேட்டதுபோல, இன்றும் கேட்கவேண்டிய அவசியம் உண்டாகிவிட்டது. சிலுவையை மட்டும் ஆலயத்தில் பார்த்துவிட்டு, இயேசுவைக் காணாமல் வந்துவிடும் மக்கள் அநேகர்.
இந்த சிலுவையில் இயேசு மரித்தார் என்று அதனைப் புனிதப்படுத்தினால், இந்த யூதாஸ் காட்டிக்கொடுத்ததாலேயே இயேசுவுக்கு மரணம் நேரிட்டது என்று அவனையும் புனிதனாக்கும் நிலைக்கு சத்துரு நம்மைச் சறுக்கச் செய்யும் சந்தர்ப்பம் தூரத்திலில்லை. இயேசுவின் மரணத்திற்குக் காரணமான சிலுவைக்கு நாம் அத்தனை மதிப்பு கொடுப்பது சரியென்றால், இயேசுவின் பிறப்பிற்குக் காரணமான மரியாளுக்கும் இத்தனை மதிப்பு கொடுப்பது சரி என்றுதானே தீர்ப்பு சொல்ல நேரிடும். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன் (1கொரி 13:11) என்ற நிலையில் நாம் வளர்ச்சியடையவேண்டியது அவசியம். அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார் (அப் 17:30).
இயேசுவை தேவாலயத்தின் உப்பரிகையின் மேல் ஏற்றி கொலை செய்ய முயன்றான் சாத்தான் (மத். 4:5); அவனது முயற்சி பலிக்கவில்லை; இன்றோ, அந்நிய தேவர்களின் சின்னமான சிலுவையினை தேவாலயத்தின் உப்பரிகையின் மேல் (கோபுரங்களின் மேல்) ஏற்றிவைத்துவிட்டான். சத்துரு சந்தோஷப்படும்; அளவிற்கு சத்தியத்திலிருந்து சறுக்கிவிட்டோம். சத்துருவினால் நாம் எத்தனையாய் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பது உங்களுக்குப் புலனாகிறதா? சிலுவை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலைக்கு இயேசுவினால் விலை கொடுத்து வாங்கப்பட்ட ஜனங்களை வலைக்குள் சிக்கவைத்திருக்கிறான். ஆலயத்தின் கோபுரத்தில் மாத்திரமல்ல, உட்பகுதியிலும் பிரதானமான இடத்தை சிலுவைக்கே கொடுத்துவிட்டோம். இந்தியாவின் தேசத் தந்தை என்று போற்றப்படும் காந்தியை கோட்சே துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றான். எனினும், கோட்சேவோ அல்லது அவன் சுடுவதற்குப் பயன்படுத்திய துப்பாக்கியோ தேசத்தில் பிரபலமாக்கப்படவில்லை; மாறாக, அரசு அலுவலகங்களிலும், ரூபாய் நோட்டுகளிலும் காந்தியின் உருவமே பிரபலமாக்கப்பட்டிருக்கின்றது. யாராவது தூக்கில் தொங்கினால், தூக்குக் கயிற்றை நாம் வீட்டில் வைப்பதுண்டா? இறந்துபோன மனிதர்களின் புகைப்படத்தைத்தானே வீடுகளில் ஞாபகார்த்தமாக வைத்திருப்போம். உவக நியதியே இப்படியிருக்க, கிறிஸ்தவத்தின் நீதி மட்டும் பிசகிப்போனது எவ்வாறு? இத்தனை ஆண்டுகளாக தொன்றுதொட்டு பழக்கப்படுத்திவிட்ட இச்சின்னத்தை, பிரதானமானமாக மாற்றாதபடி மறுத்துப் பேசுவது அத்தனை சுலபமல்லவே.
உருவம் என்ற ஒன்று தேவப்பட்டதனால், சிலுவை பிரதானமானதாக கிறிஸ்தவர்களிடத்தில் ஊடுருவிவிட்டது, விக்கிரமாகவும் அது பலருக்கு மாறிவிட்டது. சிலுவையில் இயேசு தொங்குவதைப் போன்ற உருவம் காணப்பட்டால் அதனை நாம் சொரூபம் அல்லது விக்கிரகம், அப்படிப்பட்ட வணக்கம் கூடாது என்று சொல்லுகின்றோம். ஆனால், இயேசுவை எடுத்துவிட்டு, சிலுவையை மட்டும் வைத்துக்கொண்டிருப்பது ஏன்? வாதை உண்டானபோது, கர்த்தர் மோசேயை நோக்கி, ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான், சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்துப் பிழைப்பான் (எண்; 21:9) என்றார். எனினும், பிழைத்த ஜனங்கள் பிற்பாடு அதற்குத் தூபங்காட்டத் தொடங்கிவிட்டார்கள்; அது விக்கிரகமாக்கப்பட்டபோதோ, ஓசெயா ராஜா அந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான் (2இராஜா. 18:4). வெண்கல சர்ப்பத்தின் பணி வாதையோடு முடிந்துவிட்டதுபோல, சிலுவை என்பது கிறிஸ்துவின் மரணத்தோடு முடிந்துபோன ஒன்று.
பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களில் தேவன் மூலமாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாகவும் கிறிஸ்துவின் மரணம் பிரதானமாகச் சொல்லப்பட்டதேயன்றி, அவருடைய சிலுவை பிரத்தியேகப்படுத்தப்பட்டு பிரதானமாக்கப்படவில்லை. இயேசு சிலுவையில் மரிக்கும் முன்னதாகவே, 'சிலுவை' என்ற வார்த்தை பாடுகளைக் குறிக்கும் வண்ணமாகவே இயேசுவினாலும், சீஷர்களாலும், அப்போஸ்தலர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டது. சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன் (பிலி 3:17,18) என்று எழுதுகின்றார் பவுல். இதன் பொருள் என்ன? சிலுவைக்குப் பகைஞர் என்று பவுல் அர்த்தப்படுத்துவது, 'கிறிஸ்துவுக்குப் பகைஞர்' என்பதா? அல்லது 'கிறிஸ்து அடிக்கப்பட்ட சிலுவைக்குப் பகைஞர்' என்றா? பவுல் குறிப்பிடுவது 'கிறிஸ்துவின் சிலுவை' அதாவது கிறிஸ்துவின் பாடுகள். சிலுவை கிறிஸ்துவை அவமானப்படுத்தியது (எபி. 6:6, 12:12). சிலுவையை யாராவது அவமதித்தால், கிறிஸ்தவத்தையும், கிறிஸ்துவையுமே அவமதித்துவிட்டதாகக் கருதும் அளவிற்கு அதனை நம்முடையதாக்கிவிட்டோம். அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது (கொலோ. 1:14, எபே. 1:7). நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேது 2:24) என்று எழுதுகிறார் பேதுரு. இயேசுவின் மரணம் சிலுவையில் நிகழ்ந்தாலும், நமது இரட்சிப்பிற்குக் காரணம் இயேசுவே, சிலுவையல்ல.
Comments
Post a Comment